காசியாபாத், மே 22 உத்தரப் பிரதேசம் காசியாபாத்தில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த யுவா வாஹினி அமைப்பின் தலைவரை, அவரது ஆதரவாளர்கள் தோளில் தூக்கிச் சென்று கொண்டாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சாமியார் ஆளும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில் பிப்ரவரி மாதம், சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின் பேரில், யுவா வாஹினி அமைப்பின் தலைவர் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போதைய உத்தரப் பிரதேச சாமியார் முதலமைச்சர் ‘ஆதித்யநாத்’தான் யுவா வாஹினி அமைப்பின் தலைவரும் அதனை உருவாக்கியவரும் ஆவார்.
பாலியல் வன்கொடுமை செய்த யுவாவாஹினி காசியாபாத் தலைவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அண்மையில் அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியது.
சிறை வாசலில் இருந்து அவர் வெளியே வந்ததும், அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் அவருக்கு பெரிய மாலைகளை அணிவித்து, மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், சட்டத்தையும் சமூக நெறிமுறைகளையும் காலில் மிதிக்கும் விதமாக, குற்றச்சாட்டுக்குள்ளான நபரை ஆதரவாளர்கள் சிலர் தங்களது தோள்களில் தூக்கிச் சுமந்து கோஷங்களை எழுப்பினர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க வேண்டிய சூழலில், போக்சோ வழக்கில் கைதான ஒருவருக்கு இத்தகைய மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்ட காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. “சமூகத்தில் மனிதநேயம் எங்கே செல்கிறது?” என்றும், “குற்றவாளிகளைக் கொண்டாடும் இத்தகைய போக்கு மிகவும் ஆபத்தானது” என்றும் சமூக ஆர்வலர்களும் நெட்டிசன்களும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
