சென்னை, மே 13- கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளுக்கான அரசு ஒப்பந்த நடைமுறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்பட வேண்டும் என்று, தமிழ்நாடு முதலமைச்சருக்கு, இந்திய கட்டுநர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசு ஒப்பந்தம்
இதுதொடர்பாக, அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தின் மாநில தலைவர் என்.ராமலிங்கம், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் தங்களின் தலைமையி லான புதிய அரசு, நிர்வாகம், வெளிப் படைத்தன்மை, தொழில்வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறை, அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறையின் தொழில் வளர்ச்சிக்கு கீழ்க்காணும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
வெளிப்படைத் தன்மை
கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளுக்கான அனைத்து அரசு ஒப்பந்த நடைமுறை களிலும், முழுமையான வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக அனுமதி உறுதி செய்யப்பட்ட பின்னரே, ஒப்பந்த அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும். கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப் புக்கென தனி அமைச்சகம் உருவாக் கப்பட வேண்டும். கட்டுமான தொழிலா ளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.
கட்டுமான பொருட்களின் விலை நிலைத்தன்மை, தரம் மற்றும் தடையில் லாமல் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் வகையில் ஒரு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
சிஎம்டிஏ, டிடிசிபி, ரெரா மற்றும் இதர அரசுத் துறைகளின் அனுமதிகளை விரைவாக வழங்குவதற்காக, அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த ஒற்றைச்சாளர முறை அமல்படுத்தப்பட வேண்டும்.
தற்போது கடுமையாக இருக்கும் ரெரா அமைப்பின் நடைமுறைகள் மற்றும் அதிக அபராத விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும். திட்டகால நீட்டிப்பு அனுமதிகளில் விதிக்கப்படும் கூடுதல் வைப்புத் தொகைகள் (டெபாசிட்) திருத்தியமைக்கப்பட வேண்டும். கழிவுநீர், குடிநீர் மற்றும் பிற பயன்பாட்டு சேவை அனுமதிகள் விரைவாக வழங்கப்பட வேண்டும். திட்ட செயல்பாட்டை பாதிக்கும் வகையில் அடிக்கடி மாற்றப்படும் விதிமுறைகள் தவிர்க்கப்பட்டு நிலையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
