தமிழர் தலைவர் , திராவிடர் கழகத் தலைவர் , ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தேர்தல் களத்தில் சூறாவளிப் பிரச்சாரம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.
ஆசிரியர் மட்டுமா பிரச்சாரம் செய்கிறார்?
தேர்தல் களத்தில் 4654 வேட்பாளர்கள்;
தலைவர்கள், வேட்பாளர்கள் , பேச்சாளர்கள் எனப் பிரச்சாரம் செய்பவர்கள் பத்தாயிரத்திற்கும் மேல்.
தமிழ்நாட்டு வாக்காளர்களின் எண்ணிக்கை : 5,69,17,979
தலைவர் பிரச்சாரம் செய்யும் நாள்கள் 16.
வாகனத்திலிருந்து பிரச்சாரம் செய்கிறார்.
வாகன எண் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை நினைவு படுத்துகின்ற வகையில் 2025 என்று அமைந்திருப்பது பொருத்தம்தானே!
இவர் 2025 ஆம் ஆண்டே தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார்.
திருவெறும்பூர் தொகுதியில் அவருடைய பரப்புரையைக் கேட்டேன்.
மற்றவர்களின் பிரச்சாரத்திற்கும் திராவிடர் கழகத் தலைவர் கி .வீரமணி அவர்களின் பரப்புரைக்கும் வேறுபாடு உண்டு.
பத்து வேறுபாடுகளைப் பட்டியலிடுகிறேன்.
- கி. வீரமணி அவர்களுக்கு வயது 93.
இந்த அளவு முதுமை கொண்டு , பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்ற தலைவர்கள் அகில இந்திய அளவில் எவரும் இல்லை.
‘ சுதந்திரம்’ பெறுவதற்கு முன்பிலிருந்தே தேர்தல் பரப்புரை செய்து வருபவர் ஆசிரியர் அவர்கள்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியும் அவருக்கு அத்துபடி. அவர் போகாத கிராமங்கள் இல்லை. உலக ஞானம் மட்டுமல்ல; உள்ளூர் செய்திகளும் அறிந்தவர் அவர்.
- தேர்தல் பிரச்சாரம் செய்பவர்களுக்குச் சுயநலம் உண்டு; தான் வெற்றி பெற வேண்டும்; தன் கட்சி வெற்றி பெற வேண்டும்; சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும்; முதலமைச்சராக வேண்டும் என்பதுதான் இலக்கு. ஆனால் தமிழர் தலைவர் தனக்காக வாக்கு கேட்கவில்லை; தம்முடைய கட்சியினருக்காக வாக்கு கேட்கவில்லை. தந்தை பெரியார் போட்டு தந்த பாதையில் வாக்காளர்களுக்கு வழிகாட்டுகிறார்.
- தமிழ்நாட்டின் தென்கோடியில் பிரச்சாரத்தைத் தொடங்கி, கிழக்கு ,மேற்கு, வடக்கு என அனைத்துத் திசைகளிலும் பரப்புரை நிகழ்த்துகிறார்.
- தந்தை பெரியாருக்குப் பிடித்த ‘குடி செய்வார்க் கில்லைப் பருவம்’ என்ற குறள் நெறிக்கேற்ப சுட்டெரிக்கும் வெயிலில் சுற்றுப்பயணம் செய்கிறார். காலையில் ஒரு கூட்டம்; மாலையில் இரண்டு கூட்டங்கள் .
- தமிழர் தலைவர் , ‘ வேனில் ‘ நின்றவாறு கருத்து மழை பொழிகிறார்.
ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல,
‘திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் ஏன்?’ என்ற புத்தகத்தையும்,
‘ அ.தி.மு.க- பா.ஜ.க., கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது ஏன்? என்ற புத்தகத்தையும் உடன் வரும் தோழர்கள் பொதுமக்களிடம் கொண்டு சென்று சேர்க்கிறார்கள்.
- பணம் கொடுத்துக் கூட்டம் கூட்டும் அரசியல் வாதிகளிலிருந்து வேறுபட்டவர் ; தலைவரின் பரப்புரையில் செவி மடுக்கும்வாக்காளர்கள் தனித் தன்மை கொண்டவர்கள்.
- தமிழர் தலைவர் அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தில் தனி மனிதத் தாக்குதல் இல்லை; கொள்கைகளைப் பேசுகிறார்.
- ஆசிரியர் அவர்கள் வாக்குறுதிகளைத் தருவதில்லை; திராவிட மாடல் ஆட்சி செய்த சாதனைகளைப் பட்டியலிடுகிறார்.
- வேட்பாளர்களுக்கும் கூட்டணிக் கட்சித் தோழர்களுக்கும் ஊக்கமூட்டுகிறார்.
- வாக்காளர்கள் சிந்திப்பதற்கான வாதங்களை முன்வைக்கின்றார். கூட்டம் முடிந்த பிறகு எளிய உணவு, சாலையின் ஓரத்தில் தோழர்களுடன் அருந்துகிறார்.
திராவிடர் கழகத் தலைவர் ஏப்ரல் 6,7,8,9 ஆகிய நாட்களில் ஆலங்குளம், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, கம்பம் , போடிநாயக்கனூர், திண்டுக்கல், திருவெறும்பூர், திருச்சி தொகுதிகளில் (கட்டுரை எழுதிய நாள்வரை ) நிகழ்த்திய பிரச்சாரம் தனிச்சிறப்புக்குரியது ; அறிவார்ந்தது;
ஒவ்வொரு கூட்டத்திலும் உணர்ச்சி மயமாய் உரை நிகழ்த்தினார். சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றி இருக்கின்ற திட்டங்களை ஆர்வம் பொங்க எடுத்துரைத்தார். தி.மு. கழகத்தின் தேர்தல் அறிக்கையை – அதன் அடி நாதமாய் விளங்கும் தத்துவத்தை ஒவ்வொரு கூட்டத்திலும் விளக்கினார்.
தமிழர் தலைவர் தம் உரையில், பிரச்சாரம், தேர்தல் நாள், வாக்கு எண்ணிக்கை நாள், மு .க. ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கும் நாள், மகளிர் உரிமை தொகையை 2000 ஆக உயர்த்தி சட்டம் இயற்றும் நாள் என்று ஒரு சித்திரத்தை வரைந்தார்.
தமிழ்நாட்டுப் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2,90,78,291.
ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட 12,46,259 வாக்காளர்கள் அதிகம்.
2026 சட்டமன்ற தேர்தலில் பெண்களின் வாக்கு வங்கியை தி.மு.கழகம் வெகுவாகக் கவரும் என்பது நடுநிலையாளர்களின் கணிப்பாகும்.
ஒவ்வொரு கூட்டத்திலும் மகளிர் நலனுக்கு தி.மு.க ஆட்சி செய்த சாதனைகளை விரிவாகப் பட்டியலிட்டார்.
தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்வதை எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு 48,544 கோடி ஒதுக்கி இருப்பதை பெருமையுடன் குறிப்பிட்டார்.
வேட்பாளர் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முகத்தில் மகிழ்ச்சிப் பிரவாகம்.
தமிழ்நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஒன்றிய அரசால் பரப்பப்படுகின்ற விஷமப் பிரச்சாரத்தைத் தகுந்த புள்ளி விவரங்களுடன் முறியடித்தார்.
சொன்னதை செய்த கூட்டணி;
சொன்னதை செய்யாத கூட்டணி என்று வகுத்துரைத்தார்.
ஒவ்வொரு தொகுதியிலும் தி.மு. கழகக் கூட்டணி வேட்பாளர்களின் சிறப்புக்களைப் பட்டியலிடுகிறார்.
பீகார், மகாராட்டிரா, அரியானா மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகளை மேனாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நினைவு படுத்தினார்.
ஒன்றிய அரசினை விமர்சிக்கின்ற திராவிடர் கழகத் தலைவர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தவிர மற்ற யாருக்கும் பதில் உரைப்பதில்லை.
பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை செய்யப்படுவதைக் கவலையோடு எடுத்துரைத்தார்.
எதிர்க் கட்சிகளை ஒடுக்குவதற்கு வருமானவரித்துறை , சி.பி.அய்., அமலாக்கத்துறை மூன்றும் திரிசூலமாகப் பயன்படுத்தப்படுகிறது என்றார்.
அதிகாரிகள் மாற்றப்படுவதைக் கோபப்படாமல் குறிப்பிட்டு, தி.மு.கழகக் கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்ட வாக்காளர்களை மாற்ற முடியாது என்று உற்சாகமாய் உரைத்தார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி அதிகமாக குறிப்பிடாவிட்டாலும் ‘அடமானம் வைக்கப்பட்டுவிட்டது’ என்று ‘சுருக்’ என்று தைக்கிறார்; கழகத்தில் அண்ணாவும் இல்லை; திராவிடமும் இல்லை; முன்னேற்றமும் இல்லை என்று கொள்கைப் பார்வையோடு குட்டு வைத்தார்.
‘லேடியா? மோடியா’ என்று கேட்ட செல்வி ஜெயலலிதா அவர்களின் வாசகத்தை நினைவூட் டினார்.
தமிழர் தலைவர் பிரச்சாரத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். வயதுக்கு மீறிய உழைப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார்.
தேர்தல் பரப்புரையில் அவருடைய வாதங்களுக்கு எவராலும் மறுப்போ எதிர்ப்போ சொல்ல முடியாது.
பிரச்சாரத்தில் அவருக்குச் சோர்வும் களைப்பும் தெரியாது.
உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் என்று அவரிடம் உறவோ நட்போ சொல்லவும் முடியாது.
மீண்டும் தி.மு.கழக ஆட்சியை ஏற்படுத்தாமல் அவர் உழைப்பும் பணியும் ஓயாது!

