நேற்றைய (8.4.2026) தொடர்ச்சி…
தமிழர் கடவுள் கொள்கையும் ஆரியத்தாக்கமும்
அச்சமும்,ஆசையும் தாம் கடவுள் கொள்கைக்கு அடிப்படை. தொடக்கக் காலத்தில் ஆசையை விட அச்சமே கடவுட் கருத்தை உருவாக்கியது. பழந்தமிழரின் கடவுட் கொள்கை இயற்கையோடு இயைந்தது. தனக்கு விளங்காத, புரியாத, வெல்லமுடியாத இயற்கை விளைவுகளின் தாக்குதலுக்கு அஞ்சியதில் தொடங்கி அவ்வியற்கையால் பெற்ற வளத்தின் ஆசையாலும் வளர்ந்திருந்தது. பருவத்தில் மழை பெய்து வளம் கொழித்து வாழ்க்கை செழித்த போது ஆசை ஏற்பட்டது. கொடு மழையால் புயலும், வெள்ளமும் சூழ்ந்து தங்கள் வாழ்வைப் புரட்டிப் போட்ட போது அச்சம் ஏற்பட்டது. இருளுக்கு அஞ்சினான், இடியோசைக்கு அஞ்சினான். ‘இழும்’ என வீழும் அருவியின் அழகிலும் இதமாக ஓடும் ஆற்றின் அழகிலும் ஆசை கொண்டான். இயற்கை தந்த அழகை முருகெனக் கொண்டான். இயற்கையால் வந்த அச்சத்தைக் கொற்றவையாகக் கண்டான். தன்னலமின்றிக் கூட்டத்தார் வாழத்தான் வீழ்ந்த தலைவனைப் புதைத்து அடையாளக் கல் நட்டான். அவனை மதிக்கக் கருதி அக்கல்லை மதித்தான். வெறுங்கல், பேரும் பீடுமெழுதிய பெருங்கல்லாக உயர்ந்தது; கலையழகூட்டச் சிலையாகியது. ‘ஐ’ என்றால் தலைவன். ஐயா. ஐயன், ஐயனார் ஆகி குலதெய்வமாகக் கும்பிடு பெற்றது, அந்தக் குத்துக்கல். இந்த மடைமையை மறுத்துத்தான்.
நட்டு வைத்த கல்முன் நறும்படையலிட்டொடுங்கிக்
குட்டு வைத்தழுவார். கூன்கொள்கை மாயாதோ
என நம் தலையில் குட்டு வைத்தார் பெரியார்.
தமிழகத்தில் ஆரியம் புகுந்தபின், முருகனுக்கு அப்பன் சிவன் என்றனர். சிவனுக்கு மனைவி – மனைவிக்கு அண்ணன் – முருகனுக்கு மூத்தவன் என்றெல்லாம் தங்கள் கடவுளர்களைத் தமிழ்க் கடவுளுக்கு மூத்தவர் ஆக்கினர்; முதன்மை ஆக்கினர்.
முருகன், கொற்றவை. அய்யனாரிடம் பழந்தமிழன் தன் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் தமிழில்தான் புலம்பிக்கொண்டிருந்தான். ஆனால் ஆரிய இறக்குமதிக் கடவுளர்களாகிய சிவன். திருமால். உமை, கணபதிகளுக்குத் தமிழ்த் தெரியாதே! மொழிபெயர்ப்பாளராக முன்குடுமிப் பார்ப்பான் இடையில் முளைத்தான்; இடைத் தரகனானான். நல்ல புத்தி கொண்ட அப்பாவித் தமிழனைக் குறுக்குப் புத்தி கொண்ட பார்ப்பான் படிப்படியாக, புதிது புதிதாக, விதவிதமாக ஏமாற்றத் தொடங்கினான்.
இமயமலையில் – கைலாயத்தில் சிவன் என்றான்; அந்தக் காலத்து எந்தத் தமிழனுக்கும் ஏறிச் சென்று பார்க்க முடியாதே! நீர்க் கடலையே தாண்டும் அறிவு பெறாத காலத்தில் பாற்கடலில் படுத்திருக்கும் திருமால் என்று எட்டமுடியாத எல்லை வைத்து நம்ப வைத்தான். கபிலர், பரணர் போன்ற கல்வி வல்ல பார்ப்பனப் புலவர்கள் தமிழ் இலக்கியங்களுக்குள் இக்கருத்துகளை இடைச் செருகல் செய்தனர். இந்த இடைச் செருகல்களை எடுத்தெரிந்து தமிழ் இலக்கியத்தைத் தூய்மைப் படுத்தவே துணிவு கொண்டார் பெரியார்.
இதிகாசச் சூழ்ச்சி
‘திருக்குறளைப் பற்றிப் பேசினால் கேட்கக் கூட்டம் வருவதில்லை. இராமாயணம், மகாபாரதம் பற்றி எத்தனை முறை பேசினாலும் கூட்டம் வருகிறதே, ஏன்?’
இந்தக் கேள்வியைத் தானே கேட்டுத் தானே பதிலுரைப்பார். திருக்குறளார் முனுசாமி. என்ன பதில் தெரியுமா?
‘இராமாயணமும் பாரதமும் அடுத்தவன் கதை; அடுத்தவன் பெண்டாட்டி கதை. எனவே உட்கார்ந்து உட்கார்ந்து ஆசையாய்க் கேட்கிறாய். திருக்குறள் உன் கதை: உன் வாழ்க்கைக் கதை; எனவே கேட்கப் பிடிக்காது.’
என்பார் திருக்குறளார். எல்லாருக்கும் கதை கேட்கப் பிடிக்கும். அறிவு முதிராப்பருவமுடைய குழந்தைகளுக்குக் கதைகள் அதிகம் பிடிக்கும். தமிழனும் அறிவு முதிர்ச்சி அற்றவனாய்க் கதை கேட்டான்; அடுத்தவன் கதையை ஆசையுடன் கேட்டான்; அடுத்தவன் மனைவிக்கு நேர்ந்த துன்பங்களையெல்லாம் அழுதழுது கேட்டான்.
சிறிய உண்மையின் பெரிய உருவம்தான் கதை. நல்ல உடன் பிறப்பாளர் கதை இராமாயணம்.கெட்ட உடன்பிறப்பாளர் கதைதான் பாரதம். இந்த இரு கதைகளும் நம்முடைய இல்லங்கள் தோறும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதையே எத்தனை முறை சொல்ல முடியும்? சிறிது சிறிதாகக் கதைக்கு கை முளைத்தது, கால் முளைத்தது. எளிய மனிதனாயிருந்த இராமன். தலைவனானான். பெரு வீரனானான். இளவரசனானான்: இறுதியில் திருமாலின் அவதாரமாகிக் கடவுளானான். அற்புதங்கள், அதிசயங்கள் நிகழ்த்தினான்…. விடிய விடியக் கதை நீண்டது. பார்ப்பான் வயிறும் வாழ்வும் நிறைந்தது.
கதை மாந்தர்களுக்குக் கடவுட்காதலர் களைக் கருவாக்கி அவர்கள் மூலம் வீரமக்களை இதிகாசங்கள் உருவாக்கிக் கொடுத்தன. இராம சகோதரர்கள், சீதை, அனுமன் ஆகிய கதை மாந்தர்கள். அவரவர் பெற்றோர்களுக்கு இயல்பாய்ப் பிறந்திருக்க முடியாதா? கர்ணன் உள்ளிட்ட பாண்டவர்களுக்கு வேறு வேறு தந்தையர்: பாஞ்சாலிக்கோ வேறு வேறு கணவர்கள் ஏன்? அடுத்த வீட்டில் இப்படிப்பட்ட ‘கசமுசா’ நடந்தால்தான் கேட்கவும் பேசவும் விரும்பும் அற்ப மனிதர்கள் நாம். இதை நம் வீட்டில் அனுமதிப்போமா? இதைத்தான் பெரியார் கேட்டார். நமக்கோ அவர் மீது கடுங்கோபம்.
இருவகை உத்திகள்
ஒரு கதையை முதலிலிருந்து தொடங்கி முடிவு வரை கூறுவது ஒரு முறை. முடிவை முதலில் கூறி இது எப்படி நடந்தது எனத் தொடக்கத்தை நோக்கி நகர்த்துவது மற்றொரு முறை, புதினம், நாடகம், திரைப்படங்களில் இந்த இருவகை உத்திகளையும் கையாளுவார்கள். மதவாதிகளும் இந்த இரு உத்திகளையும் கையாண்டார்கள். மனிதனைக் கடவுளாக்குவது ஒரு முறை: கடவுளை மனிதனாக்குவது மற்றொரு முறை. ஏசுவும், முகமது நபியும் இந்த மண்ணில் பிறந்து மண்ணில் மரித்த மாந்தர்கள். நல்ல மனிதர்களாகவும் இருந்திருப்பார்கள் போலும். அக்காலத்தில் அவர்களைச் சுற்றி வாழ்ந்த மனிதக் கூட்டம் ஏசு, முகமது நபியைப் போல் நல்லவர்களாகவும், மனித நேயமுடையவர்களாகவும், சமூகப்பற்றாளர்களாகவும் பக்குவப் படாதது. எனவே ஏசு, முகமது நபி ஆகியோர் நற்செயல்களைக் கொண்டாடினார்கள்; நற்குணங்களை வியந்து பாராட்டினார்கள். மதவாதிகள், அவர்களது இயல்பான சமூகப் பணிகளை அதிசயங்கள், அற்புதங்கள் நிகழ்த்தியதாக ஒட்டு வேலை செய்து கடவுள் ஆக்கினார்கள் என்பதே உண்மை.
இரண்டாவது உத்தியில் முதலில் முடிவுரை தேவ உலகம் கடவுள் முன் தேவர்கள் தொழுது நிற்கிறார்கள். நிலவுலகில் தீயவன் ஒருவன் செய்யும் கொடுமைகளால் மக்கள் துன்புறுகிறார்கள். அத்தீயவனை அழிக்க வேண்டும். பேராற்றல் மிக்க அத்தீயவனைக் கடவுளால் மட்டுமே அழிக்க முடியும். என வேண்டுகிறார்கள். கடவுள் மனிதனாக (அவதாரமாக) மண்ணுலகில் பிறக்கிறான் எனக் கதை முடிவிலிருந்து தொடங்குகிறது. இராமன். கிருஷ்ணன் அவதாரங்கள் இதைப் போன்றவைதாம். முதல் உத்தியில் மனிதன் பிறந்தது உண்மை; கடவுளாக்கியதுதான் கற்பனை. இரண்டாவது உத்தியிலோ கடவுள் மனிதனாக அவதரித்ததே கற்பனைதான். ஆனால் விடிய விடிய இராமாயணம் கேட்ட நம்மவர்கள் இராமபக்த அனுமானாகவே மாறிவிட்டனர், இது கதை என்பதை மறந்து, இந்த ‘HERO WORSHIP’ தானே இன்று வரை தமிழனை முட்டாளாக்கி வைத்திருக்கிறது.
இதுகதை: இது கற்பனை; இது நடந்ததில்லை, வெறும் நாடகம் என்பதைப் புரிய வைக்கத்தான் பெரியார் புலம்பித் திரிந்தார். ஆனால் வடநாட்டிலும் தமிழ் நாட்டிலும் எண்ணற்ற இராமர் பாதங்கள், தென் கடல் நெடுகிலும் இராமர் பாலங்கள் என முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டி வெள்ளமாய் நீர் பாய்ச்சி வேளாண்மை செய்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். பாவம் பெரியார்!
பழந்தமிழ் இலக்கியங்களில் ஆரியச்சார்பு
சூரிய கிரகணம் பற்றிய இராகு, கேது செய்திகள், நாண்மீன்கள் பற்றிய கதைகள். அமிழ்தம் கடைந்த கதை, சொர்க்க, நரகக் கதைகள், அருந்ததி, அகலிகை போன்றோர் கதைகள், ஊழ்வினைக் கோட்பாடு என எண்ணற்ற மூட நம்பிக்கைகளும் புராணச் செய்திகளும் சங்க இலக்கியத்திலும் திருக்குறளிலும்கூட இடம் பெறத் தொடங்கின. இதன் தொடர்ச்சியாகத் தான் தமிழரின் ஒப்பற்ற காப்பியமாகக் குடிமக்கள் காப்பியமாகக் கொண்டாடப்படும் சிலப்பதிகாரத்தில் கூட மாமுது பார்ப்பான் மறைவழி காட்டத் தீ வலம் வந்து நடந்த கோவலன், கண்ணகி திருமணக் காட்சியுடன் தான் கதை தொடங்குகிறது. இந்து மதத்தாரைத்தான் ஆரியம் ஆட்கொண்டிருக்கிறது என்பதற்கும் மேலாகச் சமண அடிகளாகிய இளங்கோவடிகளும் ஆரியச் சார்பு அடிமையாகியிருப்பது வேதனைக்குரியது. முற்பிறப்பு, ஊழ்வினை, பத்தினித் தெய்வம், தீதிலா வடமீன். இந்திரன் கதை, மாடல மறையோன், பார்ப்பனத் தோழி, வனசாரிணி, காவல்பூதம், வேள்வி செய்தல் என எத்தனை எத்தனை ஆரியச் சார்புச் செய்திகள்.
மதச் சம்பந்தமற்ற ஒருவனுக்குத் தமிழில் இலக்கியம் என்பது மிகமிக அரிதாகவே உள்ளது.
என்ற பெரியார் கூற்று, சிலப்பதிகாரத்திற்கும் பொருந்துகிறதே! மதத்தை விடுத்து மனிதனுக்காக மட்டுமே எழுந்த இலக்கியம் சங்ககாலம் தொடங்கி இருபதாம் நூற்றாண்டு முடியக் காணக் கிடைப்பது அரிதாகத் தானே உள்ளது.
பெரிய புராணப் பெரும் பொய்கள்
மதங்கள் என்றாலே முரண்பாடுதான்; சண்டைதான்; போர்தான். இன்றைய 21ஆம் நூற்றாண்டிலும் இசுலாம், கிருத்துவப் போர், இசுலாம். இந்துப் போர்கள். 20ஆம் நூற்றாண்டிலோ பழைய கிருத்துவம், புதிய கிருத்துவத்திற்கிடையே சிலுவைப் போர்கள், இசுலாம் உட் பிரிவினருக்கிடையே இடைவிடாத போர்கள் என்பதெல்லாம் இன்றைய வரலாற்றுச் சான்றுகள். இதன் முந்திய கட்டமாகத் தமிழகத்தில் சைவ சமணப் போரும், சைவ வைணவப் போரும் அன்றே நடந்துகொண்டிருந்தன. கம்பராமாயணத்தின் எழுச்சியால் வைணவம் தழைப்பதைப் பொறுக்க முடியாததால் எழுந்ததுதான் சைவப் பெருமை பேசும் பெரிய புராணம். கம்பராமாயணத்தில் நிகழ்த்திக்காட்டப்பெற்ற அதிசயங்கள், அற்புதங்களுக்கு இணையாகத் தாமும் பாடினால் தானே, மதப் போதை மாத்தமிழன் மகிழ்வான்? எனவே சேக்கிழாரும் மூன்று வயதில் ஞானப்பால் உண்ட சம்பந்தன், அரவு தீண்டி மாண்ட மகனை உயிர்ப்பித்த நாவரசன், கடவுளால் இருதார உரிமை வழங்கப் பெற்ற சுந்தரன் மற்றும் பிள்ளைக் கறி சமைத்தது. மனைவியையே கடவுளுக்குக் கொடுத்தது போன்ற அதிசயங்களைப் பாடிக்குவித்தார்: அனல்வாதம் புனல் வாதத்தில் மதுரைத் தமிழ்ச் சங்க ஏடுகளை அழித்த ஆணவம் புகன்றார். 8000 சமணரைக் கழுவேற்றிய வரலாறு படைத்தார். ஆனால் என்ன பாடி என்ன பயன்? கம்பன் கவிச்சிறப்பின் முன் இந்த வம்பன் கவிதை நிற்கவில்லை. பெரிய புராணம், சைவ மடங்களின் இருட்பொந்துகளுக்குள் முடங்கி இளைப்பாறத் தொடங்கியது.
பெரியாரின் இலக்கியப் பார்வை
அறிவூட்டும் இலக்கியமே
பெரியாரின் பெருவிருப்பம்
என்ற சுப.வீரபாண்டியனின் ஆய்வுரைதான் பெரியாரின் இலக்கியப் பார்வையின் அடிப்படை உண்மை.
இலக்கியமென்று பாராட்டப்படுகின்றவற்றில் குறைகளையும் மூட நம்பிக்கைகளையும் ஒழுக்கக் கேடுகளையும் தாராளமாக எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியமாகும். இதுதான் நமது புலவர்களின் இலக்கியத் தொண்டாக இருக்க வேண்டும்.
என்ற பெரியாரின் வார்த்தைகள் தாம் தமிழ் இலக்கியத் திறனாய்விற்குப் பெரியார் அமைத்துக் கொடுத்த சரியான அடித்தளம். ஆனால் நம் தமிழறிஞர்களோ இலக்கியத் திறனாய்வு இம்மியளவும் இல்லாதவர்களாய்ப் போலி மத வாதிகளைப் போல் சமயச் சொற்பொழிவாளர் வேடமிட்டே வாழ் நாளை வீணாளாக்கிவிட்டனர்; தமிழ் வணிகர்களாகத் தரம் தாழ்ந்தனர். ஆச்சாரியர்களுக்கும் ஆதீனங்களுக்கும் அடிபணிந்து, பெரியார் திறனாய்வைக் கொச்சைப்படுத்திப் பழி தூற்றினர்.
‘நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே’ எனத் திருவிளையாடல் புரிந்த தமிழறி ஞர்களே, உங்கள் கடவுள், கண்ணைத் திறந்தாரோ, திறக்கவில்லையோ! இதோ! பெரியார் பகுத்தறிவுக் கண்ணால் எரிக்கிறார்! கடவுளே பாடினாலும் கடவுளைப் பாடினாலும் எந்தப் படைப்பும் திறனாய்விற்கு உட்பட்டதே. சமுதாயப்பயன் விளைவிக்காதனவும். சமுதாயத்திற்குக் கேடு விளைப்பனவும் குற்றம் உடையனவே.
மொழி என்பது ஒரு இனத்தின் போர்க்கருவி. போர்க்கருவிகள்
காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்.
– பெரியார்.

