பாட்னா, ஏப். 16- பீகார் மாநிலத்தில் சுமார் 8,937 நீர்நிலைகள் காணாமல் போய் உள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீர்நிலைகள் காணவில்லை!
அசாம், பீகார், டில்லி, லடாக் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் சார்பில் கடந்த ஆண்டு 2ஆவது நீர்நிலைகள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
2018-2019ஆம் ஆண்டில் பீகாரில் பதிவாகி இருந்த 45,793 நீர்நிலைகளில், 36,856 மட்டுமே இன்னும் மிஞ்சியிருப்பது இந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அதாவது 8,937 நீர்நிலைகள் காணாமல் போய் உள்ளன.
இந்தக் கணக்கெடுப்பின் படி, இந்த நீர்நிலைகளில் 45 சதவீதம் பீகார் அரசுக்கு சொந்தமானவை, இருப்பினும் மாநில வருவாய் மற்றும் நிலச் சீர்திருத்தத் துறையிடம் எத்தனை நீர்நிலைகள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன என்பது பற்றிய தகவல் இல்லை.
“நாங்கள் நீர்நிலை கணக்கெடுப்பு முடிவுகளை கவனித்து வருகிறோம், மேலும் ஆக்கிரமிப்பு இல்லாத பொதுக் குளங்கள் குறித்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையைப் பெறுவோம்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
85 சதவீதம் நீர்நிலைகள் கிராமப்புறங்களில் இருப்பதாக கணக்கெடுப்பு காட்டுகிறது. பெரும்பாலானவை (சுமார் 91 சதவீதம்) குளங்கள், மற்றவை ஏரிகள், நீர்த் தேக்கங்கள், தடுப்பணைகள் மற்றும் கசிவுநீர் குட்டைகள் ஆகும்.
வடிவேல் காமெடி
ஒரு திரைப்படத்தில நகைச்சுவை நடிபர் வடிவேல் என் கிணற்றைக் காணோம் என்று புகார் கொடுப்பார். அதை நிஜமாக்கும் வகையில் இந்தச் சம்பவம் நடைபெற்று உள்ளது.

