இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடமே மூட்டு ஆகும். அங்கு ஜவ்வு போன்றதோர் உறுப்பு உள்ளது. அது சீரழிந்து மூட்டிலுள்ள இரண்டு எலும்புகள் ஒன்றுக்கொன்று உராயும்போது மூட்டுவலி தோன்றுகிறது. பெண்களுக்கு சுமார் 55 வயதில் இருந்தே இத்தொல்லை நேரலாம்.
மூட்டுவலி ஏற்பட காரணங்கள்
மரபு (பாரம்பரியம்)
இத்தொல்லை பொதுவாகப் பெண்களுக்குத் தலைமுறைத் தலைமுறையாக வருவதுண்டு. அதனால் மூட்டுவலி பரம்பரை நோயாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
முதுமை
வயது ஆக, ஆக மூட்டுவலி வர வாய்ப்புகள் அதிகமாகின்றன. ஆகையால் முதுமையும் மூட்டுவலி ஏற்பட ஒரு காரணமாக இருக்கலாம் என்று எண்ணப் படுகிறது. மூட்டுகளில் இருக்கும் ஜவ்வில் பல ஆண்டுகளாய்ச் செய்யும் வேலைச்சுமை காரணமாய் ஏற்படும் சீரழிவால் வலி தோன்றுகிறது.
உடல் பருமன்
அதிக எடை உள்ளவர்களுக்கு அந்த எடையைத் தாங்கும் முழங்கால், இடுப்பு போன்ற மூட்டுகளில் இத்தொல்லை அதிகமாக ஏற்படும்.
மூட்டு வலிக்கான அறிகுறிகள் என்ன?
இந்நோயினால் முழங்கால், இடுப்பு, முதுகுத்தண்டு மற்றும் கழுத்துகளின் மூட்டுகள் மிகுதியாய்ப் பாதிப்புக்குள்ளாகும். முதலில் மூட்டுவலி விட்டுவிட்டுத் தோன்றும். படிக்கட்டு ஏறும்போதும் தொடர்ந்து தரையில் அமர்ந்திருந்து எழும்போதும் முழங்கால் வலி மிகுதியாய் ஏற்படும்.
காலையில் படுக்கையிலிருந்து எழும்போது மூட்டுகள் சற்று இறுக்கமாய் இருக்கும். முழங்காலை மடக்கி நீட்டும்போது ஒருவித சத்தமும் உண்டாகும்.
இடுப்பு, முழங்கால்களில் வலி மிகுதியாய் இருந்தால் நடை குறையும். தள்ளாடி கீழே விழவும் நேரிடலாம். நாள்பட்ட வலியினால் மனம் சோர்வையும், இரவில் தூக்கத்தையும் பாதிக்கும்.
இந்நோய் கழுத்திலுள்ள மூட்டுகளைத் தாக்கும் பொழுது கழுத்தின் அசைவு குறைந்து பின்புறம் வலி தோன்றும். இந்த வலி கழுத்தை அசைக்கும்போது தோள்பட்டைக்கும், கைகளுக்கும் பரவிச் செல்லும்.
மேலும், கழுத்தினைப் பக்கவாட்டிலும், மேலும் கீழும் திருப்பும் பொழுதும் மூளைக்குச் செல்லும் குருதி ஓட்டம் குறைவதால் மயக்கம் ஏற்படும்.
இந்நோய் தண்டுவடத்தைத் தாக்கும்போது, கை, கால்களில் மரத்த உணர்ச்சி ஏற்பட்டு அவை வலிமை இழக்கும், நடை தள்ளாடும். இந்நோய், கீழ் முதுகிலுள்ள எலும்புகளைப் பாதிக்கும்போது குனிந்து நிமிரும்பொழுது முதுகுவலி மிகுதிப்படும். சில நேரங்களில் முதுகிலிருந்து இரண்டு கால்களுக்கும் வலி பரவிச் செல்லும்.
மூட்டு வலிக்குத் தேவையான சிகிச்சை முறைகள்
மூட்டு வலி உள்ளவர்களுக்கு மூட்டுத் தேய்மானத் தினால் வலி ஏற்படுவதால் மருந்துகள் மற்றும் பிற சிகிச்சைகள் மூலம் வலியைக் குறைக்க முடியுமே தவிர பூரணமாகக் குணப்படுத்த முடியாது. அத்தேய்மானம் அதிகப்படியாகாமல் பார்த்துக்கொள்ள சில சிகிச்சை முறைகள் உண்டு.
நடைப்பயிற்சி
அதிக எடையால் மூட்டுத் தேய்மானம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும். ஆகையால், அதிக எடையுள்ளவர்கள் தகுந்த உணவுக் கட்டுப்பாடு மற்றும் தக்க உடற்பயிற்சி மூலம் எடையைக் குறைப்பது மிக அவசியம்.
மூட்டு வலி உள்ளவர்கள் இதில் சற்று தீவிரக் கவனம் செலுத்த வேண்டும். ஒரேயடியாக வலி மாத்திரையை மட்டும் நம்பியிருக்கக் கூடாது.
மூட்டு வலியைக் குறைக்க உடற்பயிற்சி உதவும். நடக்கும்போதோ அல்லது வேறு உடற் பயிற்சியின் போதோ மூட்டுவலி அதிகரித்தால் உடற்பயிற்சி செய்யக் கூடாது. மேலும், யோகா, நீந்துதல் போன்றவை வலியைக் குறைக்கும் சிறந்த பயிற்சிகளாகும்.
வலி நிவாரணிகள்
மூட்டுக்காலில் தோன்றும் வலியைக் குறைக்க ஆஸ்பரின், பாரசிட்டமால் போன்ற சாதாரண வலிதீர் மருந்துகளே போதுமானவை. இம் மருந்துகளை மருத்துவர் ஆலோசனையோடு எடுத்துக்கொள்வது நல்லது. எந்த வலிதீர் மருந்தையும் உணவிற்குப் பின்னரே உட்கொள்ள வேண்டும்.
வயிற்றில் புண் உள்ளவர்கள் இதனை உட்கொள்ளக் கூடாது. வலிதீர் மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிட மருத்துவர் ஆலோசனையைப் பெற வேண்டும்.
வயிற்றில் ஒருவித எரிச்சல், வலி, பசி குறைதல், குருதிவாந்தி ஆகியவற்றோடு மலம் நிறம் மாறிக் கருப்பாகிச் சென்றால் வலி மாத்திரை ஒத்துக்கொள்ளவில்லை என்று தெரிந்துகொண்டு உடனே அதனை நிறுத்திவிட்டு மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
மூட்டுகளின் அருகிலுள்ள தசை இறுக்கமாயிருப்பின் அவ்விறுக்கத்தைக் குறைக்க களிம்பும், சில மாத்திரைகளும் தேவைப்படும். பல ஆண்டுகளாய்த் தொடர்ந்து மூட்டுவலி இருப்பவர்களுக்கு ‘மனச்சோர்வு’ தோன்றும். இதற்கும் சிகிச்சை பெற்றுப் பயனடையலாம்.
ஊசி மருந்து சிகிச்சை
சிலருக்கு மூட்டுற்குள்ளேயே ஊசி மூலம் ஸ்டீராய்டு மருந்தினைச் செலுத்தினால் நல்ல பயன் கிடைக்கும். ஆனால், தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் மூட்டுகளில் ஊசி போட்டுக் கொள்ளக் கூடாது.
தாங்க முடியாத மூட்டுவலி உள்ளவர்களுக்கும் அறுவை சிகிச்சைக்கு விருப்பம் இல்லாதவர்களுக்கும் மற்றும் அறுவை சிகிச்சைக்குத் தகுதி இல்லாதவர் களுக்கும் இச்சிகிச்சை முறை உகந்தது.
இயன்முறை சிகிச்சை
இயன்முறை சிகிச்சை (Physiotherapy) முறையில் பல பிரிவுகள் உள்ளன. உதாரணமாக பயிற்சிச் சிகிச்சை, மின் சிகிச்சை, மெழுகு ஒத்தடம் முதலியனவை. இயன் முறைச் சிகிச்சையின் சிறப்பு மூட்டிலுள்ள வலியைக் குறைப்பதாகும். தசை இறுக்கத்தையும் தளர்த்தி மூட்டுகளின் அசைவினையும் இவை மிகுதிப்படுத்தும். ஆரம்ப நிலையில் மூட்டுவலி உள்ளவர்கள் இயன்முறைச் சிகிச்சை மூலம் பயனடைய வாய்ப்புண்டு.
ஸ்டெம் செல் சிகிச்சை முறை
இடுப்பு எலும்பிலுள்ள மஜ்ஜையை ஊசி மூலம் எடுத்து அதை வலியுள்ள மூட்டில் ஊசி மூலம் செலுத்துவார்கள். இதில் அறுவை சிகிச்சை ஏதுமில்லை. ஒரு சில ஆண்டுகளுக்கு வலியிலிருந்து விடுதலை கிடைக்கும்.
செல் சிகிச்சை முறை (Platelet Rich Plasma)
இதுவும் புதிய சிகிச்சை முறையே. உடம்பிலுள்ள குருதியை எடுத்து அதைப் பாதிக்கப்பட்ட மூட்டில் செலுத்துவதன் மூலம் ஒரு சில ஆண்டுகளுக்கு வலி இல்லாமல் இருக்கலாம்.
அறுவை சிகிச்சை
மூட்டு வலியினால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வலி குறைக்கும் சிகிச்சையில் போதிய பலன் அடையாதவர்களுக்கு மூட்டு அறுவை சிகிச்சை நல்ல பயனைக் கொடுக்கும்.
அறுவை சிகிச்சையில் பல வகைகள் உள்ளன.
ஆஸ்ட்டியட்டமி (Osteotomy)
இச்சிகிச்சையின் மூலம் சீராக இல்லாத மூட்டுகளைச் சீர் செய்து மூட்டினுள் உள்ள அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் மூட்டுவலி குறையும்.
தேய்ந்த மூட்டின் ஒரு பகுதியை மட்டும் அகற்றிவிட்டு செயற்கை மூட்டின் பகுதியை மட்டும் பொருத்துவது. (Partial Joint Replacement)
பழுதடைந்த மூட்டை அகற்றிவிட்டு செயற்கை மூட்டைப் பொருத்துவது (Total Joint Replacement)
எலும்பு தேய்மானத்தை எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் மூலம் உறுதி செய்த பின்னரே அறுவை சிகிச்சையின் அவசியத்தை மருத்துவப் பயனாளி மற்றும் உறவினர் களிடம் மருத்துவர் தெரிவிப்பார். அவர்கள் சம்மதத்தின் பேரில் அறுவை சிகிச்சை செய்யத் தொடங்குவார்.
அறுவை சிகிச்சை செய்த ஒன்று அல்லது இரண்டு நாள்களிலேயே நடக்க வைத்து, பின்னர் இயன்முறை சிகிச்சை அளித்து சுமார் 5 – 7 நாள்களில் வலியின்றி இல்லம் செல்லலாம். முடிந்தவரை இரண்டு முழங்காலுக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சை செய்து கொள்வது நல்லது.
