புளூட்டோ கிரகத்திற்கும் அப்பால், சூரிய குடும்பத்தின் மிகக் குளிர்ந்த எல்லையில் அமைந்துள்ள “2002 XV93” என்ற சிறிய விண்பொருள், தனக்கென ஒரு மெல்லிய வளிமண்டலத்தைக் கொண்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சூரிய குடும்பத்தின் கடைசி எல்லையில், உறைந்து போயிருக்கும் இருண்ட பகுதியில் ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது. நாம் இதுவரை வெறும் கல் என்று நினைத்த ஒரு சிறிய பனிப்பாறை, இப்போது உலக வானியல் அறிஞர்களையே தூக்கம் கெடுக்க வைத்துள்ளது. நமது சூரிய குடும்பத்தின் விளிம்பில் சுற்றி வரும் இந்த விண்பொருளுக்கு வைக்கப்பட்ட பெயர்தான் 2002 XV93. இதன் அளவு வெறும் 500 கிலோமீட்டர் தான். அதாவது, பிரபல புளூட்டோ கிரகத்தை விட இது 5 மடங்கு சிறியது.
வழக்கமாக, இவ்வளவு சிறிய பாறைகளுக்கு வளிமண்டலம் (Atmosphere) இருக்கவே முடியாது என்பதுதான் அறிவியல் விதி. ஏனெனில், அதன் ஈர்ப்பு விசை மிகவும் குறைவு; காற்றைத் தக்கவைத்துக் கொள்ளும் சக்தி அதற்கு கிடையாது. ஆனால், அந்த விதியை உடைத்து ‘எனக்கும் ஒரு குட்டி வளிமண்டலம் இருக்கு’ என இந்த விண்பொருள் நிரூபித்துள்ளது. கடந்த ஜனவரி 10, 2024 அன்று ஜப்பானில் உள்ள வானியலாளர்கள் ஓர் அரிய நிகழ்வைக் கவனித்தனர். அந்தப் பனிப்பாறை ஒரு நட்சத்திரத்தைக் கடந்து சென்றது.
வழக்கமாக ஒரு பாறை நட்சத்திரத்தை மறைத்தால், அந்த நட்சத்திரத்தின் ஒளி சட்டென்று அணைந்துவிடும். ஆனால் இங்கேதான் ட்விஸ்ட், அந்த நட்சத்திரத்தின் ஒளி மெல்ல மங்கி, அணைந்தது. இதன் மூலம், அந்தப் பாறையைச் சுற்றி ஏதோ ஒரு மெல்லிய வாயு மண்டலம் (Atmosphere) இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். இந்த வளிமண்டலம் அங்கேயே நிரந்தரமாக இருக்க முடியாது. கணக்குப்படி பார்த்தால், இது 1,000 ஆண்டுகளுக்குள் மறைந்துவிட வேண்டும். அப்படி இருக்கையில், இப்போது அது அங்கே இருக்கிறது என்றால் சமீபத்தில் ஏதோ ஒன்று நடந்திருக்க வேண்டும்.
அந்தப் பாறையின் அடியில் இருந்து திடீரென வாயுக்கள் பீறிட்டு வெளியேறியிருக்கலாம். ஏதேனும் ஒரு வால் நட்சத்திரம் அதன் மீது மோதி, பெரும் வாயு மண்டலத்தை உருவாக்கியிருக்கலாம். இவ்வளவு சிறிய உலகில் கூட வளிமண்டலம் இருக்கிறது என்றால், விண்வெளியில் உள்ள மற்ற குட்டி உலகங்களும் நாம் நினைப்பதை விட மிகச் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று அர்த்தம். ஒருவேளை, உயிரினங்கள் உருவாவதற்கான வேதியியல் மாற்றங்கள் இங்கேயே கூடத் தொடங்கியிருக்கலாம்.
