திருவாங்கூர் சமஸ்தானம் (33) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’

மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி

கட்டுரை, ஞாயிறு மலர்

நீதிமன்றத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. நாகம்மையாரும், அவருடன் நின்ற மகளிர் அணியினரும் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தனர். குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்த தந்தை பெரியார், தான் கொண்டு வந்த அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார். “இந்த நீதிமன்றம் நியாயம் செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. விசாரணை வெறும் வேஷம். மக்களிடையே சமாதானம் உண்டு பண்ண வேண்டும் என்ற நோக்கத்தோடே நான் வைக்கம் வந்தேன். நான் வைக்கம் வந்ததற்கு என்ன தண்டனை விதித்தாலும் ஏற்றுக்கொள்வேன்” என்பதே தந்தை பெரியார் வாசித்த அறிக்கை.

நீதியரசர் அடுத்த வாய்தா கொடுத்துப் போகச் சொன்னார். தந்தை பெரியாரோ, தான் வெளியே போக விரும்பவில்லை என்றும், தன்னை ரிமாண்டில் வைக்கட்டும் என்றும் கூறிவிட்டார். நீதியரசர், தந்தை பெரியாருக்கு ஒரு மாத வெறுங்காவல் தண்டனையும், 50 ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் ஒருவாரம் கடுங்காவல் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். தந்தை பெரியார் தண்டனையை அனுபவிக்க “அருவிக்குத்து” சிறையில் அடைக்கப்பட்டார்.

‘வைக்கம் போராட்டம்’ நடக்கும்போது அதில் முதலில் பங்கேற்றவர்கள் தந்தை பெரியாரின் மனைவி நாகம்மையாரும், அவரது தங்கை கண்ணம்மாளும்தான். பின்பே பல பெண்கள் அப்போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு நாள் அவர்களும், திருமதி. முத்துசாமியும், கீழ் ஜாதிப் பெண் ஒருவரும், குளித்துவிட்டு கோயிலுக்குள் செல்ல முயன்றனர். அப்பொழுது பார்ப்பான் ஒருவன் கையில் கம்போடு அவர்களைத் தடுத்தான். நாகம்மையார் அவனோடு வாதம் செய்தார்.

“அவர்ணஸ்த தொண்டரோடு வந்தால் அனுமதியில்லை” என்று கூறினான். வாக்குவாதம் நீண்டும் அவன் கடைசிவரை கோயிலில் நுழைய அவர்களை அனுமதிக்கவே இல்லை. அடுத்த நாள் பிற்பகல் மழை கொட்டிக் கொண்டிருந்தது. நாகம்மையாரும் மற்ற பெண் தோழர்களும் பிற்பகல் 12 மணியிலிருந்து, மூன்று மணி வரை கோயிலின் முன் மழையில் அமர்ந்தவாறு சத்தியாகிரகம் செய்தனர்.

வைக்கம் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்தது. அதை கண்ட பார்ப்பனர்கள் ஒரு தந்திரம் செய்தனர். கீழ்ஜாதிக்காரர்களை கோயில் தெருக்களில் நடக்க அனுமதிக்கலாமா என்று கடவுளிடம் கேட்டு முடிவெடுக்கலாம் என்று ஒரு புதுக் கதையைக் கட்டிவிட்டனர். அதேபோல் ஒரு நாள் மகா தேவருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, பூக்கட்டிச் சாத்தி கடவுளிடம் அனுமதி கேட்டனர். அப்போது மாலையில் இருந்து கீழே விழுந்தது ஒரு பூ. உடனே கடவுள் அனுமதித்து விட்டார் என்று சில பார்ப்பனர்கள் கூறினர். ஆனால், தலைமை பூசாரி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, இரண்டாம் முறை பூ  கட்டி கடவுளிடம் ‘குறி’ கேட்டார்கள். இம்முறையும் ஒரு பூ கீழே விழுந்தது. ஆனால், பார்ப்பனர்களுக்கு அதை எற்க மனமில்லை. கடவுள் மேல் பழியைப் போட்டு, சத்தியாகிரகத்தை முறியடிக்கலாம் என்று நினைத்த நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு  ஏமாற்றமே கிடைத்தது.

ஆனால், அவர்கள் நினைப்பிலிருந்து பின் வாங்கவில்லை. சத்தியாகிரகிகளை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடுத்த முயற்சியைத் துவக்கினர். எதிரிகளை அழிக்கச் செய்யும் யாகமான “சத்ரு சங்ஹார யாகம்” என்பதனை செய்து சத்யாகிரகிகளை ஒடுக்குவது என்று முடிவெடுத்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். (சான்று: பழ.அதியமான், “வைக்கம் போராட்டம்”)

வைக்கம் போராட்டத்தில் காந்தியார் ஆரம்பம் முதலே பெரியதாக ஆர்வம் காட்டவில்லை. கேரளத் தலைவர்கள் கைதானபோது முக்கியத் தலைவர்களை அனுப்பக் கேட்டபொழுது அவர் அனுப்பவில்லை. தமிழ் நாட்டுக்காரர்களை கைகாட்டி விட்டார். தமிழ்நாட்டில் இருந்த இராஜகோபாலாச்சாரி போன்ற பார்ப்பனர்களோ இங்கிருந்து யாரையும் கேரளா அனுப்பத் தயாராக இல்லை. அதையும் மீறித்தான் ராமசாமி நாயக்கர் வைக்கம் சென்றார். காந்தியார் இதோடு நிறுத்தவில்லை. “கோயில் நுழைவு என்பது இந்து மதக்காரர்களின் சொந்தப் பிரச்சினை. அது இந்து மதத்தவரைச் சார்ந்தது.

இதில் வேறு யாரும் நுழைவதென்பதை (ஜார்ஜ் ஜோஸப் போன்றவர்கள்) ஏற்றுக் கொள்ள முடியாது. வைக்கம் போராட்டத்தில் ஜார்ஜ் ஜோசப் போன்றவர்கள் ஈடுபட்டது தவறு என்று சுட்டிக் காட்டினேன். வைக்கம் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்த ஜார்ஜ் ஜோசப் அதை ஏற்றுக்கொண்டு, மன்னிப்பு கேட்டுக் கொண்டு ஜெயிலிலிருந்து வெளியே வந்தார்” என்றார் காந்தியார். (ஆனால், ஜார்ஜ் ஜோசப் மன்னிப்புக் கேட்கவில்லை. வெளியேயும் வரவில்லை என்பதே உண்மை).

“கோயில் நுழைவு சத்தியாகிரகம் என்பது ஒரு தபஸ் போன்றது” என்று அவரின் “யங் இந்தியா”வில் காந்தியார் எழுதினார். ஆனால், அவர் எழுதியதுபோல் அன்று வைக்கம் சத்தியாகிரகம் கோயில் தெருக்களில் நுழையும் போராட்டமே ஒழிய, கோயில் நுழைவுப் போராட்டம் அல்ல என்பதுதான் உண்மை.

கட்டுரை, ஞாயிறு மலர்

போராட்டக்காரர்கள் முன்னிலைப்படுத்தியதும் அதைத்தான். அதைப் பற்றி ஜார்ஜ் ஜோசப் காந்தியாரின் அறிக்கைக்கு பதில் எழுதினார். “வைக்கம் சத்தியாகிரகத்திற்கும், கோயில் நுழைவுக்கும் சம்பந்தமே கிடையாது. பொதுப் பணத்தால் நிர்வகிக்கக் கூடிய ஒரு பொதுத் தெருவில் தீண்டத்தகாத மக்கள் நடக்க உரிமையில்லை என்று தடுப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அங்கே நடப்பது அங்கு மட்டுமே உள்ள பிரச்சினை. அந்தத் தெரு கோயிலுக்கு அருகில் இருப்பது என்பது தவிர வேறொன்றுமில்லை. நாங்கள் போராடியது குடியுரிமைக்காக மட்டுமே! போராட்டம் நீண்ட காலம் நடந்தது. இறுதியில் வெற்றி தீண்டத்தகாதவர்களுக்குக் கிடைத்தது.

நான் ஒரு கிருஸ்துவன் என்பதால் காந்தியார், மன்னிப்புக் கேட்கச் சொன்னது உண்மை. நான் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று சொன்னதும் உண்மை. ஆனால், நான் மன்னிப்புக் கேட்கவில்லை” என்று எழுதினார் ஜார்ஜ் ஜோசப்.

நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன. போராட்டமும் தீவிரமடைந்த வண்ணம் இருந்தது. ஜூலை 13ஆம் நாள் போராட்டத்தில் சாத்துக்குட்டி, பி.எஸ்.பாலகிருஷ்ணன், நாகம்மையார், கண்ணம்மாள், கே.கருத்தக்குஞ்சு, பெரியாரின் சித்தி பி.கே.கல்யாணி அம்மாள், கிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் கலந்துகொண்டனர். கோயில் தெருக்களில் நுழைய பெண்கள் படை முயன்றபோது காவலர்கள் அவர்களைத் தடுத்து வழி மறித்தனர். நாகம்மையார், தடுத்து நின்ற காவலர்களைப் பார்த்து, “வழி விடுங்கள், நாங்கள் போக வேண்டும்” என்றார்.

காவலர்கள், “அது தடை செய்யப்பட்ட பகுதி. உஙகளை அனுமதிக்க முடியாது” என்று பதில் கூறினர். நாகம்மையார்,  “எதற்குத் தடை? ஏன் போகக் கூடாது?” என்று வினா எழுப்பினார். அதற்கு அவர்களைத் தடுத்த காவலர்களில் ஒருவர், “உள்ளே பாம்பு குஞ்சுகள் உண்டு;  போனால் கடிக்கும்” என்று கூற, நாகம்மையார், “உங்கள் பாம்புக் குஞ்சுகள் எங்களை ஒன்றும் செய்யாது” என்று ஆவேசமாகப் பதிலளித்துத் தங்கள் ஆர்ப்பாட்டத்தைத் தன் குழுவினருடன் தொடர்ந்தார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

வைக்கத்தில் சத்தியாகிரகம் செய்வதோடு நாகம்மையார் நிறுத்திக் கொள்ளவில்லை. போராட்டத்தின் காரணங்களை விளக்கிப் பல இடங்களில் தீவிர பரப்புரைகளையும செய்தார். அவரோடு  தந்தை பெரியாரின் தங்கை கண்ணம்மாளும், சித்தி கல்யாணி அம்மாளும், சத்யவிரதன் என்பவரும், கோட்டுக் கோயில்கல் வேலாயுதம் என்பவரும் உடனிருந்தனர்.

  1. சப்டமபர், 2.சிங்கோலி, 3.முட்டம், 4.கொல்லம், 5.மய்யநாடு, 6.நெடுங்கண்டை, 7.திருவனந்தபுரம், 8.கோட்டாறு என அவர்கள் பிரச்சாரப் பயணம் தீவிரமாக நடைபெற்றது. அதேசமயம் கோட்டயம் மாவட்டம் முழுவதும் தந்தை பெரியார் நுழையவோ, தங்கவோ கூடாது என்ற தடையை நீட்டித்து, மாவட்ட நிர்வாகம் போட்டத் தடையை அனுமதித்து திருவாங்கூர் அரசாங்கம் அரசு ஆணை பிறப்பித்தது. ஆணை எண். 563/24/Judicial என்பதே அவ்வாணை. (சான்று: “வைக்கம் சத்தியாகிரகம் – நினைவலைகள்” – பக்கம் 95)

வைக்கத்தில் பார்ப்பனர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் உரிமைகளில் தலையிடக் கூடாது என்று பார்ப்பனர்களால் எதிர்வாதம் செய்யப்பட்டது. அதற்கு தந்தை பெரியாரோடு, போராட்டத்தில கலந்துகொண்ட கோவை அய்யாமுத்து வைக்கம் நகரின் மொத்த மக்கள் தொகையில் பார்ப்பனர்கள் ஒரு சிறிய அளவே இருப்பதை நகர்ப்புற மக்கள் கணக்கெடுப்பை ஆதாரத்தோடு காண்பித்து விளக்கினார்.

கோயிலைச் சுற்றி சுமார் 100 பார்ப்பன வீடுகள் உள்ளன. இவர்கள் அனைவருக்கும் கோயில் வரும்படிதான் வாழ்வாதாரம். இவர்கள்தான் சத்தியாகிரகிகளை எதிர்க்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் “இந்தன் துருத்தி நம்பூதிரிபாடு” என்றும், இவரோடு “சூத்திர” நாயர்கள் சிலரும் சத்தியாகிரகத்தை எதிர்க்கின்றனர் என்றும் கோவை அய்யாமுத்து பேசினார்.

தந்தை பெரியாருக்கு கோட்டயம் மாவட்டத்தில நுழையத் தடை விதித்த அரசாங்க ஆணை அவருக்கு அனுப்பப்பட்டும், அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதை மீறி அவர் பேசினார். 18.7.1924 அன்று மீண்டும் கைது செய்யப்பட்டு தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார். விசாரணை நடந்தது. தந்தை பெரியார் தனக்கு வழக்காட வழக்குரைஞர்கள் யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. வழமைபோல் தான் கொண்டு வந்திருந்த அறிக்கையை வாசித்தார். அவர் பேசியதை பொறுமையாகக் கேட்ட நீதியரசர் கடைசியில் தன் தீர்ப்பை வாசித்தார்.

“ஈ.வெ.ராமசாமி நாயக்கர் வேண்டுமென்றே இரண்டாம் முறையாக சட்டத்தையும், நீதிமன்ற உத்தரவையும் பிடிவாதமாக மீறி நடந்திருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அந்த மாதிரி இனியும் அவர் நடப்பதை இந்தச் சந்தப்பத்தில் தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. முன்பு உபாயமான தண்டனை விதித்து அவர் நடத்தையைத் திருத்தப் பார்த்தோம். அது பிரயோஜனப்படவில்லை. அதனால் இந்த முறை கடுமையாக தண்டனை விதிக்கப்படுகிறது.

கட்டுரை, ஞாயிறு மலர்

19.7.1924 அன்று ராமசாமி நாயக்கர் கோட்டயம் சிறையில் அடைக்கப்படுவார். அங்கு ஒரு மாதம் இருந்தபின் திருவனந்தபுரம் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அடைக்கப்படுவார். இந்த முறை அவர் 4 மாதக் கடுங்காவல் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” என்ற தீர்ப்பை நீதியரசர் வாசித்தார். அவர் தன் தீர்ப்பில் ஏற்கெனவே  தந்தை பெரியாருக்கு விதிக்கப்பட்ட தடையாணையையும் வாசித்தார்.

“தி.பொ.கோ.27ஆவது பிரிவின்படி வைக்கம் சத்தியாகிரகத்தைச் சேர்ந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பேசிய உரைகளையும், ஏனைய நடவடிக்கைகளையும் பற்றி ஆய்வு நடத்தியதில், அவர் வெளியிட்ட அறிக்கைகளை பரிசோதித்ததில், மேலும் வைக்கத்திலோ, சுற்று வட்டாரங்களில் அவரின் வருகையோ, தங்குதலோ அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தி கலவரத்தை உண்டாக்கும் சூழ்நிலை உள்ளது என்று தெரிவதால் ராமசாமி நாயக்கர் கோட்டயம் மாவட்டம் முழுவதும் எந்த ஒரு பகுதியிலும் வருகை தரவோ, தங்கவோ செய்யக் கூடாது என்று நான் இதன் மூலம் தடை விதிக்கிறேன்” – “எனது கையொப்பத்துடன் நீதிமன்ற முத்திரையுடனும் எம்.வி.சுப்பிமணிய அய்யர், கோட்டயம் மாஜிஸ்ட்ரேட்”.

முன்பு ராமசாமி நாயக்கருக்கு விதிக்கப்பட்ட தடையாணை பற்றியும், அதை அவர் மீறியது பற்றியும், அதற்காகக் கைதாகி, அடையாளத் தண்டனை விதிக்கப்பட்டும் அவர் மீண்டும் குற்றம் செய்ததால் இப்பொழுது இந்தத் தண்டனை என்று விரிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

அன்று தந்தை பெரியார் தடை உத்தரவைக் கையில் பெற்றுக் கொண்டு, “உங்கள் உத்தரவு கைக்கு வந்தது. அதற்கு மதிப்பளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன். எங்கள் சத்தியாகிரக வெற்றிக்கு இன்றியமையாத விஷயம் வன்முறை இன்மையும், சமாதானமும், ஒற்றுமையுமேயாகும். அதற்காகவே நான் வைக்கத்திற்கு வந்து இத்தனை நாள் தங்கிப் பணியாற்றினேன். எனது உரைகளில் இது வெளிப்படுகிறது.

உங்களது இவ்வுத்தரவு என்னை சமாதான முறையிலிருந்து தடுப்பதாகும். ஏதேனும் வழிகளில் வன்முறையும், கலவரத்தையும் உண்டாக்கி இந்த இயக்கத்தை முழுமையாக ஒழிப்பதற்கு திட்டமிட்டே இது செய்யப்படுகிறது என்று நன்கு தெரிகிறது. அதனால், இவ்வுத்தரவை நான் மீற வேண்டியவனாக இருக்கின்றேன். நீங்கள் அளித்த தண்டனையை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன்” என்று தந்தை பெரியார் சிறைக்குச் செல்லத் தயாரானார்.

(சான்று: “வைக்கம் போராட்டம்” – பழ.அதியமான்)

(தொடருவேன்….)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *