வெ. முருகன்
ஆக்ஸ்ஃபோர்டு தமிழ்-தமிழ்-ஆங்கிலம்
மற்றும் ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதிகளின் ஆசிரியர்
தொல்தமிழின் செம்பாதிக்கு மேற்பட்டதாக அமையும் அகப்பாடல்கள் பேசும் காதலானது முற்றிலுமாக ஆண் பெண் தன்விருப்புரிமை சார்ந்தது (freedom of choice in love); புறக் குறுக்கீடுகள் எதுவும் இல்லாதது. அதாவது, மொழி, மதம், சாதி முதலிய வேற்றுமை பாராதது. வயதுவந்த ஓர் ஆணும் ஒரு பெண்ணும் முன்திட்டமிடல் இன்றித் தற்செயலாகச் சந்தித்து இயற்கையான ஆண் பெண் பால் ஈர்ப்பு என்னும் விதிக்கு உட்பட்டு கண்கள் ஒன்றுகலந்து அக்குறிப்பின் வழியாக உள்ளம் ஒன்றுபடும் நிகழ்வே இக்காதலாகும். தொல்காப்பியர் இதனைக் கீழ்வருமாறு வரைமுறைப்படுத்துவார்.
ஒன்றே வேறே என்றுஇரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப. (1036)
இவ்விருவர் இடையேயான காதல் நிகழ்வின் முன்னெடுப்பை நிகழ்த்துவன ஈரிணைக் கண்களாகும்.
நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்
கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும். (1039)
கண்கள் கலந்த நிலையில் இருவழிக் காதல் அரும்பத் தொடங்குகிறது.
குறிப்பே குறித்தது கொள்ளும் ஆயின்
ஆங்கு அவை நிகழும் என்மனார் புலவர். (1040)
திருவள்ளுவர் கண்களின் வினையாடலைக் கண் களவு என்றும் காதற்பயிர்க்கு நீர்ப்பாய்ச்சுதல் என்றும் நயம்பட உரைப்பார். (1092, 1093)
இயற்கைப் புணர்ச்சி என்ற பொருள் பொதிந்த சூழலியல் கருத்தியல் சொல்லால் தொல்தமிழ் விவரிக்கும் இக்காதல் முகிழ்க்கும் நிகழ்வை ஒரு குறுந்தொகைப் பாடல் (40) ஓர் அழகிய கவிதையாக்குகிறது.
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே
– செம்புலப்பெயனீரார்
இலண்டன் சுரங்க இரயில் நிலையத்தில் இப்பாடல் பொறித்து வைக்கப்பட்டுள்ளமை உலகின் தலைசிறந்த காதல் பாடல்களில் இதுவும் ஒன்று என்பதற்கான உறுதிச் சான்றாகக் கொள்ளலாம். தமிழ் மண் இவ்வையத்திற்கு வழங்கியுள்ள இலக்கியக் கொடைகளில் ஒன்று இப்பாடல் என நாம் பெருமை கொள்ள முடியும், ஆண் பெண் காதலானது மதம், இனம், மொழி, நாடு என்னும் தடைக்கற்களை உடைத்தெறியும் வல்லமை வாய்ந்தது; செவ்வனே பண்படுத்தப்பட்ட நிலத்தில் பெய்யும் மழைநீர் போன்று இரு உள்ளங்கள் ஒன்றுபடும் நிகழ்வு என்பதே தொல்காப்பிய ஏடும் குறுந்தொகைப் பாடலும் வள்ளுவர் குறளும் கூறும் காதல் இலக்கணம். இதுவே உலகிற்குத் தொல்தமிழர்கள் வழங்கியுள்ள செய்தியும் பாடமும் ஆகும்.
இனி, மேற்கூறிய குறுந்தொகைப் பாடலில் தெளிபொருளும் குறிப்புப் பொருளுமே அன்றி ஒரு மருத்துவ அறிவியல் உட்பொருளும் (subtext) இழையோடிச் செல்வதை இன்றைய அறிவியல் ஆய்வுகள் மெய்ப்பிக்கக் காணலாம். இவ்வுட்பொருள் இன்ன வகையானது என்பதை உலகப் புகழ்பெற்ற Nature ஆய்விதழில் வெளிவந்த ஒரு கட்டுரை (Annals of Human Biology, 2017, vol.44, No: 2: 99-107) விளக்கப்படுத்துகிறது. இதன் சுருக்கமான தமிழாக்கமாவது:
குருதி உறவுடைய ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்வதும் பிள்ளை பெற்றுக் கொள்வதும் மரபியல் நோக்கில் நீண்ட காலமாகவே கவலைக்குரிய ஒரு விடயமாகவே பார்க்கப்படுகிறது. இதன் முதன்மைக் காரணமாவது, இவ்வுறவு இதன் கால்வழியினருக்கு மரபியல் உடற்கேடுகளும் மற்றும் பல உடற்சிக்கல்களும் மிகுதிப்படும் இடர்வாய்ப்பைத் தரவல்லது என்பதாகும். குருதிவழி உறவுடையோர் மணம் செய்துகொள்வது மரபியல் நோக்கில் உசிதமானது அன்று என்பதற்கான மிக முக்கியமான காரணிகள் பின்வருமாறு:
பால்சாரா மரபுத்திரி ஒடுக்கக் கோளாறுகள் (Increased Risk of Autosomal Recessive Disorders)
குருதி உறவினர் உடற்சேர்க்கையில் பொது முன்னோருடைய மாற்றமுற்ற மரபணுவின் இரு படிவங்கள் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வந்தமைவதற்கான வாய்ப்பு மிகுந்து காணப்படுகிறது. இதன் விளைவாகப் பிள்ளைகளுக்கு நார்மிகைப்புக் கட்டிகள் (cystic fibrosis), குருதியழிவுச் சோகை (thalassemia), அரிவாள் அணுச்சோகை (sickle cell anemia) முதலிய மரபியல் கோளாறுகள் உண்டாவதற்கான இடர் வாய்ப்பு பெரிதும் மிகுந்து காணப்படுகிறது.
மரபணு ஒன்றாந்தன்மை (Genetic Homogeneity)
குருதி உறவினர் உடற்சேர்க்கையினால் குடும்பத் தில் மரபணு ஒன்றாந்தன்மை மிகுந்தமையக் காணலாம். ஒரு மக்கள் தொகுதியில் மரபணுப் பல்வகைமை (Genetic diversity) பொதுவாக நலம் பயக்கக்கூடியது. ஏனெனில் சுற்றுச்சூழல் சவால்களுக்கு இது மிக்க பரந்துபட்ட அளவிலான எதிர்வினைகளைக் கட்டமைக்க வல்லது. குருதிவழி உறவானது மரபணுப் பல்வகைமையைச் சுருக்கிவிடுகிறது. மேலும் மரபணு ஒன்றாந்தன்மை தீங்கிழைக்கும் இரு பெற்றோர் வழியான இரட்டைப் படிவங்கள் மிகுந்து தோன்றக் காரணமாகி மரபியல் கோளாறுகளை மேலும் மிகுவிக்கிறது.
மரபணு மாற்றுரு வெளிப்பாடு (Expression of Recessive Alleles)
குருதி இணையர் சேர்க்கையில் இரண்டு பெற்றோரும் ஒரே வகையான மரபணு மாற்றுருக்களைத் தாங்கியிருக்கக் கூடுதலான வாய்ப்புள்ளது. இம்மாற்றுருக்கள் தீத்திறக் கூறுகளைக் குறிக்கொள்ளுமேயானால், அவை பிள்ளைகளிடம் வெளிப்படுவதற்கான வாய்ப்பு மிகுந்து அதனால் கால்வழி நோய்ப்பாடுகளைப் பெருக்கி வளர்ச்சி மந்தம் மற்றும் பிற நலமிலாச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
மரபியல் நோய்ப்பாடுகளின் பன்மத் தலைமுறை திரட்சி (Multigenerational Accumulation of Genetic Defects)
குருதி உறவினர் மணமானது ஒரு குடியில் தலைமுறைகளின் ஊடாக மரபியல் ஊனங்களை பெருக்கமுறச் செய்யவல்லது. அதாவது, ஒவ்வொரு தலைமுறைத் தொடர்ச்சியின் ஊடாகவும் தீய மரபணுக்களின் பன்மப் படிவங்களைக் குடிமரபில் பெறுவதற்கான, மரபியல் நோய்ப்பாடுகளின் இடர் வாய்ப்பு மிகுவதற்கான மற்றும் குடிமரபின் ஒட்டுமொத்த நல நிலையும் வாழ்திறனும் குன்றுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
அருமரபணு மாற்றப் பெருக்கம் (Amplification of Rare Mutations)
குடிக் கிளைய வரையத்தின் ஒரு கிளையில் உண்டாகும் தீத்திற அருமரபணு மாற்றம் விரிந்து பரவக்கூடும். இதன் விளைவாக, பொது நிலையில் அரிதாக உள்ள குறிப்பிட்ட நோய்ப்பாடுகள் பரவலான பெருக்க நிலையை அடையக்கூடும்.
கருத்தரிப்புத் திறன் சிறுகலும் பிள்ளை இறப்பு வீதம் மிகுதலும்
குருதி உறவுடைய இணையர்களிடையே மலட்டுத் தன்மையின் உயர் வீதத்தையும் பிள்ளை இறப்பு அதிகப்பாட்டையும் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. இவை பெரும்பாலும் பிள்ளைகளின் மரபியல் கோளாறுகள், உடல் பிறழ்வடிவங்கள் அல்லது வேறு நலச் சிக்கல்களோடு தொடர்புறுத்தப்படுகின்றன.
இறுதியாக, குருதி உறவு மணத்திற்குச் சில சமூகங்களில் பண்பாட்டு, சமூக அல்லது பொருளாதாரக் காரணிகள் நிலவிடினும், மரபியல் நிலையில் இவ்வுறவு மிகுதியான இடர் வாய்ப்பை முன்னிறுத்துகிறது. கால்வழி நோய்களுக்கான கூடுதல் வாய்ப்பு, குடியில் காணும் குறைவான மரபணுப் பல்வகைமை ஆகியவை நெருங்கிய குருதி உறவினரை மணம் கொள்ளத் துணியுமுன் எச்சரிக்கையாயிருப்பது அறிவின்பாற்பட்டது என்ற உணர்வை உண்டுபண்ணுகிறது.
மத, இன, மொழி வேறுபாடு கடந்த திருமணப் பிணைப்பும் நெருங்கிய உறவினர் மண உறவைத் தவிர்த்தலுமே தொல்தமிழ் கூறும் இயற்கைப் புணர்ச்சியின் எதிர்காலவியப் பொருத்தப்பாடும் பாடமும் ஆகும். குருதி உறவுப் பிணைப்பின் மருத்துவத் தீவிளைவுகளைத் தொல்தமிழர் அறிந்திருந்தனரோ எனின் அல்லர் எனப் புறந்தள்ளிவிடுதல் அறிவுடைமை அன்று. காரணம், இம்மக்கள் 5500 ஆண்டுகட்கு முன்பே மீஉயர் வெப்ப நிலையில் இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் அறிந்திருந்ததைச் சிவகளைத் தொல்லியல் எச்சங்கள் சான்றுரைக்கின்றன. தாவரங்கள் உயிர்ப் பொருள்கள் எனவும் (1518) அண்டம் நிலம், நீர், தீ, வளி, விசும்பு ஆகியவற்றின் வேதியியல் கலவை எனவும் (1581) பேச்சொலிகள் உடலின் எட்டு உறுப்புகளின் மாறுபட்ட வினையாடல்வழித் தனித்தனி ஒலியியல் பண்புகளுடன் பிறக்கும் வகையினையும் (83) தொல்காப்பியர் பேசுவது அன்னாரின் அறிவியல் மேதைமைக்குச் சான்று பகர்வன.
முத்தாய்ப்பாக, அகப்பாடல்கள் போற்றும் தமிழ்க் காதலும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ (புறநானூறு 192), ‘யாதானும் நாடாமல் ஊராமால்’ (குறள் 397) என்னும் தொல்தமிழ்க் கவிதை முழக்கங்களும் வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் உயர்திணை எனத் தொல்காப்பியம் இலக்கணம் வகுப்பதும் ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பதைக் காண்க. அல்குருதிவழி மணமுறையே உலகிற்குத் தொல்தமிழ் வழங்கியுள்ள அருங்கொடையாகும். இதுவே இந்திய ஆரியம் கண்ட சடங்கு வழிப்பட்ட எண்பான் திருமண முறைகளான பிரம்மம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், அசுரம், இரக்கதம், பைசாசம், கந்தர்வம் என்னும் வைதீகத் திருமணங்களின் தமிழ் மாற்று நெறியாகும்.

