சிறீவிஜயபுரம், ஏப். 30- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, அரசுமுறைப் பயணமாக அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்குச் சென்றுள்ளார். கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி அங்கு சென்ற அவர், பல்வேறு தரப்பினரைச் சந்தித்து வருகிறார்.
நிகோபர் மாவட்டத்தின் கேம்ப்வெல் பகுதிக்குச் சென்ற ராகுல்காந்தி, அங்குள்ள பழங்குடியின சமூகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, ஒன்றிய அரசால் செயல்படுத்தப்பட உள்ள ‘கிரேட் நிகோபார் உள்கட்டமைப்பு திட்டம்’ குறித்து பழங்குடியின மக்கள் கடும் அச்சம் தெரிவித்தனர்.அவர்கள் முன்வைத்த முக்கியப் புகார்கள்:
இத்திட்டம் குறித்த முறை யான தகவல்கள் மக்களுக்கு வழங்கப் படவில்லை. இத்திட்டத்தால் தீவின் இயற்கைச் சமநிலை மற்றும் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பழங்குடியினரின் நில உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் இதில் புறக்கணிக்கப்படுகின்றன. தங்களின் கவலைகளை அரசு காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்றும், வாழ் விடங்களைப் பாதுகாத்திட நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தியிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தச் சந்திப்புகளின் போது உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். பழங்குடியினரின் உரிமைகளுக்காகத் நாடாளுமன்றத் தில் குரல் எழுப்பப்போவதாக ராகுல்காந்தி இந்த ஆலோசனையின் போது உறுதியளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் தென்முனையான இந்திரா பாயிண்ட் பகுதிக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டார். அங்குள்ள முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி அவர் மரியாதை செலுத்தினார்.

