புதுடில்லி, ஏப்.12– 2026-2027 கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பில் 3ஆவது மொழியை (R3) அறிமுகப்படுத்துவதைக் கட்டாயமாக்கியுள்ளதாக ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), ஏப்ரல் 9 அன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
7 நாட்களுக்குள் இதனை நடைமுறைப் படுத்துமாறு அனைத்து இணைவு பெற்ற பள்ளி களுக்கும் உத்தரவிட்டுள்ள ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம், இந்த நடவடிக்கையை அவசரமானது மற்றும் கட்டாயமானது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், பாடப்புத்தகங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், அனைத்து பள்ளிகளும் உடனடியாக இதை அமல்படுத்தத் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளது.
பல பள்ளிகள் ஏற்கனவே மூன்றாவது மொழியை (R3) அமல்படுத்தத் தொடங்கி விட்டன என்பது தெரிய வந்துள்ளது. மற்ற அனைத்து பள்ளிகளும் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 7 நாட்களுக்குள் இதை உறுதி செய்ய வேண்டும் என்று இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று சி.பி.எஸ்.இ தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 3ஆவது மொழியை அமல்படுத்தி, அதிகாரப்பூர்வ பாடப்புத்தகங்கள் வெளியிடப்படும் வரை, உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி 3ஆவது மொழியை உடனடியாகக் கற்பிக்கத் தொடங்குமாறு பள்ளிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
தேர்வு செய்யப்பட்ட 3ஆவது மொழியைப் பள்ளிகள் முறைப்படி அறிவிப்பதோடு, அதனை ஓ.ஏ.எஸ்.அய்.எஸ். (OASIS) இணையதளத்திலும் பதிவேற்ற வேண்டும், இந்த நடைமுறையை மண்டல அலுவலகங்கள் கண்காணிக்கும் என்றும் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. முக்கியமாக, சி.பி.எஸ்.இ (CBSE) இந்த ஆரம்பகால அமலாக்கத்தை எதிர்கால பாடத் தேர்வுகளுடன் இணைத்துள்ளது. அதாவது, 6-ஆம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படும் மொழிகள் மட்டுமே பின்னாட்களில் உயர் வகுப்புகளில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பள்ளியால் 6-ஆம் வகுப்பில் அறிமுகப் படுத்தப்படும் ஆர்.3 (R3) மொழிகள் மட்டுமே, அந்தப் பள்ளியில் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் விருப்பங்களாகக் கிடைக்கும்,” என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்த உத்தரவு, தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (என்சிஎப்) 2023இன் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டது. இது ஆர்.1, ஆர்.2, ஆர்3 (R1, R2, R3) மாதிரியின் கீழ் பன்மொழி கற்றலை வலியுறுத்துகிறது. இந்தக் கட்டமைப்பின் கீழ், மாணவர்களுக்கு மூன்று மொழிகள் கற்பிக்கப் படுகின்றன. அதன்படி ஆர்.1 வட்டார மொழி அல்லது தாய்மொழி, ஆர்.2 மற்றொரு இந்திய மொழி அல்லது ஆங்கிலம், ஆர்.3 மூன்றாவது மொழி (பெரும்பாலும் கூடுதல் இந்திய மொழி) இருக்கும்.
கற்பவர்களிடையே “மொழித் திறன், கலாச்சார புரிதல் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை” மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்று சி.பி.எஸ்.இ கூறியுள்ளது. இதன் அவசரத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ள சி.பி.எஸ்.இ, “உடனடியாகவும் பயனுள்ள முறையிலும் அமல்படுத்துவதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கை களையும்” எடுக்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தி யுள்ளது.
மேலும், மண்டல அதிகாரிகள் இதனைத் தொடர்ந்து கண்காணிப் பார்கள் என்றும் எச்சரித்துள்ளது. இது அவசரமானது மற்றும் கட்டாயமானது எனக் கருதப்பட வேண்டும்,” என்று அந்தச் சுற்றறிக்கை கூறுகிறது. ஆனால் சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ள இந்த அவசர நடவடிக் கைக்கு தி.மு.க. சார்பில் பெரும் எதிர்ப்பு எழுந் துள்ளது.
இது குறித்து தமிழச்சி தங்க பாண்டியன் தனது எக்ஸ் தளத்தில் வெளி யிட்டுள்ள பதிவில், தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளாலும், பேரறிஞர் அண்ணாவின் தொலைநோக்குப் பார்வை யாலும், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மரபாலும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் மொழித் திணிப்புக்கான எந்தவொரு முயற்சியையும் திராவிட மாதிரி அரசு தொடர்ந்து உறுதியாக எதிர்க்கும். கல்வி வலுவூட்ட வேண்டுமே தவிர, சுமையாக இருக்கக் கூடாது.
கொள்கை கலந்தா லோசிக்க வேண்டுமே தவிர, ஆணையிடக் கூடாது என்று பதி விட்டுள்ளார்.

