ஓராண்டாவது எந்தக் குறைபாடும் இல்லாமல், நீட் தேர்வு நடந்திருக்கிறதா?
ஊழலுக்கே ஓர் அற்புதமான இலக்கணம் நீட் தேர்வுதான்!
சென்னையில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
ஊழலுக்கே ஓர் அற்புதமான இலக்கணம் நீட் தேர்வுதான்!
சென்னையில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
சென்னை, மே 19 ஓராண்டாவது எந்தக் குறைபாடும் இல்லாமல், நீட் தேர்வு நடந்திருக்கிறதா? ஊழலுக்கே ஓர் அற்புதமான இலக்கணம் நீட் தேர்வுதான்! மாநில உரிமைகளுக்காக எப்போதும் போராடக்கூடிய மண், தமிழ்நாடு என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்!
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே 16.5.2026 அன்று காலை 10 மணியளவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
இம் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
ஓராண்டாவது எந்தக் குறைபாடும் இல்லாமல், நீட் தேர்வு நடந்திருக்கிறதா?
அதுமட்டுமல்ல, சில நேரங்களில், மற்றவர்களைத் தேட வேண்டும். இப்பொழுது அப்படியில்லை, NTA – National Testing Agency என்று சொல்லக்கூடிய தேர்வாணைய முகவாண்மை. அந்தக் குழுவினுடைய யோக்கியதை என்னவென்பதைப் பார்க்க வேண்டுமானால், இன்றைக்கு அந்தக் குழுவைச் சேர்ந்தவர்களைத்தான் சிபிஅய் கைது செய்திருக்கிறது. எந்த ஆண்டாவது, நீட் தேர்வு முறைகேடு இல்லாமல் நடந்திருக்கிறதா? 10 ஆண்டுகள் ஆகின்றதே, நீட் தேர்வைப் பற்றி வாதாடுகிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்குச் சவால் விட்டுக் கேட்கிறேன் நான், ஓராண்டாவது எந்தக் குறைபாடும் இல்லாமல், நீட் தேர்வு நடந்தது என்று விரலை மடக்க முடியுமா? யாராலும் விரலை மடக்க முடியாது.
கடைசியாக, அந்தத் தேர்வை நடத்துகிறவர்களே முறைகேடு செய்திருக்கிறார்கள். இதற்குத் தீர்வு என்னவென்றால், அடியோடு நீட் தேர்வை ஒழிக்க வேண்டும். நீட் தேர்வுக்கு மட்டுமல்ல, நாட்டில் மனுதர்ம மனப்பான்மைக்கே இடமில்லை என்று ஆக்க வேண்டும்.
ஊழலுக்கே ஓர் அற்புதமான இலக்கணம் நீட் தேர்வுதான்!
இங்கே உரையாற்றிய உமா அவர்கள் கூட சொன்னார்கள், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்குக் கொடுக்கவேண்டும் என்று. அந்தக் கட்டம் எல்லாம் தாண்டிப் போய்விட்டது. அந்த வேண்டுகோள் ஆரம்பத்தில் இருந்தது. இப்பொழுது இந்தியா முழுக்க நீட் தேர்வை ஒழித்தாக வேண்டும். ஏனென்றால், நம்மை விட, பிற மாநிலத்தவர், குறிப்பாக வட மாநிலத்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த உணர்வை நாம்தான் தொடங்கினோம். தமிழ்நாட்டில் மட்டும்தான் தொடங்கப்பட்டது. அதே மாதிரி மண்டல் கமிஷன் ஆதரவு கூட தமிழ்நாட்டில் மட்டும் தான் தொடங்கப்பட்டது. எது தமிழ்நாட்டில் தொடங்கப்படுகிறதோ, அது ஒருபோதும் தோல்வி அடையாது; வெற்றி பெற்றே தீரும். அது விஞ்ஞானம் – அது ஆசை அல்ல; அப்படிப்பட்ட நியாயம் அதிலே இருக்கிறது. அந்த வகையில் நண்பர்களே, இந்த வாய்ப்பை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஊழலை ஒழிப்போம் என்று சொன்னார்கள். நீட் தேர்வை விட பெரிய ஊழல், வேறு எதுவும் இல்லை. ஊழலுக்கே ஓர் அற்புதமான இலக்கணம் என்னவென்றால், நீட் தேர்வுதான். நீட் தேர்வை ஒழிக்காமல் ஊழலற்ற அரசு என்று சொல்லுகிறீர்கள்.
வடநாட்டில் ஊழல் சாதாரணம். அதுவும் ஹிந்தி பேசக்கூடிய மாநிலமான மத்திய பிரதேசம், ‘வியாபம்’ ஊழல் என்பது எல்லோரும் அறிந்ததே! அதே மாதிரி உத்தரப்பிரதேசத்தில் ஊழல்; உத்தரப்பிரதேசத்தில் ஒரு சட்டமே வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அதுபோன்ற ஒரு சட்டம் கிடையாது. அது என்ன சட்டம் என்றால், பீகாரில், உத்தரப்பிரதேசத்தில் தேர்வில் காப்பி அடிப்பதை எதிர்த்து, ஒரு சட்டம் கொண்டு வருகின்ற அளவுக்குக் காப்பி அடிக்கிறார்கள் என்றால், அது அந்த மாநிலங்களுக்குப் பெருமையா?
இதிலே வேறு, டபுள் என்ஜின் யோக்கியதைதான் இது. ‘சிங்கிள் என்ஜின்’ எவ்வளவு யோக்கியமாக இருக்கி றது; எவ்வளவு சாதனை செய்திருக்கிறது; அதற்குரிய பலாபலன் என்னவென்று மக்களுக்குத் தெரியும். அதை நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்.
அரசியலமைப்புச் சட்டப்படி கல்வி, முதலில் அடிப்படை உரிமையில் இல்லை. பிறகு அடிப்படை உரிமை ஆக்கப்பட்டது என்பதை மறந்து விடாதீர்கள். அதை நீங்கள் யாரும் மறுக்க முடியாது. ஆனால், அதை யெல்லாம் தூக்கி எறிந்துவிட்டார்கள். அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமான ஒரு போக்குதான் நீட் தேர்வு.
இன்றைக்கு இங்கே வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தில் மிக தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. நீட் தேர்வே ஒரு மோசடி. அதை மு.க.ஸ்டாலின் அவர்கள், கொள்கை என்று ஏற்று உறுதியாக உள்ளார். மிக அற்புதமாக ‘திராவிட மாடல்’ ஆட்சியில் இருந்தா லும் இல்லாவிட்டாலும் அவருடைய கருத்து, கொள்கை தான்.
‘‘நீட் தேர்வில் ஊழல் இல்லை; நீட் தேர்வே ஊழல்தான்!’’ – மு.க.ஸ்டாலின்
அப்படிப்பட்ட அவர், ‘‘நீட் தேர்வில் ஊழல் இல்லை; நீட் தேர்வே ஊழல்தான்’’ என்றார். நீட் தேர்வே சட்ட விரோதம்தான்.
ஏனென்றால், அரசியலமைப்புச் சட்டத்தில், எந்த இடத்தில் நீட் தேர்வுக்கு இடம் இருக்கிறது? தயவு செய்து நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும். அதைத்தான் தெளிவாக இந்தப் புத்தகத்தில் சொல்லி இருக்கிறோம். அரசியலமைப்புச் சட்ட விளக்கத்துடன் கூடிய கட்டுரை இந்த புத்தகத்தில் இருக்கிறது.
மாநில அரசுகளைத் தவிர,
வேறு யாருக்கும் உரிமை கிடையாது!
வேறு யாருக்கும் உரிமை கிடையாது!
சட்ட நிபுணர்களும் சொல்லி இருக்கிறார்கள். பல்கலைக் கழகத்தை நடத்துவதற்கு, பல்கலைக்கழ கத்தை துவக்குவதற்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, மாநில அரசுகளைத் தவிர, வேறு யாருக்கும் உரிமை கிடையாது. அதுதான் அரசியலமைப்புச் சட்டம். அதுதான் அண்மையில் வந்திருக்கின்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.
இவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தையும் மதிக்க வில்லை; உச்ச நீதிமன்றத்தினுடைய தீர்ப்பையும் மதிக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் இருக்கின்றன.
பழைய மனுதர்மத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்!
ஆகவேதான், மாநில உரிமைகள் பறிக்கப்பட்டி ருக்கின்றன. இவர்கள் பிரமாணம் எடுத்த அரசிய லமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக இருக்கிறது. ஊழல், உச்சக்கட்டத்திற்குப் போயிருக்கிறது. தகுதி, திறமை என்று அவர்கள் பேசி வந்தவை எல்லாம் உண்மையானவை இல்லை, என்று மிகத் தெளிவாக வெட்ட வெளிச்சமாகிவிட்டது. அது எல்லாத் துறை களிலும் படம் எடுத்து ஆடுகிறது. அதாவது எந்தப் படிப்பையும் நாம் படிக்கக்கூடாது; எல்லா படிப்பும் அவர்களுக்குதான் என்று சொல்லக்கூடிய பழைய மனுதர்மத்தை உருவாக்க வேண்டும் என்று உறுதியான நிலையில் இருக்கின்ற காரணத்தால்தான், இந்த எதிர்ப்புணர்வுகள் தேவைப்படுகின்றன.
மிக முக்கியமான ஒரு செய்தி என்னவென்றால், ஊழல் என்று வந்தவுடனே, பொதுவாக ஜனநாயகத்தை மதிக்கிறோம் என்று சொல்லக்கூடிய எந்தக் கட்சியாக இருந்தாலும், அதற்குப் பொறுப்பேற்று பதவி விலகு வார்கள். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசில், இதுவரையில் இதற்கு யாராவது பொறுப்பேற்று இருக்கிறார்களா?
குலக்கல்வி திட்டத்தையே ரத்து செய்து வரலாறு படைத்த மண், தமிழ்நாடு!
ஒன்றிய பா.ஜ.க.வின் கல்வி அமைச்சராக இருக்கக்கூடிய தர்மேந்திர பிரதான் என்பவர், ‘எல்லாவற்றுக்கும் சட்டம் கொண்டு வருவேன், சட்டம் கொண்டு வருவேன்’ என்று உளறுகிறாரே, தமிழர்களை எல்லாம் கொச்சைப்படுத்திப் பேசியவர் பதவி விலகி இருக்க வேண்டாமா? பதவி விலகாதது மட்டுமல்ல, ‘‘நரி வலமும் போக வேண்டாம், இடமும் போக வேண்டாம். மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் போதும்’’ என்று பழமொழி சொல்கிற மாதிரி, இப்பொழுது இன்னொன்றைச் சொல்லி இருக்கிறார். அது என்னவென்றால், நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என்று. நீட் தேர்வால் எந்தப் பயனும் இல்லை என்று பல ஆதாரங்கள் இருப்பதால், அந்தத் தேர்வை ரத்து செய்யலாம். தமிழ்நாடு, குலக்கல்வி திட்டத்தையே ரத்து செய்து வரலாறு படைத்த மண். இந்த மண்ணிலிருந்து இந்தக் குரல் வருகிறது. அதை எண்ணிப் பார்க்க வேண்டும், சிந்திக்க வேண்டும்.
எந்த ஒரு பிரச்சினைக்கும் பிரதமர் மோடி, நேரடி யாக வாய்த் திறக்கமாட்டார். அதற்குப் பதிலாக இப்பொழுது என்ன சொல்லப்படுகிறது என்றால், ‘‘அடுத்த ஆண்டுமுதல் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவோம்’’ என்கிறார்கள்.
நோயைவிட மருத்துவம்
மோசமானது!
மோசமானது!
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு, Remedy is worse in the disease என்று. அதாவது நோய்க்கு சிகிச்சை கொடுப்பது என்பது, அந்த நோயைவிட சிகிச்சை மிக மோசமானதாகும். நோயாவது, கொஞ்ச நாள்கள் கழித்து ஆளைக் கொல்லும். ஆனால், அதற்குக் கொடுக்கின்ற சிகிச்சை உடனே ஆளை சாகடிக்கும் என்பதுதான்.
ஊடக நண்பர்கள் இங்கே இருக்கிறார்கள், இந்தக் கேள்வியைத் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும்.
நீட் தேர்விற்கான கேள்வித் தாளை தயார் செய்தவரைத்தான்
சி.பி.அய். கைது செய்திருக்கிறது!
சி.பி.அய். கைது செய்திருக்கிறது!
ஆன்லைனில் தேர்வு நடத்தினால், அது சரியாக இருக்குமா? ஆன்லைனில்கூட கேள்வித்தாளை தயார் செய்துதானே கொடுப்பார்கள். இப்பொழுது பிரச்சினையே, கேள்வித் தாளை தயார் செய்தவரைத்தான் சி.பி.அய். கைது செய்திருக்கிறது. இது ஓராண்டு, ஈராண்டாக நடைபெறுவதல்ல; பல ஆண்டுகளாக நடைபெறுகிறதாம்.
நேற்று வந்த செய்தியை உங்களுக்குச் சொல்கி றேன், புனேயில், NTA – National Testing Agency என்று சொல்லக்கூடிய இந்த முகவர் அமைப்பை உருவாக்கிய காலத்திலிருந்து, ரசாயனத் துறையில் நீண்ட காலமாகப் பேராசிரியராக இருந்த ஒருவர், தொடர்ந்து இந்த முறைகேட்டை செய்து வந்திருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்தான், நீட் தேர்வுக்கான கேள்வித் தாளை தயாரிக்கின்றவர். கேள்வித்தாளை தயார் செய்தவரை இப்பொழுதுதான் கைது செய்திருக்கிறார்கள். ஆனால், இதற்குப் பிறகு என்ன நடக்கப் போகிறது என்று தெரியாது.
வழக்கம் போல என்ன நடக்கும்? ஒன்றும் நடக்காது. அதானி வழக்கை அமெரிக்காவில் முடித்த மாதிரிதான் இருக்கும்.
நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவது என்பது தீர்வாகாது!
ஆகவேதான், இதில் தெளிவாகச் சிந்திக்க வேண்டிய செய்தி என்னவென்றால், நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவது என்பது தீர்வாகாது. மீண்டும் மீண்டும் நீங்கள் ஊழலுக்கு வழி வகுக்கிறீர்கள்; பிடிவாதத்தோடு இருக்கிறீர்கள். உங்கள் பிடிவாதத்தை ஒருபோதும் நாடு சகிக்காது, சகிக்க விடமாட்டோம். இந்தியா முழுவதும் இப்போது அந்தக் குரல் எழுந்திருக்கிறது. ஹிந்தி பேசக்கூடிய மாநிலமான ராஜஸ்தானில் நடைபெற்ற நீட் தேர்வில் ஊழல்கள் நடந்திருக்கின்றன. இப்பொழுது அதனுடைய ஆபத்தை உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.
தென்னாட்டைத் தாண்டி, இப்போது வடபுலத்திலும் சென்றிருக்கிறது!
ஆகவே, முதலில் தமிழ்நாடு உணர்ந்தது; இரண்டா வது கருநாடகா உணர்ந்தது; மூன்றாவது மிக முக்கியமாக கேரளாவில் தெரிந்தது. ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களுக்கும் தெரிந்துவிட்டது. இன்று தென்னாடு தாண்டி, இப்போது எங்கே போய் இருக்கிறது என்று சொன்னால், முழுக்க முழுக்க வடபுலத்திலே ஹிந்தி பேசுகின்ற மாநிலங்களிலேயே இது வந்திருக்கிறது. ஆகவேதான், இந்தியா முழுவதற்கும் இதனுடைய பலாபலன்தான் என்ன என்பது தெரியவேண்டும்.
எப்படி மண்டல் கமிஷன் இந்தியா முழுவதும் வந்ததோ, எப்படி சமூக நீதி என்பது இந்தியா முழு வதற்கும் உரியதோ, அதுபோல இந்தியா முழுவதற்கும் நீட் தேர்வு தேவையில்லை. அது மனுதர்மத்தினுடைய ஒரு முகம்; அவ்வளவுதானே தவிர வேறு ஒன்றும் கிடையாது. அதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, தோழர்களே! இப்போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த அத்தனைக் கட்சித் தலைவர்களுக்கும், அமைப்புகளுக்கும் தலைதாழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது முதல் கட்டம் – இந்த முதல் கட்டம், இன்றைக்கு அவசரமாகத் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தக் கட்டம், இந்தப் போராட்டம் விரிவடையும். குலதர்மக் கல்வியிலே ஆச்சாரியாரை விட புத்திசாலிகளாக நீங்கள் இருக்க முடியாது? உடம்பெல்லாம் மூளை என்று சொன்னார்கள், ஆச்சாரியாரை. மூளை ஓரிடத்தில இருந்தால்தான் சரியாக இருக்கும். உடம்பு முழுவதும் இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட உடம்பெல்லாம் மூளை என்று சொல்லப்பட்ட ராஜகோபாலாச்சாரியாராலேயே தமிழ்நாட்டில் குலதர்மக் கல்வித் திட்டத்தை நீடிக்க முடியவில்லை.
மாநில உரிமைகளுக்காக எப்போதும் போராடக்கூடிய மண், தமிழ்நாடு!
நீங்கள் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற பெயராலே வந்தாலும், மனுதர்மத்தினுடைய இன்னொரு பெயரில் வந்தாலும் ஒருபோதும், இங்கே எடுபடாது. ஏனென்றால், தமிழ்நாடு பெரியார் மண், சமூக நீதி மண், சுயமரியாதை மண், மாநில உரிமைகளுக்காக எப்போதும் போராடக்கூடிய மண், இந்த மண் தெளிவாக இருக்கும்.
ஆகவேதான், இதிலே கட்சி வேறுபாடு, அரசியல் மாறுபாடு இவற்றையெல்லாம் பார்க்காமல், நம்முடைய திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைவர், ‘திராவிட மாடல்’ ஆட்சியை நடத்தி வரலாறு படைத்த வர். அப்படிப்பட்ட அவர் நேற்று (15.5.2026) அறிக்கை விட்டார். மீண்டும் சொல்லுகிறேன் எல்லா கட்சித் தலைவர்களும், இடதுசாரி தோழர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
இது எல்லாவற்றையும் விட, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இந்த மேடையில இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். யாரும் நீட் தேர்வை ஆதரிக்கவில்லை. குறிப்பாக, தமிழ்நாட்டில் புதிதாக வந்த ஆட்சியை நாம் அப்படியே, வசப்படுத்திக் கொள்ள லாமா? என்று நினைத்தார்கள். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நீட் தேர்வுக்கு எதிராகவே ஓர் அறிக்கையை கொடுத்து, தங்களுடைய நிலைப்பாடு, நீட் தேர்வு எதிர்ப்புதான் என்று சொன்னார். அதற்காக முதலமைச்சருக்கு நன்றி செலுத்துகிறோம்.
இதில் கட்சி கண்ணோட்டம் கிடையாது. அரசியல் கண்ணோட்டம் கிடையாது, சமூக நீதி கண்ணோட்டம்தான், மாநில உரிமைகள் கண்ணோட்டம் தான். ஆகவே, ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்!
போராடுவோம், வெற்றி பெறுவோம்!
ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்!
(முழக்கத்தை எல்லோரும் பின் தொடர்ந்தனர்).
இடமில்லை, இடமில்லை,
தமிழ்நாட்டில், இந்தியத் துணைக் கண்டத்தில்,
மீண்டும் மனுதர்மத்திற்கு, மீண்டும் குலதர்மத்திற்கு
இடமில்லை என்பதை நிரூபிப்போம்!
போராடுவோம், வெற்றி பெறுவோம்!
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.V
