‘நான் ஒரு சுதந்திர மனிதன்’ என்று தன்னைத்தானே பிரகடனப்படுத்திக் கொண்ட தந்தை பெரியார், தன்னை ஒரு ‘முழு பூரணப் பகுத்தறிவுவாதி’ என்றும் கூறினார்!
உலக ஆசாபாசங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் பயப்படாத
துணிச்சல் வந்தால்தான்– அங்கே பூரணப் பகுத்தறிவுக்கு இடம் கிடைக்கும்!
சென்னை, மே 27 ‘‘பெரியாருடைய சிந்தனைக் கூர்மை. அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல், முதன்முதலில் ‘நான் ஒரு சுதந்திர மனிதன்’ என்று தன்னைத்தானே பிரகடனப்படுத்திக் கொண்டார். மேலும், தன்னை ஒரு ‘முழு பூரணப் பகுத்தறிவுவாதி’ என்றும் அவர் கூறினார். ‘முழு பூரண பகுத்தறிவுவாதி’ என்பதற்கு மிக ஆழமான ஒரு பொருள் உண்டு. இப்போது இருக்கிற நாமெல்லாம் பகுத்தறிவாளர்கள்தான், ஆனால், பூரணப் பகுத்தறிவாளர்கள் அல்ல. உலக ஆசாபாசங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் பயப்படாமல் இருக்கிறாரே, அதுதான் துணிச்சல்! அந்தத் துணிச்சல் வந்தால்தான் அங்கே பூரண பகுத்தறிவுக்கு இடம் கிடைக்கும்’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற 200 ஆவது கூட்டம்!
கடந்த 23.5.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற 200 ஆவது கூட்டத்தில், ‘‘தந்தை பெரியார் சிந்தனையின் கூர்மை’’ என்னும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஒரு நிகழ்ச்சியாக இன்றைக்கு இந்த 200 ஆவது கூட்டம் தொடங்குகிறது என்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
‘கடிகாரம் ஓடுமுன் ஓடு’ என்று
சொல்லக்கூடிய அளவில்…
ஆனால், அருமைத் தோழர்களே இன்று காலையில் இருந்து ‘கடிகாரம் ஓடுமுன் ஓடு’ என்று சொல்லக்கூடிய அளவில் தொடர்ந்து அலைந்து கொண்டிருக்கிறேன். இப்பொழுது கூட ஒரு தொலைக்காட்சி பேட்டிக்காக, அந்த நிறுவனத்திலிருந்து மூன்று நாள்களாக வலியுறுத்தி வருகிறார்கள். ஒரு 15 மணித்துளிகள் அதை முடித்துவிட்டு வந்தேன். அதனால்தான் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. ஆகவே, தாமதமாக வந்திருப்பதற்காக நீங்கள் அருள்கூர்ந்து பொறுத்ததருள வேண்டும், மன்னிக்க வேண்டும்.
முதல் கூட்டத்தைத் தொடங்கி வைத்த நான் – 200 ஆவது கூட்டத்திலும் பங்கேற்கிறேன்!
இந்த நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடை பெறுகின்றது. புதுமை இலக்கியத் தென்றலாக இருந்தாலும் சரி, அதேபோல பெரியார் நூலக வாசகர் வட்டமாக இருந்தாலும் சரி, அதற்குக் கூடுதலாக இப்படி ஒரு முயற்சியை நம்முடைய வா.நேரு அவர்கள், நம்முடைய முருகானந்தம் அவர்கள், கவிதா அவர்கள், மற்ற தோழர்கள் எல்லாம் மதுரையில் இருந்து ஆரம்பித்தாலும் கூட, எல்லோரும் சேர்ந்து தொடர்ச்சியாகக் கூட்டங்களை நடத்தி, இன்றைக்கு 200 ஆவது கூட்டத்தை இங்கே நடத்துகிறார்கள் என்று சொல்லும்போது, மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தக் கூட்டத்தின் முதல் கூட்டத்தைத் தொடங்கி வைத்த நான், 200 ஆவது கூட்டத்தில் பங்கேற்பது என்பது அதைவிட ஒரு நல்ல வாய்ப்பு.
எனவே, இத்தகைய நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, நமக்கு ஒரு பெரிய நல்வாய்ப்பாக அமைந்திருக்கிறது. அதற்காக பாடுபட்டிருக்கக்கூடிய தோழர்கள் அய்யா ஒருங்கிணைப்பாளர் பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் அவர்கள், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில தலைவர் முனைவர் வா.நேரு அவர்கள், கவிதா அவர்கள், பிரின்ஸ் என்னாரெசு பெரியார் அவர்கள், நம்முடைய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்கள், பகுத்தறிவாளர் கழகப் பொதுசெயலாளர் வெங்கடேசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைத்தலைவர் தோழர் ஒளிவண்ணன், ஊட கத்துறையின் மாநில தலைவர் அழகிரிசாமி அவர்கள், மாரி கருணாநிதி அவர்கள் மற்றும் இந்த அழைப்பில் மகிழக்கூடிய என்றொரு நீண்ட பட்டியல் இருக்கிறது; தோழர்களாகிய அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தையும், வாழ்த்தையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னைப் பொறுத்த அளவில்…
இந்த நிகழ்ச்சியில், தலைப்புப்பபற்றியும், அதற்குரிய காரணத்தைப்பற்றியும் முதலில் சொல்ல வேண்டும். அது என்னவென்றால், நேரு அவர்கள் இந்தக் கூட்டத்திற்கு ஒரு தலைப்பு வேண்டும் என்று கேட்டார். அவர்களே ஒரு தலைப்பைத் தேர்ந்தெ டுத்திருக்கலாம். ஆனால், நேரு அவர்கள், முறைப்படி, நியாயப்படி, சம்பிரதாயப்படி கேட்டார். பொதுவாக, யார் பேசுகிறார்களோ அவர்களைக் கேட்பார்கள். என்னைப் பொறுத்த அளவில், நிகழ்ச்சி நடத்துகிறவர்களே தலைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துவிடுங்கள் என்று தெரிவித்துவிடுவேன்.
‘‘தந்தை பெரியார் சிந்தனையின் கூர்மை!’’
இது அறிவார்ந்த ஓர் அரங்கம். பெரியார் அறிவை நாம் செம்மைப்படுத்தித் தெரிந்து கொள்ள வேண்டும், நமக்கேற்ப ஒரு வாய்ப்பை உண்டாக்கலாம் என்று நினைத்துத்தான், ‘‘தந்தை பெரியார் சிந்தனையின் கூர்மை’’ என்று கொடுத்திருக்கிறார்கள்.
நாம் எல்லோரும் பெரியார் சிந்தனையைத் தெரிந்த வர்கள்தான் ஓரளவுக்கு. ஆனால், அதனுடைய கூர்மை யைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று, இந்தத் தலைப்பைக் கொடுத்தார்கள். நம்முடைய அருமைப் பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, இந்தத் தலைப்பைப் பற்றியும் அவரோடு ஆலோசித்தோம். இந்தத் தலைப்பில், நான் சில குறிப்புகள் வைத்திருந்தேன். அந்தக் குறிப்பு களைத் தயாரித்தவுடன், ‘நேரக் கட்டுப்பாடு இருக்கும், அதனால் அந்த நேரத்திற்குள் ஒரு மூன்று, நான்கு குறிப்புகளைப்பற்றி மட்டும் சொல்லலாம்’ என்று நினைத்திருந்தேன். ஏனென்றால், பெரியார் சிந்தனையே ஒரு கடல் மாதிரி. அதில், கூர்மையைக் கண்டுபிடித்து ஓர் அறிவார்ந்த அரங்கத்துக்குச் சொல்லி, அவர்கள் மேலும் மற்ற இடங்களுக்குச் சென்று, அத னைப் பரப்ப வேண்டும் என்பதற்காக, இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தலாம் என்று நினைத்தேன். இன்னொரு வாய்ப்பு எனக்கு என்னவென்றால், நான் மறுவாசிப்பு செய்வதற்கும், எனக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.
ஒரு புத்தகத்துக்கு வேண்டிய
உருவாக்கம் உருவாகிவிட்டது!
கூட்டத்தில் உரையாற்ற என்னை அழைப்பவர்கள், எனக்கு ஒரு தலைப்பு கொடுத்தால், அந்தத் தலைப்பு தானே, பேசிவிடலாம் என்று போவதில்லை. அதற்காகக் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி சில குறிப்புகளை எடுத்துக்கொண்டு, அதைப்பற்றி பேசக்கூடிய அளவிற்கு வாய்ப்பைப் பெற்று, எடுத்துச் சொல்வேன். அப்படிப் பார்க்கும்போது, இந்தக் கூட்டத்தினால், இன்னொரு நல்ல பயன் விளைந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பேசவேண்டியதைப்பற்றி நாங்கள் ஆலோ சித்து, பட்டியலைத் தயார் செய்தோம். ஆனால், ஒரு புத்தகத்துக்கு வேண்டிய உருவாக்கம் உருவாகிவிட்டது; ஆகவே, நீங்கள் என்னை அழைத்து, இந்தத் தலைப்பில், நான் இங்கே பேச வந்திருக்கிறேன்.
இந்தக் கூட்டத்தைத் தொடர் சொற்பொழிவுக் கூட்டமாக ஆக்கலாம். ஏற்கெனவே புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்பற்றி தொடர் சொற்பொழிவு அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறோம். அதை நாம் கைவிடப் போவதில்லை. அதற்கு இன்னொரு அமைப்பு இருக்கிறது. பெரியார் நூலக வாசகர் வட்டம் இருக்கிறது. புதுமை இலக்கியத் தென்றல் இருக்கிறது.
குறிப்பு எடுத்த செய்திகளைப் புத்தகமாக உருவாக்கு வது ஒரு நிரந்தரமான பயன் ஆகும். ஏனென்றால், அய்யா அவர்களைப் பற்றி பல இடங்களில், இப்போது உலகம் தாகத்தோடு தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது.
‘‘சுயமரியாதை இயக்கத்தின் வரலாறு – தாக்கம்!’’
உத்தரப் பிரதேசத்தில பெரிய அளவிற்கு ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த அமைப்பின் நிகழ்வில் பங்கேற்க நம்மை அழைத்திருக்கிறார்கள்.
‘‘சுயமரியாதை இயக்கத்தின் வரலாறு – தாக்கம்!’’ என்ற தலைப்பில், ஆங்கிலத்தில் உரையாற்ற வேண்டும். ‘‘நாங்கள் ஏற்பாடு செய்கின்ற முதல் கூட்டத்தில் உரையாற்றுவதற்கு யாரையாவது அனுப்புங்கள். அதற்கு அடுத்து, பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறோம். அதில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்’’ என்று சொல்லி, லக்னோவில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள், நான் உடனே, தோழர் கோ. கருணா நிதி அவர்களை அழைத்து, அந்த முதல் நிகழ்வில் பங்கேற்கச் சொல்லியிருக்கிறேன். அவர்களும் அந்த நிகழ்வில் பங்கேற்க இசைவு தெரிவித்திருக்கிறார்.
ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில்…
அதேபோன்று ஹார்வர்டு போன்ற பல்கலைக் கழகங்களில் நடைபெறுகின்ற நிகழ்வில், பெரியார் இயக்கத்தினுடைய கருத்துகளைப்பற்றி உரையாற்ற அவர்கள் அழைத்திருக்கிறார்கள். அங்கே செல்வதற்கு இப்பொழுது சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால், காணொலி மூலமாவது கலந்துகொண்டு விவாதிக்கலாம் என்று சொல்கிறார்கள். ஏனென்றால், மேற்காசிய போரின் காரணமாக.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!
எனவே, அய்யாவினுடைய கருத்துகள், புரட்சிக்கவி ஞர் அவர்கள் சொன்னதைப் போல, ‘‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’’ என்ற அளவிற்கு இன்றைக்கு வந்திருக்கிறது.
தந்தை பெரியார்பற்றி,
‘‘உயர் எண்ணங்கள் மலரும் சோலை
அறிவில் வயதில் முதியார் – நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்’’ என்றார் புரட்சிக்கவிஞர்.
இன்னொரு பெரிய மகிழ்ச்சி! நான் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னேன், ‘பெரியார் எழுத்து – அது தத்துவ விளக்கமாக இருக்கட்டும்; பெண் ஏன் அடிமையானாள்? இருக்கட்டும்; இனிவரும் உலகமாக இருக்கட்டும்; அல்லது மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம் என்ற புத்தகமாக இருக்கட்டும். எந்த நூலாக இருந்தாலும், என்னுடைய அனுபவத்தில், பல கூட்டங்களில் சொல்லி இருக்கிறேன். இருந்தாலும், இந்தக் கூட்டத்தில் அதை ஒரு முன்னுரையாக வைத்து நான் தொடக்கவிருக்கிறேன்.
நம்முடைய முதிர்ச்சி, நம்முடைய அறிவுத் தெளிவு இதைப் பொறுத்துதான்!
நம்முடைய முதிர்ச்சி, நம்முடைய அறிவுத் தெளிவு இதைப் பொறுத்துதான் பெரியார்பற்றி ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய கூர்மையை உணர முடியும். நான் 15 வயதில் இருக்கும்போது படித்த பெரியார் வேறு; எனக்கு புரிந்தது வேறு; அதுவே, 25 வயதில் வித்தியாசமானது. அதுவே 55 வயதில், இன்னும் புதுமையாக இருந்தது.
ஆகவே, பெரியார் மற்றவர்களைப் போன்றவர் அல்லர். அவருடைய மற்றொரு சிறப்பு என்னவென்றால், அவரது உரையும் பேச்சுமே ஆகும்; ஏனென்றால், அதைத்தான் அவர் பெரிதும் நம்பினார். மேடைப் பேச்சை ஒரு மிகப்பெரிய ஆயுதமாக மாற்றிக் காட்டியவர் தந்தை பெரியார் தான்.
‘தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் பெரியார்’ என்றார் அண்ணா!
இதனைப் பொதுக்கூட்டம் ஒன்றில் குறிப்பிட்ட அறிஞர் அண்ணா அவர்கள், ‘தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் பெரியார்; மாலை நேரங்களில் தொடங்கும் அவருடைய வகுப்பு, தொடர்ந்து மூன்று மணி நேரம் நீடிக்கும்’ என்று மிக அழகாகக் கூறினார்.
அவரைப் போல மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் வேறு யாரும் இல்லை. அங்கு கூடியிருப்பவர்கள் பாமரர்களாக இருந்தாலும் சரி, படித்தவர்களாக இருந்தாலும் சரி, அனைவரையும் கவரும் வகையில், அவரது உரை அமையும். பாம ரர்களைத் தன்பால் ஈர்த்து, படித்தவர்களையும் சிந்திக்க வைக்கக்கூடிய அளவிற்குப் பெரியாருடைய சிந்தனைகளும், அதன் கூர்மையும் தனித்தன்மை வாய்ந்தவை.
‘முழு பூரணப் பகுத்தறிவுவாதி’
தந்தை பெரியார்!
அந்தக் கூர்மை சாதாரணமான கூர்மை அல்ல; பெரியாருடைய சிந்தனைக் கூர்மை. அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல், முதன்முதலில் ‘நான் ஒரு சுதந்திர மனிதன்’ என்று தன்னைத்தானே பிரகட னப்படுத்திக் கொண்டார். மேலும், தன்னை ஒரு ‘முழு பூரணப் பகுத்தறிவுவாதி’ என்றும் அவர் கூறினார்.
‘முழு பூரணப் பகுத்தறிவுவாதி’ என்பதற்கு மிக ஆழமான ஒரு பொருள் உண்டு. இப்போது இருக்கிற நாமெல்லாம் பகுத்தறிவாளர்கள்தான், ஆனால், பூரணப் பகுத்தறிவாளர்கள் அல்ல. உலக ஆசாபாசங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் பயப்படாமல் இருக்கிறாரே, அதுதான் துணிச்சல்! அந்தத் துணிச்சல் வந்தால்தான் அங்கே பூரணப் பகுத்தறிவுக்கு இடம் கிடைக்கும்.
அத்தகைய வேகத்தையும், துணிச்சலையும் கொண்ட ஒரு தலைவரை இந்த உலகத்தில் வேறு எங்குமே பார்க்க முடியாது. உலகமே திரண்டு வந்து எதிர்த்தாலும், இமயமலை போன்ற எதிர்ப்புகள் வந்தாலும் அவர் அதைப் பற்றிக் கவலைப்பட்டதே இல்லை. அந்தத் துணிச்சலுக்கு அவருடைய சிந்தனையின் கூர்மைதான் மிக முக்கியக் காரணம். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஒருபோதும் தனக்காகச் சிந்தித்ததே இல்லை; மக்க ளுக்காகவும், இந்தச் சமுதாயத்திற்காகவுமே சிந்தித்தார்.
கடைசி வரை
ஒரு சுதந்திர மனிதனாகவே வாழ்ந்தார்!
நல்வாய்ப்பாக, அய்யா பெரியார் அவர்கள் பள்ளிக்கூடங்களுக்குள் அதிகம் போகாமல், முக்கியமாகப் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லாமல், கடைசி வரை ஒரு சுதந்திர மனிதனாகவே வாழ்ந்தார். அதனால்தான் அவருடைய அறிவுக்கு எந்தவிதத் தளைகளும் (கட்டுப்பாடுகளும்) இல்லாமல் இருந்தது.
அறிவுக்குத் தளைகள் இல்லாதது மட்டுமல்ல, வெற்று ஜொலிப்புகளுக்கும், அவருக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது; அவரிடம் போலி ஒப்பனைகள் எதுவும் இல்லை. அவருக்கு எப்பொழுதுமே ஆடம்பர ஒப்பனைகள் பிடிப்பதில்லை.
‘ஏன் தாடி வளர்க்கிறீர்கள்?’ என்று அவரிடம் ஒருமுறை கேள்வி கேட்டபோது, அவர் மிக எளிமையாக, ‘அது வளருகிறது, அதற்கு நான் என்ன செய்வது?’ என்று பதிலளித்தார்.
ஆனால், இன்று தாடி வளர்ப்பவர்களையும், ஒட்டுத்தாடி வைப்பவர்களையும் பார்த்தால், தாடியை அழகாக வெட்டிப் பராமரிப்பதற்கே அதிக நேரம் செலவிடுகிறார்கள். சவரம் (shave) செய்வதற்கு ஆகும் நேரத்தை விட, அதை ஒரு பக்குவமான வடி வத்திற்குக் கொண்டு வர அவர்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை நாம் கவலையோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும். நான் இதைப் பேசும்போது உங்களுக்குச் சிலரின் உருவம் நினைவுக்கு வரலாம்.
அதனால்தான் சொல்கிறேன், அய்யா பெரியார் அவர்கள் எந்தவித போலித்தனமும் இல்லாத ஒரு மாபெரும் மனிதராக வாழ்ந்தார்.
(தொடரும்)
