சென்னை, மே 27- சென்னையில் கஞ்சா விற்பனையைத் தட்டிக் கேட்ட ஒரு குடும்பத்தினர் மீது போதை கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் உயிருக்கு பயந்து குருதிக் காயங்களுடன் காவல் நிலையம் வந்தவர்களை, காவல்துறையினர் கேட்டைப் பூட்டி விரட்டியடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிர்ச்சி யூட்டும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
சென்னை கீழ்ப்பாக்கம், ராணி அண்ணாநகரைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (47). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (23) மற்றும் தனுஷ் (20) ஆகியோருக்கும் இடையே வாகனம் நிறுத்துவதில் நீண்ட நாட்களாகப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. அத்துடன், சஞ்சய் மற்றும் தனுஷ் ஆகியோர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரமேஷ்குமார் தரப்பினர் காவல் நிலையத்தில் அடிக்கடி புகார் அளித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த போதை கும்பல், 24.5.2026 அன்று இரவு 11.30 மணியளவில் ரமேஷ்குமார், அவரது தங்கை கலைச்செல்வி மற்றும் உறவினர் அய்யப்பன் ஆகியோரை இரும்பு ராடு மற்றும் கத்தியால் கொடூரமாகத் தாக்கியுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த மூன்று பேரும் உயிருக்கு பயந்து, நள்ளிரவில் குருதி வெள்ளத்தில் டி.பி.சத்திரம் காவல் நிலையத்திற்கு தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால், அங்கிருந்த காவல்துறையினர் இவர்களின் நிலையைக் கண்டும் உதவ முன்வராமல், “எந்த புகாராக இருந்தாலும் காலையில் வாருங்கள்” என்று கூறி காவல் நிலைய கேட்டைப் பூட்டியுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் கலைச்செல்வியைத் தரக் குறைவாக நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றனர்.
காவல்துறைமீது
குற்றச்சாட்டு
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கலைச்செல்வி கண்ணீருடன் கூறுகையில்,
“கஞ்சா போதையில் எங்களைக் கத்தியால் வெட்டியதால் உயிர் பயத்தில் காவல் நிலையம் ஓடி வந்தோம். ஆனால், காவல்துறையினர் எங்களைக் காப்பாற்றாமல் கேட்டைப் பூட்டினார்கள். கஞ்சா புழக்கத்திற்கு ஒரு முடிவு வரும் என்று நம்பித்தானே நாங்கள் விஜய் அண்ணனுக்கு ஓட்டு போட்டோம்? எங்கள் உயிருக்கு என்ன உத்தரவாதம்? நாங்கள் எப்போது புகார் அளித்தாலும் காவல்துறையினர் சமாதானம் பேசி அனுப்பிவிடுகிறார்கள். எங்களுக்கு நடந்த கொடுமை இனி எந்த குடும்பத்திற்கும் நடக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.
இப்பரபரப்பான சூழலில், இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்துக் கொண்டதைத் தொடர்ந்தும், விவகாரம் பெரிதான தைக் கொண்டும் காவல்துறையினர் வேறு வழியின்றி வழக்கைப் பதிவு செய்தனர். இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சஞ்சய், தனுஷ் மற்றும் ஆர்யா ஆகிய மூவரை டி.பி.சத்திரம் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். குற்றத்தடுப்பு நடவடிக்கையில் போலீசாரின் இத்தகைய அலட்சியப்போக்கு பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
