பா.ஜ.க.வின் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் வெற்றி பெறாது தொல்.திருமாவளவன் கடும் தாக்கு!

2 Min Read

திண்டுக்கல், ஏப்.9- திண்டுக்கல்லுக்கு நேற்று (8.4.2026) வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி பொதுமக்களின் ஆதரவோடு இருநூறு தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.

வெற்றிக்கு முதன்மை பலமாக இருப்பது கூட்டணி பலம். தி.மு.க.வை எதிர்த்து நிற்கின்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி பலம் இல்லாமல் இருக்கின்றனர். தி.மு.க. கூட்டணி கொள்கை பிடிப்புள்ள கூட்டணி 23 கட்சிகளைக் கொண்ட பலமான கூட்டணி தமிழ் மக்களின் பேராதரவை பெற்ற கூட்டணி.

கடந்த அய்ந்து ஆண்டுகளில் மக்களுக்கு தி.மு.க. செய்த பல்வேறு சாதனைகள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்திருக்கிறது. அவர்களின் ஏகோபித்த ஆதரவு தி.மு.க. கூட்டணிக்கு உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை எங்கள் கூட்டணிக்கு பலம் சேர்ப்பதாக இருக்கிறது. எங்களை எதிர்த்து நிற்பவர்கள் மட்டுமே பரப்ப முடிகிறது. அதனை பொருட்படுத்தாமல் மக்கள் எங்கள் கூட்டணியை வெற்றி பெற வைப்பார்கள்.

மகாராட்டிரா முதலமைச்சர் மதுரையில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது பாஜகவை வெற்றி பெற வைத்தால் தான் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கிடைக்கும் என்று பேசியது குறித்த கேள்விக்கு, இதுதான் பாஜக என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோல் தேர்தல் களத்தில் உருட்டல், மிரட்டல், பிளாக் மெயில் போன்ற செயல்களை பாஜகவினர் கையாண்டு வருகின்றனர். வடமாநிலங்களில் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிறார்களோ ஆதாயம் தேடுகிறார்களோ அதேபோல் இங்கேயும் கைவரிசை காட்டப் பார்க்கிறார்கள். அவர்களின் எந்த சதி முயற்சியும் இங்கு வெற்றி பெறாது. தேர்தல் முடிவு அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டும்.

தே.மு.தி.க. கட்சியைப் பற்றியும் பிரேமலதாவை பற்றியும் அவதூறான கருத்துகளை எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்த கேள்விக்கு, தேமுதிக-வை அதிமுக கூட்டணியில் இணைப்பதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அது வெற்றி பெறவில்லை. திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டார்கள் என்பதால் ஏமாற்றம் விரக்தியின் காரணமாக அவர்களை அப்படி பேச வைக்கிறது. இவற்றை தமிழ்நாட்டு மக்கள் அமைதியாக கவனித்து வருகிறார்கள்.

விஜய் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பதற்கு தான் காரணம் என குற்றம் சாட்டி வருவது குறித்த கேள்விக்கு, தற்பொழுது பரப்புரைக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டும்தான் உள்ளது. தமிழ்நாட்டு அதிகாரிகள் இருக்கலாம் ஆனால் தேர்தல் ஆணையம் தான் அவர்களை வழிநடத்துகிறது. விஜய் பரப்புரைக்கு காவல்துறை அனுமதி மறுக்கிறது என்பதற்கு திமுக காரணம் கிடையாது. வேண்டுமென்றே திமுகவிற்கு எதிராக இதைத் திருப்ப பார்க்கிறார்கள். மக்கள் அரசியல் அறியாதவர்கள் இல்லை மக்களை ஏமாற்ற முடியாது எனக் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *