சென்னை, ஏப். 24- தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்ததன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நேற்று (23.4.2026) நிறைவடைந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பணப்பட்டுவாடாவை தடுக்க அமைக்கப்பட்ட பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு திரும்பப் பெறப்பட்டது. தேர்தலில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவுக்கான அவசியம் இதுவரை எழவில்லை.
அனைத்து பூத்களிலும் பதிவான வாக்கு விபரங்களை தேர்தல் பார்வையாளர்கள் இன்று (24.4.2026) சரிபார்ப்பார்கள். இதில் குளறுபடி கண்டறியப்பட்டால் அந்த பூத்தில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படும். தமிழ்நாட்டில் மொத்தம் 62 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மய்யங்கள் அமைக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை மய்யங்களில் துணை ராணுவம், காவல்துறையினர் இணைந்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை நிபந்தனைகளுடன்
விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்
ராமேஸ்வரம், ஏப். 24- ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது. கடந்த 8 மற்றும் 14ஆம் தேதி எல்லை தாண்டியதாக கைதான மீனவர்களை கிளிநொச்சி நீதிமன்றம் விடுவித்தது. விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்கள் மெருஹானா முகாமுக்கு கொண்டு செல்லப்பட உள்ளனர். முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் ஓரிரு நாட்களில் விமான மூலமாக தாயகம் அனுப்பி வைக்கப்படுவர்.
ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தில்
வேலை வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம்
எல்.அய்.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 180
* கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: 21 – 30 வயது வரை,
* ஊதிய விவரம்: ரூ.38,709/- முதல் ரூ.41,509/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: இணையவழி தேர்வு, நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: இணையவழி
* கடைசி தேதி: 30.04.2026
* மேலும் விவரங்களுக்கு: https://ibpsreg.ibps.in/licjamar26/
