பெரியார் நாத்திகர் கடவுள் மறுப்பாளர்

8 Min Read

கடவுள் மரத்தில் ஒளிந்திருந்த
ஜாதிப் பாம்பு

பெரியாரின் கடவுள் எதிர்ப்பு, தத்துவப் போக்கில் எழுந்த ஆய்வுச் சிந்தனை இல்லை. தன் காரியத்திற்கு எதிராக வரும் கடவுளை அவர் எதிர்த்தார்.

என்ற தோழர் அருணனின் ஆய்வுரை இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று. மனிதனைக் கொத்திய ஜாதிப் பாம்பு, மதம் என்ற பொந்தில் மறைந்திருந்தது. அந்தப் பொந்து கடவுள் என்ற மரத்தின் உச்சியில் இருந்தது. கடவுள் மரமோ வேதம், உபநிடதம், புராணம் ஆகிய அடர்ந்த முட்புதர்களுக்கு நடுவே இருந்தது. இந்தச் ஜாதிப் பாம்பைக் கொல்லச் சிறுதடி பயன்படுமா? பெரியார் அழிவு வேலைக்காரர் அல்லவா? பகுத்தறிவுத் தீ மூட்டினார். மக்களிடம் உயர்வு தாழ்வு நஞ்சைப் பாய்ச்சிய ஜாதிப் பாம்பை அழிக்க மூட்டிய தீ பரவி கடவுள் மரத்தை எரிக்கத் தொடங்கியது. சாதியை அழிக்க எதிராக வந்த கடவுள் பெரியாருக்கு எதிரியானார்.

கடவுள் இருந்தால்… இருக்கிறார்

அய்யா, நீங்கள் கடவுள் இல்லை; இல்லை என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறீர்களே! திடீரென உங்கள் முன் கடவுள் வந்து விட்டால் என்ன செய்வீர்கள்?

இது குறும்புக்கார இதழாளரின் கேள்வி.

இருக்கிறார் என்று சொல்லிவிட்டுப் போகிறேன்.

இது பெரியாரின் குறும்பான பதில். கடவுள் இருக்கிறார்; இல்லை என்பதில் பெரியாருக்குப் பெரிய அக்கறையோ கவலையோ இல்லை.

நாத்திகன் கடவுள் வார்த்தைகளை மறுக்கவில்லை. அவன் மறுக்கும் வேத, உபநிடத, புராணங்கள் மனிதர்களின் வார்த்தைகளே.

என்ற பெரியாரின் வாதத்தில் ‘எனக்கில்லை கடவுள் கவலை’ என்பதை உறுதி செய்கிறார்.

கடவுள் பெயரைச் சொல்லி அவர் சொன்னதாகச் சொல்லிச் சக மனிதனைத் தாழ்த்தியிருக்கிறீர்கள்; சுரண்டியிருக்கிறீர்கள் என்பதைத் தான் நாத்திகன் புரிய வைக்கிறான். அந்த வார்த்தைகள் பொய்யானவை என மறுக்கிறான். கடவுள் உண்மையா? பொய்யா? என்ற கவலை நாத்திகனுக்கு இல்லை.

நாத்திகம் மதமா?

பெரியார் சிந்தனைகள், கருத்துரைகள் அனைத்தையும் முழுமையாகப் புரட்டிப் பாருங்கள். அவர் நாத்திக வாதத்தை எங்கே தொடுகிறார். எங்கே முடிக்கிறார்? என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். தனது சமூக நீதிப் போராட்டத்திலிருந்து பிரித்தெடுத்துத் தனித்த சிந்தனையாக அவர் நாத்திகத்தை முன்னிலைப் படுத்தியிருக்கிறாரா? பேசியிருக்கிறாரா? பெரியாரின் நாத்திகம், உலகாயுதம், சாருவாகம் போல கடவுளை மறுப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்ட மதமில்லை; பெரியார் ஒரு மதத்தலைவரும் இல்லை; அவருக்குத் தன் போக்கான நடைமுறையை விட்டு விட்டுத் தத்துவம் பேசுவதில் அக்கறையும் இல்லை என்பதுதான் ஆய்வாளர் கண்ணோட்டம்.

கடவுள் அச்சம் களைந்தார்

கடவுளை எதிர்த்தார், திட்டினார், உடைத்தார் என்பதெல்லாம் கடவுள் கருத்தின் மீது மனிதனுக்கு உண்டாக்கப்பட்டிருந்த அச்சத்தைப் போக்குவதற்கு அவர் எடுத்த நடவடிக்கைகள்தாம். ‘கடவுள் கண்ணைக் குத்தி விடுவார்’ என்ற மிரட்டலை நம்பிப் பயந்துகொண்டிருந்த அப்பாவியிடம், ‘பார்!’ நீ கடவுள் என நம்பும் கல்லை நான் உடைக்கிறேன்; என்னை ஒன்றும் செய்யவில்லை, என அவன் அச்சத்தைத் தெளிவித்தார். கடவுளைத் திட்டிக்கொண்டே நோவும் சாவுமாக நூற்றை நெருங்கிய வலிய கிழவரல்லவா பெரியார்!

கடவுள் பெயரால் சுரண்டல்

கடவுள் கருத்தின் ஒரு முகம், உழைக்காத ஒரு கூட்டம் உழைப்பவன் பொருளைக் கடவுள் பெயரால் சுரண்டுவது, மழை இல்லை, வீட்டில் ஒரு நெல் மணிகூட இல்லை என்ற நிலையில் கும்பியும் குடலும் காய்ந்து கிடக்கும் கூட்டத்தாரிடமும், மழை பெற மாரியாத்தாவிற்கு ஆடுவெட்டிப் பொங்கலிடச் சொன்னதைப் பார்த்துப் பார்த்துப் பொங்கியவர் பெரியார். இவனோ பொங்கலிடத் தன் பூமியை அடகு வைத்துப் பொருள் பெறுகிறான். மூன்று முறை பொங்கலிட்டான்; நிலத்தை முழுதாக இழந்துவிட்டான்.

நேர்மையாக வரி செலுத்தாதவன்கூட நேர்த்திக்கடனை நிறைவாகச் செலுத்துகிறான். கல்யாணம் தொடங்கிக் கருமாதி முடிய தன் வீட்டில் நடக்கும் அத்தனை சடங்கிலும் பார்ப்பானுக்குத் தன் வருவாயில் வரிகட்டாதவன் யார்? ஏழை முதல் பணக்காரன் வரை அவனவன் தகுதிக்குத் தக்கபடி கோதானம் முதல் பூதானம் வரைப் பார்ப்பான் பிடிங்கி விடுகிறானே?

ஓராயிரத்திற்கும் யாகம்; நூறாயிரத்திற்கும் அதே யாகம் நடத்துகிறானே! நம்மவன் உழைத்துச் சேர்த்த பொருளில் கோல் கொண்டு அரசாள்பவனுக்குக் கட்டத் தவறினாலும் நூல்கொண்டு அரசாள்பவன் தவறாமல் பெறுவதைப் பார்த்துப் பெரியார் கொதித்தார். இவனது இத்தனைப் பிடுங்கலும் கடவுளைக் காட்டித்தான் என்பதைக் கண்கூடாகக் கண்டார். ‘அவனை நம்பாதே; அவன் இருப்பதாகச் சொல்வதை நம்பாதே; அவனுக்குக் கொடுக்காதே ‘உனக்குக் கொடுக்கும்’ என அவன் சொல்வது உன்னைக் கெடுப்பதற்காகத்தான், எனச் சொல்லிச் சொல்லி மாய்ந்தார் பெரியார்.

கேட்காதே: கொடுக்காதே

கடவுள் கேட்கிறார். நீ கொடு என்பதும் கடவுள் தருகிறார், நீ பெறு என்பதும் ஏமாற்று; இதற்குள் சூழ்ச்சி இருக்கிறது என எச்சரித்தார் பெரியார்.

‘உன் புத்தியைப் பயன்படுத்திப் பார்’ எனச் சொல்வதற்காகத்தான் ‘கடவுளை நம்புபவன் முட்டாள்’ என உசுப்பேற்றினார். கடவுள் தருவார் எனச் சொல்லி உன்னை ஏமாற்றிக் கடவுள் பெயரால் உன்னிடமிருந்து பொருளைப் பிடுங்குபவன் ‘அயோக்கியன்’ எனத் திட்டினார்.

தீ மிதித்தல், தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்துதல் என உன்னை நீயே வருத்திக்கொள்வது காட்டுமிராண்டித் தனமில்லையா? உன்னைத் துன்புறுத்தித் தான் இன்பமடையும் கடவுள் தாயுமானவரா?

எனக் கண்டித்தார்.

கறவையிடம் பால் கரந்து கன்றிற்கின்றிக் கடவுளெனக் கல்லின் மேல் சிந்தலாமா?

எனக் கவிஞன் கேட்பது பெரியார் கேட்ட கேள்வியைத்தான். கன்று பசித்திருக்கிறது: கல்லின் மேல் பாலையும் தேனையும் சொரிகிறாயே, இது இரக்கமற்ற அரக்கத்தனம், முட்டாள்தனம். அடுத்தவன் பொருளை வீணாக்கி இரசிக்கும் கொடூரக் களிப்பில்லையா இது? அவன் பொருளை இப்படிப் பாழ் செய்வானா? எந்தப் பார்ப்பானாவது தீ மிதிக்கிறானா? அலகு குத்தி ஆடுகிறானா? தன் சொந்தப் பணத்தில் பாலாபிடேகம் செய்கிறானா? எனக் கேட்டுக் கேட்டுப் பார்த்தார். ‘கடவுளை மற: மனிதனை நினை’ என்பதைக் கட்டளைச் சொல் ஆக்கினார்.

தேவையில்லாத விசயம்

ஆம், கடவுள் பெரியாருக்குத் தேவையில்லாத விசயம்: அவன் மனிதனைச் சோதனைக்குள்ளாக்காத வரை. கடவுள் பெரியாருக்குத் தேவையில்லாத விசயம், அவன் மனிதனில் உயர்வு தாழ்வு கற்பிக்கத் துணையாகாத வரை. கடவுள் பெரியாருக்குத் தேவையில்லாத விசயம், அவன் மனிதனின் சுய அறிவை அழித்து மூட நம்பிக்கையில் முடக்குவோருக்கு ஒத்துழைக்காதவரை.

பெரியாருக்கு மட்டுமல்ல, நமக்கும் கடவுள் தேவையில்லாத விசயம்தான். அந்தக் கடவுளை நினைத்து அச்சப் படாமலும், அந்தக் கடவுளை நம்பிப் பேராசைப் படாமலும் இருந்தால்,

பெரியார் ஏற்ற கடவுளை
நீங்களும் ஏற்கலாம்

கடவுளைக் குறித்துப் பெரியார் கொண்டிருக்கும் கருத்துகளைக் கீழே காணுங்கள். விருப்பு வெறுப்பின்றிச் சிந்தியுங்கள். உங்கள் மனத்தை மட்டும் சாட்சியாக வைத்து ஆய்வு செய்யுங்கள். உங்களுக்கும் ஏற்புடையதுதான் என நீங்கள் ஏற்கும் கருத்துகள் எத்தனை? என்பதை எண்ணிப் பார்த்துப் பின் பெரியாரை மதிப்பிடுங்கள். முடிவில் நீங்களும் நாத்திகர் ஆகலாம்; அல்லது பெரியாரும் ஆத்திகராகத் தோன்றலாம்.

கடவுள் குறித்துப் பெரியார் கருத்துகள்

  1. அறிவியல் வளர்ச்சிமிக்க இந்நாளில் கடவுளைப்பற்றிப் பேசிக் கொண்டிருப்பதே காட்டுமிராண்டித்தனம்.
  2. தானாகத் தோன்றித் தானாக வாழ்ந்து தானாக அழிந்து கொண்டிருக்கும் உலக இயற்கைக்குத்தான் கடவுள் எனப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதாக மாத்திரம் சொல்லிக்கொண்டிருப்பவர்களிடம் நமக்கு இப்போது அவ்வளவாகத் தகராறு இல்லை.
  3. அன்பு என்னும் குணம் தான் சிவம். உயிர்களிடம் அன்பு செலுத்துவதுதான் சைவம் என்பதானால் நாமும் ஒரு சைவன் எனச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறோம்.
  4. கடவுளைப் பற்றிய விசயங்கள் வரும்பொழுது நாம் கவலைப்படுவது எதைப் பொறுத்த வரையில் என்றால் கடவுள் இருக்கிறார் என்று ஒருவன் ஒப்புக்கொள்வதன் மூலம் அவனுடைய அறிவு வளர்ச்சியும், முயற்சியும் கெட்டுச் சோம்பேறித்தனம் உண்டாகக் கூடாது என்பதைப் பொறுத்துத்தான்.
  5. ஒரு மனிதனுக்குப் பிறர் சொல்லிக்கொடுத்த பிறகுதான் கடவுள் என்ற பேச்சும் நினைப்பும் உண்டாவதொழியத் தானாக ஏற்படுவதில்லை.
  6. இயற்கையின் உண்மையை அறிய முடியாத இடம் வரை அவை கடவுளென்றும் அவற்றின் இயக்குதல் கடவுள் சக்தி என்றும் சொல்ல வேண்டிய அவசியம் தானாக ஏற்பட்டது.
  7. முடியாதவை, அறியாதவைதான் கடவுள் சக்தி, மேஜிக், சித்து முதலியவற்றை ‘இது ஏதோ தந்திரம் தானே ஒழிய வேறில்லை, ஆனால் அது இன்னது என்று கண்டு பிடிக்க முடியவில்லை’ என்று சொல்லிவிடுகிறோம். இதே நிலையைத்தான் கடவுள் கருத்திலும் கொள்ளவேண்டும்.

8 மனிதன், தான் எல்லாம் தெரிந்தவன் என்கிற ஆணவம் உடையவனாதலால் தன் புத்திக்கு எட்டாததைத் தனக்குத் தெரியவில்லை எனக் கண்ணியமாய் ஒப்புக் கொள்ளச் சம்மதிக்கவில்லை. அவற்றைக் கடவுள் செயல் என மழுப்பினான்.

  1. கடவுள் தமிழ்ச் சொல் இல்லை. தமிழனுக்கு தோன்றிய காலத்திலேயே கடவுள் உணர்ச்சி இருந்திருக்குமானால் அதற்கு ஒரு வார்த்தை தமிழில் இருந்திருக்கும். அதே போல் கடவுள் இல்லை என்ற கருத்தையோ, மனிதனையோ குறிக்கும் தமிழ்ச் சொல் இல்லை. கடவுள் பெயர்கள், புராணங்கள், பூசைகள், விழாக்கள் அனைத்தும் வடமொழியே.
  2. ஜீவகோடிகளின் உயர்ந்த இலட்சியத்தைக் குறிக்கும் பொருளே கடவுள். எனவே ஒவ்வொரு வனும் தன் கடவுளைத் தானே படைத்துக் கொண்டான்.

நாத்திகன் என்றால் யார்?

அறிஞர் முர்ரே விளக்கம்

அறிஞர் முர்ரேயிடம், வழக்கறிஞர், தான் நீதிமன்றத்தில் சொல்வதற்காக, ‘நாத்திகர் என்றால் யார்?’ என்று ஒரு குறிப்பு எழுதித் தரும்படி கேட்டார். நீதிமன்றத்திலும் அமெரிக்காவெங்கிலும் பிரபலமான அந்தக் குறிப்பை முர்ரே எழுதித் தந்தார்.

உங்களிடம் முறையிட வந்திருப்பவர்கள் நாத்திகர்கள். அவர்கள் கீழ்க்கண்டவாறு வாழ்க்கை முறை உள்ளவர்கள். ஒரு நாத்திகன் தன்னையும் மனிதர்களையும் நேசிக்கிறான்; கடவுளை அல்ல. (அமெரிக்காவிலே இருந்து சிந்தித்தாலும் நாத்திகன் என்றவுடன் வரும் கருத்தே தந்தை பெரியாரின் ‘கடவுளை மற: மனிதனை நினை’

என்பதாகத்தான் இருக்கிறது. பெரிய மனிதர்கள் ஒன்றுபோலவே நினைப்பார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு) ஒரு நாத்திகன், பூமியில் வாழும் போதே 25

எல்லா மனிதர்களுக்கும் கிடைக்க வேண்டிய இன்பமாகச் சொர்க்கத்தை நினைக்கிறான். பிரார்த்தனை மூலம் ஒரு உதவியும் கிடைக்காது என்றும், ஒவ்வொருவனும் தன்னுடைய சொந்த பலத்தை நம்பி வாழ்வின் பிரச்சினைகளைச் சமாளித்து மகிழ்ச்சி அடையவேண்டும் என்றும் நாத்திகன் நினைக்கிறான். வாழ்க்கை முழுமையடைவதற்கு ஒவ்வொருவனுடைய, சக மனிதர்களுடைய அறிவே உதவுமென்று நாத்திகன் நம்புகிறான்.

அதனால் அவன் கடவுளை அறிய முற்படுவதை விட்டு, தன்னையும் தன்னொத்த மனிதனையும் அறியவே முயன்றான். ஒரு நாத்திகன் பிரார்த்திப்பதைவிட செய்கை செய்வதையே ஒத்துக்கொள்வான். ஒரு நாத்திகன், வாழ்க்கை வாழ்வதற்கே என எண்ணுபவன்; மரணம் மூலம் இதிலிருந்து தப்பிக்க எண்ணமாட்டான். அவன் வியாதிகளை வென்று, ஏழ்மையை ஒழித்துப் போர்களை நீக்கவே விரும்புவான். அவன், மனிதன் மனிதனை புரிந்து கொண்டு நேசிப்பதையே விரும்புவான். நல்லொழுக்கம் நிறைந்த வாழ்வை விரும்பும் அவன், கடவுளை நம்புவதையோ வழிபாட்டையோ அல்லது இவ்வுலகத் துன்பத்திற்கு விடிவாக மறுமையையோ ஏற்றுக்கொள்வதில்லை. நாங்கள் எல்லா மனிதர்களின் வாழ்வையும் காத்துப் பொறுப்புள்ள மக்களாக இங்கே. இப்போதே பணிபுரிய வேண்டும் என எண்ணுகிறோம்.

(22-09-2014, விடுதலை)

இந்த விளக்கத்தில் நீங்கள் விரும்பும் கொள்கைகள், நீங்கள் ஈடுபட ஆசைப்படும் செயல்பாடுகள், உங்கள் கருத்திற்கு இசைவான சிந்தனைகள் கட்டாயம் இருக்கும். அப்போது நீங்களும் நாத்திகனாக இருக்கப் பெருமைப் படுவீர்கள். மனிதனாக இருக்க ஒவ்வொரு மனிதனுக்கும் பெருமை உண்டல்லவா?

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *