(பள்ளிச்சல், விழிஞ்ஞம் சாலையில் வெங்கனூர் சந்திப்பில் இருந்த, மேல்ஜாதியினரால் அசுத்தமான பள்ளிக் கூடம் (புலையர் பெண் குழந்தை வந்ததால்), ‘புதுவல் விளாகம் மலையாள பிரைமரி ஸ்கூல் (எரிக்கப்பட்ட பள்ளிக் கூடம்) அதன் எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 1983ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் அரசால் உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது. “சிறீ அய்யன்காளி நினைவு புதுவல் விளாகம் யு.பி. ஸ்கூல்” என்ற பெயரும் பள்ளிக்கு இடப்பட்டது. அய்யன்காளியின் பேரன்கள் நிர்வாகிகளாக உள்ளனர். எந்தப் பள்ளியில் ஒரு புலையர் இனப் பெண்ணைச் சேர்க்க மறுத்தார்களோ, அந்தப் பெண் உள்ளே நுழைந்ததால் தீட்டாகி விட்டது என்று எரித்தார்களோ, அதே பள்ளியில் இன்று அனைத்து ஜாதியினரும் படிக்கும் நிலை அதே பள்ளியை புலைய இனத்தவர்களே நிர்வகிக்கும் நிலை இன்று வந்துள்ளது எவ்வளவு பெரிய சமூகப் புரட்சி!)
பிள்ளையாக, சிறுவனாக இருந்தபோது ஏக்கப் பெருமூச்சு விட்டுப் பார்த்துக் கொண்டிருந்த அய்யன்காளி துணிச்சலாக மேல் ஜாதிக்காரர்களை எதிர்த்து தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்களால் இன்று கேரள மாநிலத்தில் அனைவரும் படிக்கும் வாய்ப்பைப் பெற்றனர் புலையர், பறையர், குறவர் என்ற தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பலர் படிக்கும் வாய்ப்பால் முன்னேறி பெரும் வாய்ப்பைப் பெற்றனர்.
“புலையர் கலகம்” என்று பெயர் பெற்ற கலகம் வெங்கனூர், நெய்யாற்றங்கரை, கொல்லம், மாவேலிக்கரை, சென்னிதாலா என்று திருவாங்கூர் நாட்டில் பல இடங்களிலும் கலவரம் பரவ, ஆங்கிலேயே அரசாங்கம் (சென்னை ராஜதானி – Madras Presidency) திருவாங்கூர் அரசுக்கு கண்டிப்புக் காட்டியது. வழக்கம்போல், “கெஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதுமாக” இருக்கும் திருவாங்கூர் அரசாங்கம் கடைசியில் வழிக்கு வந்தது. தீண்டத்தகாத ஜாதிகளைச் சேர்ந்த பிள்ளைகளைச் சேர்க்க மறுக்கும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் வேலையை விட்டே நீக்கப்படுவார்கள், தண்டனைக்கும் ஆளாவார்கள் என்ற உத்தரவு பிறப்பித்தது அரசாங்கம். இவ்வளவு பெரும் போராட்டங்களை நடத்தி அய்யன்காளி முடிவில் வெற்றி பெற்றார். அவர் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் கல்வியதிகாரி மிச்செல்!
அந்தக் காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கம், வெள்ளி போன்ற அணிகலன்களைக் கழுத்திலோ, கையிலோ அணிய ஜாதியத் தடை இருந்தது. தங்கம், வெள்ளி போன்ற மதிப்புள்ள பொருள்கள் நம்பூதிரிப் பார்ப்பனர்களும், ‘ஜன்மி’ சூத்திர நாயர்கள் மட்டுமே அணிய முடியும். அடிமைகளும், தாழ்த்தப்பட்டவர்களும் கற்களால் ஆன நகைகளை மட்டும், கழுத்திலும், கையிலும் அணிய முடியும். ஒருவகை பளபளப்பானக் கற்களால் ஆன அணிகலன்கள் அவை. இரும்புக் கம்பிகளால் ஆனத் தொங்கட்டான்களைத்தான் காதில் அணியலாம். அதேபோல் இரும்புக் கம்பிகளால் வளைக்கப்பட்ட வளையல்களைத்தான் கைகளில் அணிய முடியும். ஜாதிய வேறுபாட்டை உணர்த்தும் வகையில் இந்த அணிகலன்கள் இருந்தன. கல்மாலைகளையும், இரும்பு வளையங்களையும் அணிந்திருந்ததை வைத்தே அவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த அடிமைப் பெண்கள் என்று அடையாளம் கண்டு பிடிக்கவும் இந்த ஏற்பாடு உதவியது. ஆரம்பத்தில் மார்பை மறைக்கும் மேலாடை இன்றியும், கல்மாலையும், இரும்பு வளையமும் அணிந்த பெண்கள் அடிமைகள், தீண்டத்தகாதவர்கள் என்ற நிலை கிறிஸ்தவ மிஷனரிகளாலும், நாஞ்செலி தியாகத்தாலும் சற்று மாறி மேலாடை அணியலாம் என்ற நிலைக்குப் பெண்கள் வந்தனர். ஆனால், (எப்படி பார்ப்பனர்கள் “பூணூல்” அணிந்து இரு பிறப்பாளர்களாக (துவி ஜாதியினராக மாறுகிறார்களோ) தாழ்த்தப்பட்டோர் கல்மாலை, இரும்பு வளையங்கள் மட்டுமே அணிவது ஜாதிய அடையாளங்களாக நிறுவப்பட்டிருந்தன. அய்யன்காளி “இந்த அணிகலன்கள் ஜாதிய இழிவைக் காட்டும் அடிமைச் சின்னங்கள், அவற்றைக் கழட்டி வீசியெறியுங்கள்” என்று தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு அறிவுறுத்தினார். அவர் அறிவுரையை ஏற்ற பெண்கள் நெய்யாற்றங்கரையிலும், சுற்று ஊர்களிலும் கல் மாலைகளையும், இரும்பு வளையங்களையும் கழற்றி எறிந்தனர். இது மீண்டும் ஜாதியக் கொந்தளிப்பை உண்டாக்கியது. 1818இல் திருவாங்கூர் அரசால் கீழ்ஜாதியினர் ஆடை அணிவதைப் பற்றிப் பிறப்பித்த அரசாணையில் அணிகலன்கள் அணியவதைப் பற்றிய குறிப்பும் உள்ளது.
பறையர், புலையர், குறவர் போன்றோர் தங்கம், வெள்ளி போன்ற உயர்ந்த உலோகங்களால் செய்யப்பட்ட அணிகலன்களை அணியக் கூடாது என்று அந்த உத்தரவு கூறுகிறது. அணிகலன் பிரச்சினை வெங்கனூரில் துவங்கி வேகமெடுக்கத் துவங்கியது. கொல்லம் ஜில்லாவில், “பெரிநாடு” என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட இனப் பெண்கள் ஒன்று கூடினர். அவர்கள் பின்னால் அய்யன்காளியின் கடை நின்றது. பெண்கள் பொதுவெளியில் கல்மாலைகளையும், இரும்பு வளையல்களையும் அறுத்து எறிந்தனர். விவரம் முன்கூட்டியே வெளிவந்ததால் மேல் ஜாதிக்காரர்களும் அங்கு திரண்டனர். கல் மாலைகளை மீண்டும் அணியச் சொல்லிப் பெண்களைக் கட்டாயப்படுத்தினர். அவர்களை எதிர்த்துப் புலையர் படை ஆர்ப்பாட்டம் செய்தது.
இந்த அணிகலன் போராட்டமும் தீவிரமடைந்தது. கொல்லம், மாவேலிக்கரை, சென்னிதாலா என்று துவங்கிய போராட்டம் பிராக்குளம், தழவா, அஞ்சாலம் மூடு, கருவ, பனயம் போன்ற இடங்களில் இந்தப் போராட்டம் பரவியது. எப்படியும் மேல் ஜாதிக்காரர்கள் தாக்குவார்கள் என்பதை எதிர்பார்த்து புலையர்களும் ஆயுதங்களோடு ஆயத்தமாகவே இருந்தனர். 24.10.1915 அன்று அணிகலன்கள் தொடர்பான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கோபால்தாஸ் என்ற புலையர் இனத்து இளைஞர் தலைமையில் பெரிநாட்டின் செறிமூடு என்ற பகுதியில் அந்தக் கூட்டம் நடத்த ஏற்பாடானது. ஆயுதங்களோடு புலையர்களும் தாக்குதல்களை எதிர்பார்த்து பெருமளவில் கூடியிருந்தனர். “கோபால்தாஸ்தான் இந்தப் புலையர்களைத் தூண்டுகிறான். அவனை அன்று தீர்த்துக்கட்டி விடவேண்டும்” என்று மேல்ஜாதிக்காரர்களும் ஆயத்தமாகத் திரண்டனர். அவர்மேல் தாக்குதலும் நடந்தது. ஆனால், நல்வாய்ப்பாக கோபால்தாஸ் தப்பிவிட்டார். ஆனால், உடனே அது பெருங்கலவரமாக வெடித்தது. பெண்கள் கைகளில் மறைத்து வைத்திருந்த அரிவாள்கள் வெளிவந்தன. நாயர்களுக்கும், புலையர்களுக்கும் இடையே பெரும் கலவரமாக அது மாறியது. பலர் இருதரப்பிலும் வெட்டுண்டு கிடந்தனர். குருதிக்கறை தோய்ந்த அரிவாள்கள் பல இடங்களில் சிதறிக் கிடந்தன. பலர் கை, கால்கள் வெட்டுண்டு தரையில் விழுந்து அலறியவாறு கிடந்தனர். பெண்களிடம் தவறாக நடக்க முயன்றவர்களை பெண்கள் வெட்டிச் சாய்த்தனர். பலர் பெருங்காயங்களோடும், சிறு காயங்களோடும் உயிர் பிழைக்கத் தப்பி ஓடினர். பெண்கள், குழந்தைகள் பயத்தில் அலறும் சத்தம் பெரிதாகக் கேட்டது. கூச்சல், குழப்பம், வெட்டு, குத்து என்று எங்கும் கூச்சல். மொத்தத்தில் அது ஒரு போராட்டமாக இல்லை; போர்க்களமாகவேதான் காட்சியளித்தது. அடிமைகளை – அடிமைத்தனத்தை விட்டு வெளியாக விடக் கூடாது என்ற அதிகார, ஆணவத்தோடு, வெறியோடு ஒரு கூட்டம். அடிமைத்தனத்தில் இருந்து, மீண்டு, மற்ற மனிதர்களைப் போல் மானத்தோடும், உரிமைகளோடும் வாழ வேண்டும் என்ற உரிமை வேட்கையைத் தேடும் மற்றொரு கூட்டம் என்று பெருநாட்டின் செறுமூடு போர்க்களம் விளங்கியது. குறைந்தளவே இருந்த அரசாங்க பாதுகாவலர்கள் செய்வதறியாது திகைத்துவிட்டனர். உயிர் சேதங்கள், உடல் சேதங்கள், பொருள் சேதங்கள் என்று எல்லாம் முடிந்தபின் அதிகளவு அதிகாரிகளும், பாதுகாவலர்களும் வந்து கலவரத்தை ஒரு வழியாக அடக்கினர்.
ஆனால், செறுமூடு கலவரச் செய்தி காட்டுத் தீபோல் மற்ற ஊர்களுக்கும் பரவியது. வசதி படைத்த செறுமூடு பகுதியில் மேல்ஜாதிக்காரர்கள் பொங்கி எழுந்தனர். பெரிநாட்டுப் பகுதியில் மட்டுமல்ல, இனி திருவாங்கூர் நாட்டில் எங்குமே புலையர்களோ, மற்ற கீழ்ஜாதி அடிமைகளோ கலவரம் செய்யக் கூடாது. அவர்களை முழுமையாக அடக்கி விட வேண்டும் என்ற வெறியோடு, பெரிநாட்டுப் பகுதியில் உள்ள அனைத்து புலையர்கள் குடிசைகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. குடிசைகளிலிருந்த ஓரளவு சிறிய, சிறிய பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. பயந்து அலறி குடிசைகளிலிருந்து அலறியவாறு தப்பி ஓடும்பொழுது தெருக்களிலேயே வெட்டப்பட்டனர். பெண்கள் எல்லாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள்.
புலையர்கள் ஊரை விட்டே தப்பினால் போதும் என்று ஓடிப் போனார்கள். போனவர்களில் சிலர் ஜன்மிகள் வீடுகளுக்கும் தீ வைத்துவிட்டு ஓடினர். அது மேல்ஜாதிக்காரர்களை மேலும் கோபப்படுத்தியது. அதனால் வன்முறை மேலும் தீவிரமானது. பெரும்பாலான அதிகாரிகள் மேல்ஜாதிக்காரர்களாகவே இருந்ததால் புலையர்களின் புரட்சியை முழுமையாக நசுக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தோடேயே அவர்களும் செயல்பட்டனர்.
அனைத்தையும் இழந்து கொடுமைகளுக்கு ஆளான புலையர்களுக்கு, அந்த நிலையில் கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகளே உணவும், உறையுள்ளும் கொடுத்தது. கலவரம் அடங்கியதும், அய்யன்காளியின் பணி அதிகரித்தது. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீள் குடியேற்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துதல், மேற்கொண்டு கலவரம் ஏற்படாதவாறு தடுத்தல் என்று பலவகைப் பணிகள் அவர் செய்ய வேண்டியிருந்தது.
திவான் இந்தக் கலவரங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வர அனைத்து சமுதாய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். ‘நாயர் சர்வீஸ் சொசைட்டி’ (N.S.S.)யின் நிறுவனரும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் மீது ஓரளவு அக்கறைக் கொண்டவரும், சமூக சீர்திருத்தவாதியுமான சங்கனாச்சேரி பரமேஸ்வரன் பிள்ளை என்பவர் தலைமையில் அனைத்து சமுதாயக் கூட்டம் நடத்த அரசாங்கம் ஆணையிட்டது.
கொல்லம் பெரிய மைதானத்தில் 10.12.1915 அன்று அனைத்து சமுதாயக் கூட்டம் நடத்த உத்தரவானது. அது சம்பந்தமாக கொல்லமும், அதன் அருகில் இருந்த பகுதிகளிலும் பெரும் பரப்புரைகளும், விளம்பரங்களும் செய்யப்பட்டன. பெண்களுக்கும், அனைத்து சமூக மக்களுக்கும் வேறுபாடின்றி கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் சுமார் 5,000 பேர் திரண்டனர். மேல்ஜாதிக்காரர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டனர். அய்யன்காளியின் அமைப்பு தாழ்த்தப்பட்ட மக்களை ஒருங்கிணைத்தது.
(சான்று: “அய்யனவர்” – ஒரு சுருக்கமான வரலாறு – எம்.எல்.சோலையில்)
(தொடர்வேன்…)

