சென்னை, ஜூன் 2- தமிழ்நாட்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் ஏற்படும் மின்தடைகளை உடனுக்குடன் சரிசெய்து, பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காகக் கூடுதல் பணியாளர்களை தற்காலிகமாக நியமிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒப்புதல் வழங்கி யுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மண்டல மற்றும் வட்ட அதிகாரி களுக்கு மின்வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மின் தடையைத் தடுக்க நடவடிக்கை!
கடந்த சில ஆண்டு களாகப் பருவமழை பெய்யும் காலங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய சென்னை புறநகர் பகுதிகள், கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், மின்தடை புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும் மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, பருவமழை தொடங்கு வதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது.
மழையினால் மின் கம்பங்கள் சரிவது, மரக் கிளைகள் முறிந்து விழுவது போன்ற அவசர காலப் பாதிப்புகளை விரைந்து சரிசெய்ய ஏதுவாக, தற்காலிகமாகக் கூடுதல் பணியாளர்களைப் பணியமர்த்திக் கொள்ள அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் வரும் பருவமழைக் காலங்களில் பொது மக்களுக்கு தடையற்ற, சீரான மின் விநியோகம் உறுதி செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
