சென்னை, மே 23 கோடைக் காலத்தின் தகிக்கும் வெயில் ஒருபுறம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நிலவி வரும் தொடர் மின்வெட்டு பொதுமக்களின் வாழ்க்கையை முற்றிலும் முடக்கியுள்ளது. கிராமப்புறங்கள் மட்டுமின்றி, பேரூராட்சிகளிலும், ஏன் பல முக்கிய நகரங்களிலும்கூட நாளொன்றுக்கு பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு அரங்கேறி வருகிறது. இந்த வேனல் காலத்தில், மின் தட்டுப்பாட்டினால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருப்பது அநியாயமானது மட்டுமல்ல, உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு மக்கள் நல்வாழ்வுப் பிரச்சினையும் ஆகும்.
பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் இரவில் தூக்கமின்றித் தவிப்பதும், பகலில் அனல் காற்றோடு சேர்ந்து புழுக்கத்தில் வெந்து உருகுவதும் நாளாந்தக் காட்சிகளாகிவிட்டன. மின்சாரத்தை மட்டுமே நம்பியிருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs) கடுமையான நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. விவசாயப் பணிகளுக்கான மின்தேவையும் இந்த உச்சக்கட்ட கோடையில் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பது ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்த லில், மக்களின் பேராதரவோடு புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. மாற்றத்தையும், உடனடித் தீர்வையும் எதிர்பார்த்தே மக்கள் இந்த புதிய ஆட்சிக்குத் தங்களது வாக்குச் சீட்டுகள் மூலம் அதிகாரத்தை வழங்கியுள்ளனர். எனவே, இந்த மின்தட்டுப்பாடுப் பிரச்சினைக்கு முந்தைய நிர்வாகத்தின் மீது பழிபோட்டுத் தப்பிக்க முயலாமல், போர்க்கால அடிப்படையில் களமிறங்கிச் செயல்பட வேண்டியது புதிய அரசின் முதற்கடமையாகும்.
மின்தேவை இந்த அளவுக்கு உயரும் என்பதை முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ப மின் உற்பத்தியைப் பெருக்காததும், மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்காததும் தான் இந்த நிலைக்குக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. புதிய அரசு உடனடியாகத் தலையிட்டு கீழ்க்கண்ட அவசரக் கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அவசர கால நடவடிக்கைகள்!
கூடுதல் மின்சாரத்தைக் கொள்முதல் செய்தல்: மத்தியத் தொகுப்பிலிருந்தோ அல்லது வெளி மாநிலங்களிலிருந்தோ தற்காலிகமாக கூடுதல் மின்சாரத்தை உடனடியாகக் கொள்முதல் செய்து, பற்றாக்குறையை உடனடியாகப் போக்க வேண்டும்.
மின்கட்டமைப்பைச் சீரமைத்தல்: மின்மாற்றி கள் (Transformers) பழுதடைவதைத் தடுக்க வும், காற்றழுத்தப் பாதிப்புகளால் ஏற்படும் மின்தடை யைத் தவிர்க்கவும் தொழில்நுட்பக் குழுக்களை முடுக்கிவிட வேண்டும்.
வெளிப்படையான அறிவிப்பு: பராமரிப்புப் பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படும் பட்சத்தில், அதை முன்கூட்டியே மக்களுக்குத் தெரிவித்து, அறிவிக்கப்படாத மின்வெட்டுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
தொலைநோக்குத் திட்டங்கள்: மரபுசாரா எரிசக்தி (சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரம்) உற்பத்தியை அதிகரிப்பதற்கான நீண்டகாலத் திட்டங்களை இப்போதே துவங்க வேண்டும்.
தேர்தல் கால வாக்குறுதிகளும், கொள்கை அறிவிப்புகளும் ஒருபுறம் இருக்கட்டும்; ஆனால், மக்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான மின்சாரத்தைக் தடையின்றிக் கொடுப்பதே ஒரு நல்லாட்சியின் இலக்கணம். ‘‘மக்கள்தான் எஜமானர்கள்’’ என்பதைப் புதிய அரசு உணர்ந்து செயலாற்றவேண்டும் புதிய அரசு
முதலமைச்சர் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டை இந்த இருள் பிடியி லிருந்து உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒற்றைக் கோரிக்கையாகும்!
பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்!
புதுக்கோட்டை, மே 23- இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம விருது’களுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவிக்கையில், “அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாச்சாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம் ,சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை மற்றும் சமூகநலம் என பல்வேறு துறைகளில், சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து, ஒவ்வொரு ஆண்டும் ‘பத்ம விருது’களான ‘பத்மவிபூசன்’, ‘பத்மபூசன்’ மற்றும் பத்ம சிறீ விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டு வருகின்றன.
2027 ஆம் ஆண்டு குடியரசு நாளின் போது ‘பத்ம விருது’கள் வழங்கப்பட உள்ளதால், புதுக்கோட்டை மாவட்டத்தில், மேற்படி துறைகளில் சிறப்பாக பணிபுரிந்து, தகுதியான நபர்களாக இருந்து விருது பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப விவரங்களை கருத்துருவாக ஜுன் 5 ஆம் தேதிக்குள் புதுக்கோட்டை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் அளித்திட வேண்டும்’’ என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
