சென்னை, மே 16-
அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஏற்கெனவே முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், தற்போது அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர் களும் பகிரங்கமாகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டி வனத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுகவினர் நடத்திய ஆலோசனை கூட்டமும், அதைத் தொடர்ந்து அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகளும் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளன.
திண்டிவனம் நகர அய்ந்தாவது வார்டு கிளைக் கழகச் செயலாளர் அய்யப்பன் தலைமையில், அவைத்தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிர்வாகிகள், அதிமுக தலைமை மற்றும் அதன் நிர்வாக முடிவுகளுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளையும், 5 அதிரடி கேள்வி களையும் முன்வைத்தனர்.
தொண்டர்கள் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டுகள்
விதிமீறி பதவி வழங்கல்: கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை, விதிப்படி 6 ஆண்டுகள் முடியும் முன்பே மீண்டும் சேர்த்து, அவருக்கு மாவட்டப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்குக் கீழே எங்களால் வேலை செய்ய முடியாது.
உள்ளாட்சித் தேர்தல் பயம்: எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க நாங்கள் தயாராக இல்லை. மக்கள் மத்தியில் இவருடைய பெயரைக் கூறி ஓட்டு கேட்கவே எங்களுக்கு அச்சமாக இருக்கிறது.
தோல்விக்கு விளக்கமில்லை: அடுத்தடுத்து சந்தித்த தேர்தல் தோல்விகளுக்கான காரணங்கள் குறித்து, பொதுக்குழுவைக் கூட்டி தலைமை இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
“எம்.ஜி.ஆர், அம்மா வளர்த்த கட்சியை அழிக்காதீர்கள்!”
“ஒன்று பிரிந்து சென்றவர் களை மீண்டும் சேர்த்து கழகத்தை ஒன்றிணையுங்கள்; இல்லை யென்றால் கண்ணியமான முறையில் பதவியை விட்டு விலகுங்கள். இந்தத் தியாகக் கட்சியை வழி நடத்த தகுதியானவர்கள் பலர் இருக்கிறார்கள்.”
கட்சியின் உயர் மட்டத் தலைவர் கள் மட்டுமன்றி, தற்போது கிளை மட்டத்தி லிருந்தும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக “பதவி விலகல்” முழக்கங்கள் ஒலிக்கத் தொடங்கியிருப்பது அதிமுக தலைமைக்கு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
