கேரளத்தில் இருக்கும் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு வயது வித்தியாசம் இன்றி அனைத்துப் பெண்களும் சென்று ‘சாமி தரிசனம்’ செய்யலாம் என்று கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் மேற்கண்டத் தீர்ப்புக்கு எதிராக கேரளம் மட்டுமில்லாமல், நாடு முழுவதும் எதிர்ப்பைக் கிளப்பி விட்டனர், பக்திப் போர்வையில் உள்ளவர்கள் – சங்கிகள்! மேலும் இந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு சீராய்வு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, மனுக்கள் அனைத்தையும் பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், சீராய்வு மனுக்கள் மீதான வழக்குகளை ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை விசாரணை நடத்தும் என்று அறி வித்தது. இந்த நிலையில், மேற்கண்ட சீராய்வு மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, எம்.எம்.சுந்தரேஷ், அசானுதீன் அமானுல்லா, அரவிந்த் குமார், அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ், பிரசன்னா பி வராலே, ஆர்.மகாதேவன் மற்றும் ஜாய்மால்யா பாக்ஷி ஆகிய ஒன்பது பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இந்து மதத்தை, தத்துவ ரீதியாக ஒரு வாழ்க்கை முறையாக விவரிக்கலாம். பல உட்பிரிவுகளையும் கொண்டுள்ளது இந்து மதம். இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் அதற்கான தனி அடையாளங்கள் உள்ளன. இதே நிலைதான் இசுலாமிற்கும் பொருந்தும். இசுலாம் மதத்துக்குள்ளும் பன்மைத்துவம் உள்ளது. அதற்குள் பல பிரிவுகள் உள்ளன.
மதத்தை பகுத்தறிவு அல்லது அறிவியல் அடிப்படையைக் கொண்டு ஆராய்ந்து பார்க்க முடியாது. அதாவது அறிவியலால் விளக்க முடியாத, அனைத்தையும் உள்ளடக்கிய, சர்வ வல்லமை படைத்த ஒரு சக்தியின் மீது நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டியது இல்லை. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் அடிப்படையில் மட்டுமே ஒரு விஷயம் அத்தியாவசியமான மதச் சடங்கா? இல்லையா ? என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. அது நீதித்துறை ஆய்வின் பொருத்தமான நடவடிக்கையாக இருக்காது.
மேலும் மதப் பிரிவுகள் தங்களது விவகாரங்களை நிர்வகித்துக் கொள்வதற்கான கூட்டு அடிப்படை உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 26ஆனது உறுதி செய்கிறது. அந்த வகையில், சபரிமலை அய்யப்பன் கோயில் விவகாரத்தில் ஏற்ெகனவே கடைப்பிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயம், நம்பிக்கை அடிப்படையிலான விஷயங்கள் தொடர வேண்டும்’’ என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி பி.வி.நாகரத்னா, ‘‘இந்து கோயில்கள் என்பன அனைத்து இந்துக்களுக்கும் உரியவை. அனைத்து இந்துக்களுக்காகவும் திறந்திருக்கும்’’ என்றார்.
மேலும், நீதிபதி பி.வி.நாகரத்னா, “ஒரு பெண்ணாக எனது கருத்தைச் சொல்கிறேன்; மாதத்தில் மூன்று நாள்கள் மட்டும் தீண்டாமையைக் கடைப்பிடித்துவிட்டு, நான்காவது நாளில் தீண்டாமை இல்லை என்று சொல்ல முடியாது. நிதர்சனமான உண்மைகளை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 17 (தீண்டாமை ஒழிப்பு) ஒரு மாதத்தில் மூன்று நாட்களுக்கு மட்டும் செயல்பட்டுவிட்டு நான்காவது நாளில் மறைந்துவிடாது” என்று அழுத்தமாகக் கூறினார்
இதையடுத்து மீண்டும் குறுக்கிட்ட ஒன்றிய அரசு வழக்குரைஞர், ‘‘சபரிமலை அய்யப்பன் கோயில் என்பது ஒரு மதப்பிரிவு சார்ந்த கோயில். எனவே சட்டப்பிரிவு 26 பொருந்தும்’’ என்று கூறினார். இதையடுத்து நீதிபதி பி.வி.நாகரத்னா, ‘‘உங்களின் இந்த வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுக்கிறது. ஏனெனில் இந்து சமயத்தின் ஒரு பிரிவினரின் கீழ் வருகிறது என்று கூறினாலும், சபரிமலை அய்யப்பன் கோயில் என்பது ஒரு இந்து கோயில் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
இப்படியாக வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டுள்ளன.
‘ஒரே மதம் – அது இந்து மதம்’ என்று கூக்குரல் போடும் சங்கிகள் வழிபடுவதில்கூட ஆண், பெண் என்று பேதப்படுத்துவது ஏன்?
இதில் வெட்கக் கேடு என்னவென்றால் மத விடயங்களில் பகுத்தறிவையும், அறிவியலையும் பயன் படுத்தக் கூடாது என்று ஒன்றிய அரசின் சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதுதான்.
உண்மையைச் சொல்லப் போனால் உருவ வழிப்பாடு என்பது எப்பொழுது வந்தது? ஆதியிலிருந்து வந்ததா என்பது முக்கியமான கேள்வி.
‘‘வேத காலத்தில் பஞ்ச பூத வணக்கம்; இராமாயணம் – பாரதம் காலத்தில் வீரர் வணக்கம், புராண காலத்தில் தான் சிவன், விஷ்ணு போன்ற உருவக் கடவுள்கள்.
வேத காலத்துக்குரிய ஆசாரம் – யாகம்; இராமாயணம் காலத்துக்குரிய ஆசாரம் தவம்; புராண காலத்துக்குரிய ஆசாரம் – தீர்த்த யாத்திரை (‘‘கால்டுவெல் எழுதிய பரத கண்டம், புராதனம் வேதங்கள், இதிகாசங்கள் பற்றிய விமர்சனம்’’ – பதிப்பாசிரியர் பொ. வேல்சாமி)
‘‘இருக்கு வேதத்தில் உள்ள ஆயிரத்து இருபத்தெட்டுப் பாட்டுகளிலும் சிவன் என்ற பெயர் இல்லை, பார்வதி, உமையாள், துர்க்கை, காளி முதலிய பெயர் உடையவர்களும் இல்லை. அப்பொழுது பிள்ளையாரும், சுப்பிரமணியனும் இல்லை. வீரபத்திரனும், வயிரவனும், அய்யனாரும் அப்பொழுது இல்லை. அக்காலத்தில் லிங்கமும் இல்லை. இராமன், கிருஷ்ணன், இலட்சுமியும் இல்லை, அனுமானும் இல்லை. விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் அப்பொழுது தெரியாது. கயிலாயமும், வைகுண்டமும் அப்போதில்லை’’ (மேலே எடுத்துக்காட்டப்பட்ட அதே நூல் இவற்றைக் கூறுகிறது).
உண்மை இவ்வாறு இருக்க, இடைஇடையே கற்பிக்கப்பட்ட கடவுள், கோயில் அவதாரங்களில் பகுத்தறிவையோ, அறிவியலையோ பயன்படுத்தக் கூடாது என்பது ஏற்கத் தக்கதுதானா?
சில கால கட்டங்களில் குறிப்பிட்டவர்களின் வசதிக்காக, ஆதிக்கத்திற்காக எழுதி வைக்கப்பட்டவை களிலும் தலையிடக் கூடாது என்பது ஏற்கத்தக்கதாக இருக்கவே முடியாது. அப்படியே பார்க்கப் போனாலும், இடையில் மாற்றங்கள் வரவில்லையா? தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் கோயில் நுழைவு விடயத்தில் சட்டம் குறுக்கிடவில்லையா? தேவதாசிமுறை ஒழிக்கப்படவில்லையா? கோயில் கருவறைகளில் குளிர் சாதன வசதி (AC) எந்த ஆகமத்தில் கூறப்பட்டது? அப்பொழுது மட்டும் விஞ்ஞானம் தேவையா? உச்சநீதிமன்றம் ஏற்ெகனவே வழங்கிய தீர்ப்பில் மாற்றம் கூடாது – கூடவே கூடாது!
நாகூர் தர்கா, வேளாங்கன்னி மாதாகோயில்களில் சகல மகத்தவர்களும் இந்துக்கள் உட்படச் சென்று வழிபடுகின்றனரே அந்தக் கடவுள்கள் – பக்தர்கள் கோபித்துக் கொண்டார்களா?
கடவுள் ஒருவரே என்று கூறும் கோஷம் என்னாயிற்று?

