‘நட்பு’ பற்றிய அறிவுரை தரும் வள்ளுவப் பெருந்தகை, வெறும் பத்து குறள் பாக்களோடு அதனைமுடித்து விடவில்லை.
கூடுதலாக – ‘நட்பாராய்தல்’, ‘கூடா நட்பு’, ‘தீ நட்பு’ என்றுபல தலைப்புகளில் உண்மை நட்பின் ஆழ்ந்த பரிமாணத்தினைஅகலப்படுத்திக் காட்டத்தவறவே இல்லை என்பது தனிச் சிறப்புக்குரியதாகும்.
நிறை நட்பு, குறை நட்பு – தேய் நட்பு பற்றியும் மனிதகுலத்தை எச்சரிக்கவும் தவறவில்லை!
நம் காதுகளுக்கு இதமானவை, இனியவை – இவைகளைக் கேட்டுக் கேட்டு, மற்ற மாறுபட்ட செய்திகளை – அவை எவ்வளவு உண்மையாக இருப்பினும், அந்த சந்தர்ப்பத்தில் உணர்த்தப்பட வேண்டிய உன்னதமான பயனுறு செய்தியாக இருப்பினும், அதைக் கூறுகிறவர்களை – அச்செய்தி ஏத்தி ஏத்தி புகழாமல் யதார்த்த உண்மை – அதுவும் கசப்பான உண்மை என்பதால் கேட்க அலட்சியம் காட்டுவது மட்டுமல்ல; கூறும் உண்மை நட்பாளர்களை உவத்தலில் காரணம் ‘ஒதுக்கப்படுவோர் பட்டியலிற்குத் தள்ளி விடுவது என்ற மனித சராசரித் தன்மையைப் புரிந்து, உண்மை நட்பிற்கு உயரிய இலக்கணம் வகுத்துத் தருகிறார் உயர் தனிச் சிந்தனையாளர் திருவள்ளுவர்.
‘‘நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.’’ (குறள் – 784)
‘‘ஒருவருடன் நட்பு கொண்டிருப்பது அவருடன் சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அன்று; அவர் தவறு செய்யும்பொழுத அந்தக் குற்றத்தைக் கண்டித்துத் திருத்துவதற்காகவும் என்று கொள்ள வேண்டும்.
அதையே மேலும் விரிவாக்கிய விளக்கத்தின் அடுத்த கட்டத்திற்கும் நம்மை அழைத்துச் செல்லுகிறார் குறளாசான் வள்ளுவர்!
‘‘அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.’’ (குறள் – 787)
‘‘உயிர் நண்பர் தீய வழிசெல்லும் பொழுது, அதிலிருந்து அவரை விலக்கி, நன்னெறியாக அதாவது சரியான வழியில் – அவரைச் செலுத்தி, அவருக்கு (அதனால்) துன்ப நிலை ஏற்படுமேயானாலும்கூட, அத் துன்பத்திலும் பங்குபெறுவதே சிறந்ததொரு நட்பாகும்!
இத்தலைமுறை தலைவர்களிடமோ, ஆளுவோர், ஆளப்போவோரிடமோ – சில விதி விலக்குகளை தவிர்த்து –காண்பது குதிரைக் கொம்பே என்பது அனுபவ உண்மையாகும்.
மூன்றாவது வகை நட்பின் அளவில் ஒன்று உண்டு.
நியாயமாகப் புகழ்தல் – பாராட்டுதல் – வாழ்த்துதல் என்பதற்கு ஒரு கட்டுமானம் – அளவீடு உண்டு; இருக்க வேண்டும்.
அது தன் வரம்பினைத் தாண்டும் போது அதுவே ‘முகமன்’ – முகஸ்துதி – (Flattery) cajolery (‘ததாஸ்து’) ஆகி, கேட்டும் நம்பி அதீத கற்பனை உலகில் திடீரென பறந்து, வீழ்ந்திடும் நிலையும் ஏற்படாது; அவர்கள்தான் நமக்கு உண்மையான எதிரிகள் – கடும் எதிரிகள் என்ற புரிதலோடு கூடிய தற்காத்துக் கொண்டவர்களே தனித் தலைமைக்கும் உரியவராக உயரிய உண்மை ஆளுமையாகவோ, நல்ல நண்பர்களாகவோ ஆக முடியும்.
தந்தை பெரியார் அவர்களிடம் யாராவது புகழ்ந்தால், முதலில் கேட்கும் அவர் தயக்கத்துடன் ஏற்பதுபோல் இருப்பார். மேலும், ‘காக்கா’ப் பிடிப்பதுபோல் எல்லை தாண்டும் போது அவரேமுற்றுப்புள்ளி வைத்து அப்புறங்க, வேறு என்ன? என்று முடிவுரை எழுதுவார்.
அதனால்தான் அவர் பெரியார் – புரிகிறதா?
வள்ளுவப் பெரியாரும் – வாழும் பெரியாரும் (தத்துவமாக) எப்படி ஒரே நேர்கோட்டில் செல்லுகின்றனர் பார்த்தீர்களா?
(வளரும்)
