தமிழ்நாட்டு அரசியலில் ‘திராவிட மாடல்’ ஆட்சியை மாத்திரமல்ல, திராவிட உணர்வு களையும், நூறு ஆண்டுகளுக்கு மேலாக, வேர் ஊன்றிய கொள்கைகளையும், எந்த ஆட்சி அமைந்தாலும் தாண்டிட முடியாது என்பதை முன்பும், இப்போதும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.மூலம் செய்து பார்த்து, தொடர் தோல்வி கண்டுவரும் நிலையில், அதை மீண்டும் புதிய வேகத்துடன் செய்து பார்க்க ‘‘ஆரியம்’’ தனது புதிய கருவிகளாக காங்கிரசின் மூலம் முனைகிறது.
சில மாதங்களுக்கு முன்பிருந்தே இந்த ‘ஆரிய மாயை’ கருக்கொண்டு இப்போது புதிய காட்சியாகி, ஆட்சி அமைத்த ஜோசப் விஜய் அவர்கள் கட்சியிலும் மிக லாவகமாக ஊடுருவி, அதற்கு முன்னோட்டமாக காங்கிரஸ் கட்சியை, தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறச் செய்துள்ளது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சரும், தி.மு.க. கூட்டணித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது ஏற்பட்ட வன்மைக்காகப் பழிதீர்க்க – திராவிடக் கொள்கையை ஒழிக்கும் நோக்கோடு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்படி செயல்பட பசுத்தோல் போர்த்திக்கொண்டு, கூட இருந்தே சில உள்ளடி வேலைகளுக்கு ஆயத்தமாகி, அரசியல் அனுபவம் அதிகம் பெறாத காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவரைத் தமிழ்நாட்டு மக்கள் மதிக்கக் கூடிய நிலையைப் பறிக்கும் வண்ணம், சில வியூகங்கள் வகுக்கப்பட்டதாகத் தெரிகிறது. எல்லாவற்றுக்கும் ‘மாய வரம்’ கிட்டாத புதிய சக்கரவர்த்திகளின் தன்முனைப்பே மூலகாரணம்!
‘ஆரிய மாயை’ ஒரு புதிய கருவியால்
தி.மு.க. கூட்டணியை உடைக்கத் திட்டமிட்டது
அதற்கு ஒரு வாய்ப்பாக, ‘‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில்் பங்கு’’ என்ற தேனைத் தடவி, தனது உள்நோக்கத்தை சாதித்துக் கொள்ள ‘ஆரிய மாயை’ ஒரு புதிய கருவியால் தி.மு.க. கூட்டணியை உடைக்கத் திட்டமிட்டது. காங்கிரஸ் மூத்த, முதிர்ந்த இரு தலைவர்களுக்குத், தி.மு.க. போன்ற திட சித்தமுள்ள ஒரு நட்பு முறியக்கூடாது என்ற புரிந்துணர்வோடு நடைபெற்ற தேர்தலிலும், அந்தத் திட்டத்தைத் தங்களது முயற்சியால் முறியடித்தனர் என்றாலும், அது முழுமை பெறவில்லை, தோல்வியே மிஞ்சியது!
‘ஆரிய மாயை’யின் முக்கிய ஆயுதமே ‘‘பிரித்து ஆளுதல்’’ (Divide & Rule)தான்! அதனால் தலைமையையே வெளியே தெரியாமல், இரண்டு அணிபோல் ஆக்கி, ஒரு பக்கத்தைத் தங்கள் சொந்த லாபத்துடன் இழுத்துக்கொண்டு, கேரள முதலமைச்சர் பதவிக் கனவு கண்ட வர்களையும், புதிய வெளிச்சம் தேடிய அரசியல் விபீடணத்தனமும் ‘ஆரியமாயை’க்குத் துணையாக நின்றன. அது புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கச் செய்ததுதான் பலன் – விளைவு?
தோல்விதான் பரிசாகக் கிடைத்தது!
‘மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகள் விதவையானால் போதும்’ என்ற பழைய மாமியார் கதைதான் நினைவுக்கு வந்தது; (புதுச்சேரி மாநில தேர்தலில்) தங்கள் கட்சியின், கட்டுப்பாடு மீறியவர்களுக்கு இளந்தலைவர் வாழ்த்துக் கூறியும் படுதோல்விதான் பரிசாகக் கிடைத்தது.
புதிய கட்சி ஆட்சி என்றவுடன், ‘நல்ல சமயமடா, இதை நழுவ விடுவோமா?’ என்ற ‘ஆரிய மாயை’ முக்கிய பங்காற்றி, தமிழ்நாட்டிலும், புதுவையிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலத்தை ‘மங்களம்’ பாடிவிட்டது! போகப் போகப் புரியும்.
புரியாத, அனுபவம் பெறாத, முதிர்ச்சியற்றவர்கள் இந்த அரசியல் சூழலைப் பார்த்து தங்களது ‘தொலைநோக்கு’ என்பதைகூட மறந்து, மகிழ்ச்சி கூத்தாடி வருகின்றனர்.
‘எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்!’
தமிழ்நாட்டில் பதவி வேட்டை அரசியல் அவலக் காட்சிகள் அரங்கேறி, இப்படிப்பட்ட ஒரு கீழிறிக்கத்தைத் தமிழ்நாடு முன்பு எப்போதும் கண்டதில்லை என்ற நிலையில், ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்’ என்ற கணக்கு ஆரியத்திற்கு எப்போதும் உண்டு.
இப்போது வரப்போகும் மாநிலங்களவைக்கான தேர்தலில், எப்படியாவது தன்னை அதன் உறுப்பினராக்கிட ஆளுவோரிடம் அப்பளிகேஷன் போடும் முந்தைய ‘மாய–வரம்’ கேட்டவர்களுக்கு நாக்கில் எச்சில் ஏகமாக ஊறி அலைகழிக்கின்றது.
புதிய ஆளுங்கட்சி (த.வெ.க.) என்ன செய்யப் போகிறது என்பதைச் சற்றுப் பொறுத்திருந்து பார்க்கலாம். ‘கத்திரிக்காய் முற்றினால்’ கடைக்குத்தானே வரவேண்டும்.
குறுக்கு வழி ஆலோசனை மூலம் மற்றொரு ‘ஆரிய மாயை’ அலையும் வந்துள்ளது!
மற்றொரு வகை ‘ஆரிய மாயை’, ஆளுங்கட்சியாக வந்து, முதலமைச்சராகி, ஆட்சி நடத்தத் தொடங்கி, நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற முதல் கட்டத்தில் வெற்றி பெற்ற ஆளுங்கட்சிக்கு, ஏதோ பெரிய உதவி செய்வதைப்போல, குதிரை பேரத்தினை மறைக்க குறுக்கு வழி ஆலோசனை மூலம் மற்றொரு ‘ஆரிய மாயை’ அலையும் வந்து சேர்ந்துள்ளது!
காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த வழக்குரைஞர் என்ற ரூபத்தில், வெற்றி பெற்ற 4 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா என்று ஆரம்பித்து, மெதுவாக இந்தப் புதிய ஆதரவைக் கொண்டு, முதலில் ஆதரவு தந்த கட்சிகளை எப்போது வேண்டுமானாலும் கழற்றிவிட ஒரு புதிய வியூகம் என்ற வலை விரிக்கப்பட்டுள்ளது; இதன் ஆரம்பத்தில் ‘அடாணா’ பாடுவதாகத் தோன்றினாலும், முடிவில் ‘முகாரி’ பாடிடும் பரிதாபம் ஏற்படுமே, முதலுக்கே மோசம் ஏற்படும் நிலையும் உருவாகக் கூடுமே என்ற யோசனை சொல்ல, அரசியல் தெளிவுள்ளவர்கள் அங்கே யார் என்ற கேள்விக்கு உரிய விடை கிடைப்பது சந்தேகமே!
(‘தினமலர்’ நாளேட்டின் சென்னை பதிப்பு 27.5.2026 பக்கம் 5 இல் ‘‘அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா பின்னணியில் காங். அபிஷேக் மனு சிங்வி’’ என்ற தலைப்பி்ல் ஒரு செய்தி வெளிவந்துள்ளது – 6 ஆம் பக்கம் காண்க).
அந்தோ தாழ்ந்த ‘தமிழகமே!’
அதன் கீழே, குதிரை பேர விவாதங்கள் எம்.பி.,க்கள் மோதல் என்ற செய்தி! ஒரு கல்லில் பல உடைப்புகள்.
அந்தோ தாழ்ந்த ‘தமிழகமே’ என்ற கேள்விதான் மிச்சம்!
‘ஆரிய மாயை’ எப்படி யாரையெல்லாம் ஆட்டி வைத்து பிரித்துக் கொண்டுள்ளது.
அந்தோ, பரிதாபத்திற்குரிய காங்கிரசும், அதனைப் பிடித்து கரையேற நினைக்கும் அனுபவம் அறியாத புதிய அரசியல்வாதிகளும்!
ஆரிய மாயையில் சிக்கினால் மீளுவது வெகுகாலம் ஆகும் எச்சரிக்கை!
