எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாருக்குப் பொய்யைக் கூட பொருத்தமாக சொல்லத் தெரியவில்லை!
தோல்வி அடையப்போகிறோம் என்கிற அச்சத்தால் கீழிறக்கமாக பேசுகிறார்
தேர்தல் அறிக்கையை காப்பி அடித்தது யார்? ஆதாரம் இதோ!
திருச்சி, ஏப்.11 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ‘‘அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை தி.மு.க. காப்பியடித்திருக்கிறது’’ என்றும், கலைஞர், முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கவிஞர் கனிமொழி ஆகியோரைப் பற்றி மிகவும் கீழிறக்கமாக பேசுவதைக் கண்டித்தும், அவரது பொய்களை பச்சையாக அம்பலப்படுத்தியும் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தரவுகளுடன் பதிலடி கொடுத்து உரையாற்றினார்.
திருச்சி மேற்கு தொகுதி
தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு
திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு அவர்களை ஆதரித்து, நேற்று முன்தினம் (9.4.2026) மாலை 7 மணிக்கு பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் திடலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குச் சேகரிக்கும் படியாக பரப்புரைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியசாமி தலைமையில், மாநகரத் தலைவர் ராமதாஸ் அனைவரையும் வரவேற்றார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், தொழிலாளரணி மாநிலச் செயலாளர் மு.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார். வேட்பாளர் கே.என்.நேரு அவர்கள், உதயசூரியன் சின்னத்தில் தனக்கு வாக்களிக்குமாறு மக்களிடம், கழகத் தலைவர் முன்னிலையில் வேண்டுகோள் விடுத்து சுருக்கமாக உரையாற்றினார். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
கழகத் தலைவர், திரண்டிருக்கும் மக்களில் பெருவாரியாக பெண்கள் இருப்பதைப் பார்த்து, ‘‘எங்கு பார்த்தாலும் தாய்மார்கள் உற்சாகத்தோடு வருகிறார்கள். அந்த அளவுக்கு நமது முதலமைச்சர் சாதனைகளுக்கு மேல் சாதனைகளை செய்து கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட நம் முதலமைச்சரின் தளபதிகளில் முதன்மையான தளபதியாக இருக்கக்கூடிய நம்முடைய அருமை அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்’’ என்று, எடுத்து எடுப்பிலேயே வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, வேட்பாளரை பற்றிய சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதாவது, அவர் மீது அண்மையில் பரப்பப்பட்டு வருகின்ற அவதூறுகளுக்கும், வழக்குகளுக்கும் பதில் சொல்வதாக, ‘‘எவ்வளவு அவதூறுகளை வீசினாலும், அழி வழக்குகளை எதிரிகள் போட்டாலும், நெருப்பாற்றில் நீந்தி வந்தததைப் போல அவர்கள் வந்திருக்கிறார்கள்’’ என்று பாராட்டினார். அப்பொழுது, ஆம்புலன்ஸ் வாகனம் வருகிற ஓசை கேட்டதும், அதற்கு வழிவிடச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார். மக்கள் உடனடியாக வழி விட, ஆம்புலன்ஸ் சென்றது. தொடர்ந்து பேசிய அவர்,‘‘ஸ்டாலின் ஆட்சியை நாம் மறுபடியும் கொண்டு வராவிட்டால், நமக்கு விடியலே கிடையாது’’ என்று அழுத்தம் திருத்தமாக கூறினார். ஏனென்பதற்கான காரணங்களை, ‘திராவிட மாடல்’ அரசு செய்த சாதனைகளைப் பட்டி யலிட்டார். பின்னர், ‘‘இத்த கைய சாதனைகளை செய்த ‘திராவிட மாடல்’ அரசு திரும்ப வர வேண்டாமா?’’ என்று மக்களிடமே கேள்வி கேட்டார்.
யார் நமக்கு தேவை?
மேலும் அவர், ‘‘எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், முன்பு அ.இ.அ.தி.மு.க.வை அடகு வைத்திருந்தார். இப்போது விற்பனையே செய்துவிட்டார். ஆகவே, தமிழ்நாட்டையும் மீட்க வேண்டும்; அ.இ.அ.தி.மு.க. வையும் மீட்க வேண்டும் என்றுதான் நம் முதலமைச்சர் திட்டமிட்டுச் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்’’ என்று மக்கள் அதிகம் அறிந்திராத ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டார். பின்னர், தமிழ்நாடு முதலமைச்சரின் மதியூகத்தை விளக்கும் வகையில், மகளிர் உரிமைத் தொகையைத் தடுப்பதற்காக எதிர்க்கட்சிகள் நீதி மன்றத்தை அணுகிய போது, ரூபாய் 5000/- மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி, எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியைத் தவிடு பொடியாக்கிய அரிய சாதனையைக் குறிப்பிட்ட போது, மக்கள் திரள் ஆண், பெண் பேதமில்லாமல் ஆரவாரம் செய்து முதலமைச்சரைக் கொண்டாடியது. தொடர்ந்து, சொன்னதைச் செய்யாத பிரதமர் மோடி – சொன்னதை செய்தும், சொல்லாததையும் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை ஒப்பிட்டுக்காட்டி, யார் நமக்கு தேவை? என்பதை தெளிவு படுத்தினார். தொடர்ந்து, இப்படிப்பட்ட சாதனைகளை செய்து விட்டுத்தான், வாக்கு கேட்டு வந்திருக்கிறார் நமது அமைச்சர் கே.என்.நேரு அவர்கள். ஆகவே, அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டு தனது உரையை நிறைவு செய்தார்.
ஆம்புலன்சுக்கு வழி விடுமாறு
கழகத் தலைவர்
மக்களிடம் வேண்டுகோள்!
திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேரு அவர்களை ஆதரித்து, 9.4.2026 அன்று மாலை 7 மணிக்கு, செடல் மாரியம்மன் கோயில், பீம நகர் பகுதியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அமைச்சர் அவர்களும் கழகத் தலைவருடன் வாகனத்தின் மீதிருந்தார். மக்களும் ஏராளமானோர் கூடியிருந்தனர்.
அப்போது, ஆம்புலன்ஸ் ஒன்று வரும் ஓசை கேட்டது. உடனடியாக தனது உரையை நிறுத்திவிட்டு, ஆம்புலன்சுக்கு வழி விடுமாறு கழகத் தலைவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மக்களும், உடனடியாக விலகி வழி விட, ஆம்புலன்ஸ் எவ்வித இடையூறும் இன்றி கடந்து சென்றது. கழகத் தலைவர் தனது உரையை தொடர்ந்தார்.
முன்னதாக, திராவிடர் கழகத்தின் மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை உரையாற்றினார். பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள் தொடக்க உரையாற்றினார். கழகத் தலைவர் விடை பெற்றுச் சென்ற பிறகு, தி.மு.க. மாற்றுத்திறனாளிகள் அணி அமைப்பாளர் பேராசிரியர் தீபக் நாதன் உரையாற்றினார். கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சிந்தனைச் செல்வன் கலந்து கொண்டார்.
திருவெறும்பூர் தொகுதி
தி.மு.க. வேட்பாளர்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி
தொடர்ந்து, திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை ஆதரித்து, பரப்புரை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேலகல்கண்டார் கோட்டை பெரியார் சிலை அருகில் உள்ள திரு.வி.க. திடலுக்கு பயணம் மேற்கொண்டார். இந்நிகழ்வுக்கும் திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் ஞா.ஆரோக்கிராஜ் தலைமை ஏற்றார். மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பா.லெ.மதிவாணன் அனைவரையும் வரவேற்றார். தொழிலாளரணி மாநிலச் செயலாளர் மு.சேகர், திமுக மாநகரச் செயலாளர் மு.மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார். அதைத்தொடர்ந்து இரவு 8.30 மணி அளவில் கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்விடத்துக்கு வருகை தந்தார். வேட்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், இதே நேரத்தில் வேறு இடத்தில் பரப்புரை பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் அவரது வருகை தாமதமானது. கழகத் தலைவர் ஆசிரியர் சிறப்புரையாற்றினார்.

கழகத் தலைவர் ஆசிரியர் உரை
அவர், ‘‘இந்த அளவுக்கு திட்டங்களையும், சாதனை களையும் செய்த ஆட்சி தமிழ்நாட்டு வரலாற்றிலேயே வேறு கிடையாது’’ என்று, எடுத்த எடுப்பிலேயே ஒரு பிரகடனம் போல் அறிவித்ததும், மக்கள் வெள்ளம் ஆர்ப்பரித்து படபடவெனக் கைகளைத் தட்டி, தமது உள்ளக் கிடக்கையை வெளிக்காட்டியது. அந்த சாதனைகளுக்கு அடிப்படையாக இருக்கும் தேர்தல் அறிக்கையை பற்றியும் குறிப்பிட்டார். அதாவது, ‘‘முதலில் நாயகன் என்றார்கள்! பின்னர் நாயகி என்றார்கள்! இன்றைக்கு அதுதான் உச்சநட்சத்திரம்! என்கிறார்கள்’’ என்றெல்லாம் அடுக்க அடுக்க, மக்கள் தலையசைத்து அதை ஆமோதித்தனர். நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தை இரண்டு வகைகளாகப் பிரித்துப் பேசினார்.
தி.மு.க.வைப் பார்த்துதான்
அ.இ.அ.தி.மு.க.
காப்பி அடித்திருக்கிறது!
ஒன்று, செய்திருக்கின்ற சாதனைகளைச் சொல்லி, ஓட்டு கேட்கும் அணி! அதுதான், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி! மற்றொன்று, அவதூறுகளையும், பொய்களையும் பேசுகின்ற அணி? அதுதான் தேசிய ஜனநாயக கூட்டணி என்று இரண்டு அணிகளையும் ஒப்பீடு செய்து காட்டினார். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ‘அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தி.மு.க. காப்பி அடித்திருக்கிறது’ என்று பேசி வருவதை அம்பலப்படுத்தும் விதமாக பேசினார். அதற்காக அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, அதில் குறிப்பிட்ட பகுதியை வாசித்துக் காட்டினார். அதில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு உரிமைத் தொகை மாதம் ரூ.1000–த்திலிருந்து ரூ.2000 மாக உயர்த்தி வழங்குவோம்’ என இருப்பதை வாசித்து விட்டு, ‘‘முதலில் கொடுத்தது யார்?’’ என்றொரு முக்கியமான கேள்வியைக் கேட்டார். அடுத்து, ‘‘உரிமைத்தொகை என்று பெயர் வைத்தது யார்?’’ என்று அடுத்தொரு கேள்வியையும் கேட்டார். தொடர்ந்து, ‘‘இது ஒன்று போதுமே, யார் யாரைப் பார்த்துக் காப்பி அடித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள’’ என்று, அ.இ.அ.தி.மு.க.வினுடைய தேர்தல் அறிக்கையை வைத்துக் கொண்டே, தி.மு.க.வைப் பார்த்துதான் அ.இ.அ.தி.மு.க. காப்பி அடித்திருக்கிறது என்பதை எண்பித்தார்.
கீழே இருப்பவர்களை மேலே தூக்கிவிடத்தான் ‘திராவிட மாடல்’ அரசு இருக்கிறது!
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பெரியார் சிலை அருகில், திருவெறும்பூர் தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி அவர்களை ஆதரித்து, 9.4.2026 அன்று இரவு 9 மணிக்கு மேல், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அமைச்சர், நிகழ்விடத்தின் சுற்றுவட்டாரப் பகுதியில் பரப்புரை செய்யும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அதனால், அவரது வருகை தாமதப்பட்டது. வந்தவுடன் அவரை, ‘‘வாங்க! வாங்க!’’ என்று வரவேற்ற கழகத் தலைவர் மக்களைப் பார்த்து, ‘‘நான் கீழே சென்று வேட்பாளருடன் மறுபடியும் மேலே வருகிறேன்’’ என்றார். தொடர்ந்து, ‘‘எங்களைப் போலவே நீங்களும் மேலே வர வேண்டும். கீழே இருப்பவர்களை மேலே தூக்கிவிடத்தான் ‘திராவிட மாடல்’ அரசு இருக்கிறது’’ என்று சிலேடையாக பேசியதை மக்கள் ரசித்தனர்; சிரித்தனர்!
அதேபோல் வாகனத்துக்குள் சென்று அமைச்சருக்கு மரியாதை செய்து வரவேற்றுப் பிறகு, இருவரும் ஒன்றாக வாகனத்தின் மேலே வந்தனர். இருவரையும் ஒன்றாக கண்ட மக்கள் மிகுந்த உற்சாகமடைந்து பலமாகக் கைகளைத் தட்டி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். கழகத் தலைவர் மிகுந்த உற்சாகத்துடன், ‘‘நான் ஏற்கெனவே சொன்னபடி இருவரும் மேலே வந்து விட்டோம். இதுபோல நீங்களும் மேலே வர வேண்டும். அதற்காக, உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்’’ என்று பொருத்தமாகப் பேசிவிட்டு, விட்ட இடத்தில் இருந்து தனது உரையைத் தொடங்கினார்.
கழகத் தலைவரின் இந்த சிலேடையை அமைச்சரும் ரசித்தார்.
மேலும் அவர், ‘‘முத்தமிழ் அறிஞர் கலைஞர், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கவிஞர் கனிமொழி ஆகியோரைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசி வரும் அவதூறுகளுக்கும் வருந்தினார். இவ்வளவு கீழிறக்கமாக செல்ல வேண்டுமா? என்பதை உரியவர்களுக்கு உரைக்கும்படி கண்டித்தார். தோல்வி பயம் உச்சத்தில் இருப்பது தான் இப்படியெல்லாம் உளறுவதற்குக் காரணம் என்பதையும் அம்பலப்படுத்தி, வெளிநாட்டில் இருந்து முதலீடுகள் இங்கு வந்து குவிவதை சுட்டிக்காட்டி, ‘‘மாநிலம் அமைதியாக இருந்தால் தான் முதலீடுகள் இப்படி வந்து குவியும்‘‘ என்றும், ‘‘இதுவே சட்ட ஒழுங்கு சரியாக இருப்பதற்குச் சான்று’’ என்றும், ‘சட்ட ஒழுங்கு சரியில்லை’ என்ற புரட்டுக்கு பதிலடி கொடுத்தார். கூடுதலாக திருப்பரங்குன்றம் பிரச்சினையில் அண்மையில் நீதிமன்றம் வெளியிட்ட கருத்துகளையும் சுட்டிக்காட்டி தனது கருத்துக்கு சட்ட அங்கீகாரத்தையும் தந்தார்.
பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில்
வெற்றி பெற வேண்டும்!
மேலும், இந்த சாதனைகள் தொடர்வதற்கும், ‘திராவிட மாடல்’ ஆட்சி மறுபடியும் அமைவதற்கும், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’’ என்று கூறி, தனது உரையை நிறைவு
செய்தார்.
நிறைவாக, வேட்பாளர் கழகத் தலைவர் தனக்காக வந்து வாக்கு சேகரிப்பதற்காக நன்றி கூறியும், மக்களிடம் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவும் வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில், மதச்சார்பற்ற அணி கட்சிகளின் பொறுப்பாளர்கள், தோழர்கள், பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டு கழகத் தலைவரின் உரைகளை செவிமடுத்துப் பயன்பட்டனர்.

