பெரியார் தமிழ்ப் பகைவரா? நன்றி: ‘பெரியார் என்னும் பேரொளி’, ஆசிரியர்: புலவர் சி.முத்தையா, வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

7 Min Read

வீட்டு மொழியும் நாட்டு மொழியும்

‘பெரியாரின் முன்னோர்கள் கன்னடத்திலிருந்து வந்தவர்கள். அவர் வீட்டு மொழியோ தெலுங்கு. எனவே அவர் தமிழ்ப்பகைவர்’

என்பது ஓர் அற்பத் தனமான வாதமாகும்.

தமிழ்நாட்டில் வீட்டு மொழி எதுவாக இருப்பினும் தமிழ்நாட்டு மொழியாகத் தமிழ் தான் இருக்க வேண்டும்

என்பதை அழுத்தமாகப் பதித்தவர் பெரியார். தமிழனாக, தமிழ்நாட்டவனாகவே தன்னை உணர்விலும், வாழ்விலும் பொருத்திக் கொண்டவர் அவர். அவர், தம் வாழ்நாள் முழுவதும் தமிழில் தான் பேசினார், எழுதினார், வாதம் செய்தார். போராடினார். அவர். நம்மைத் திராவிடர் எனக் குறிப்பிட்டுக் கொண்டதின் உள்ளாழக் குறிப்பு,

பார்ப்பனரைத் தவிர்த்த தமிழ் பேசுபவர்கள்

என்பதேயாகும்.

பயன்பாட்டு மொழியே செம்மொழி

தமிழ், கடவுள் படைத்த மொழி; அதனால் சிறந்தது. தமிழ், தொன்மையான மொழி; அதனால் சிறந்தது என்பதை ஏற்க மறுத்தவர் தான் பெரியார். மூடநம்பிக்கையால் ஒரு மொழிக்கு முதன்மை தேவையில்லை; முந்தித் தோன்றியதால் முதன்மை தேவையில்லை என்பதில் பெரியார் தெளிவாக இருந்தார். இன்றையப் பயன்பாட்டு மொழியாக, நாளையும் ஏற்கப்படும் மொழியாகத் தமிழை உருவாக்குவதில் அக்கறை காட்டிய உண்மையான தமிழ்ப்பற்றாளர் பெரியார். தமிழையும் மதத்தையும் ஒன்றாய் இணைக்கும் போக்குக்கு அவர் எதிரி.

முதலாவதாக தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழி வரிசையில் அதுவும் ஒருமொழியாக இருக்க வேண்டுமானால் தமிழையும், மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமிழுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.

என்று தமிழைப் பற்றிப் பேசத் தொடங்கும் பொழுதெல்லாம் அவர் கூறத் தவறியதில்லை.

‘மக்கள் தேவர் நரகர் உயர்திணை’ என இலக்கணத்திலும் மதத்தை நுழைத்துள்ள சூழ்ச்சியைத் தமிழ் இலக்கணப் பேராசிரியர்களுக்கும் சுட்டிக் காட்டியவர் அவர்.

எழுத்துச் சீர்திருத்தம்

செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செழிக்கச் செய்வோம்

என்ற புரட்சிக்கவிஞரின் கவிதைக்குப் பெரியாரின் கருத்தே விதை. அதே போல் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம், தமிழை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்ல எடுத்து வைக்கப்பட்ட முதல் அடி. கடவுள் மொழியாகத் தமிழ் தாழ்வதிலும் கணினி மொழியாகத் தமிழ் உயர்வதிலும் அவர் கொண்ட அக்கறை தானே எழுத்துச் சீர்திருத்தம். பெரியார் காலத்தில் ஓங்கி வளர்ந்து உயர்ந்த புகழ் பெற்ற தமிழறிஞர்கள் பற்பலர். அவரில் எவருக்கும் எழுந்ததா எழுத்துச் சீர்திருத்தச் சிந்தனை? எழுத்துச் சீர்திருத்த எதிர்ப்புச் சிந்தனையோடு தான் சிலர் எழுந்தார்கள், கவிழ்ந்தார்கள்.

திருக்குறள்-மக்கள் குறள்

தமிழறிஞர்கள் கையில் மட்டுமே தவழ்ந்த திருக்குறளை தமிழர் கைகளில் தவழ விட்டவர் தந்தை பெரியார்தானே! 1948இல் திருக்குறள் மாநாடு நடத்தித் திருக்குறளை மக்கள் குறளாக மாற்றியவர் அவர். திருக்குறள் விளக்கக் கட்டுரைகள் பலப்பல எழுதிக் குவித்தார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்

குடி செய்வார்க் கில்லை பருவம்

ஆகிய குறட்பாக் கருத்துகளைத் தம் கட்டுரைகளில் எடுத்துக்காட்டிப் பாராட்டியவர் அவர். ஆனால் திருவள்ளுவரின் பெண் வழிச் சேறலை அவர் கண்டிக்கத் தவறவில்லை அவர்தான் பெரியார்.

தமிழிசை இயக்கம்

செத்தால் கூடப் பாடுறாண்டா எனத் தாலாட்டில் தொடங்கி ஒப்பாரியில் நிறைந்த தமிழிசைக்கும் தமிழ் நாட்டில் பற்பலத் தடைகள். தமிழ் நாட்டின் இசையரங்குகளில் தமிழுக்கு இடமே இல்லாமல் இருந்தது. வடமொழியும் தெலுங்கும் இசைப்பவரே இசைவாணர். தமிழிசை வாணர்கள் சென்னையிலும் திருவையாற்றிலும் தீண்டத்தகாதவரே. பழந்தமிழ்ப் பண்புகள் ராகங்களாக மாற்றப்பட்டன. ஒரு நூற்றாண்டுக்கும் மூத்த தமிழிசைப் புலவர்கள் மாரிமுத்தா பிள்ளை, முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர் ஆகிய தமிழ் மூவரை மறைத்து முத்துசாமி தீட்சிதர், தியாகய்யர், சியாமா சாத்திரிகள் மும்மூர்த்திகள் ஆக்கப்பட்டார்கள். இந்நிலையில் 1930 மே மாதம் ஈரோட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பார்ப்பனரல்லாதவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் இசைக் கல்வியைக் கற்றுக் கொடுக்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானத்திற்கு முசிறியார். செம்மங்குடியார் போன்றவர்களிடமிருந்து பெரியார் எதிர்பார்த்த எதிர்ப்பும் வந்தது. ஆயினும் தமிழில் பாடும் உரிமையைப் பெரியார் தொடர்ந்து வலியுறுத்தினார்.

‘இசை விருந்தளிக்கும் செல்வர்களும் நுகர்வோர்களும் தமிழுணர்ச்சி உள்ளவர்களாக இருக்கும் வரை இந்த உணர்ச்சி வலுத்துக் கொண்டேயிருக்கும்.’

என்ற பெரியாரின் வேகமூட்டலின் விளைவுதான், செட்டிநாட்டரசர் நிறுவிய ‘தமிழ் இசைச் சங்கம்’ என்பது பொருத்திப் பார்க்க வேண்டிய உண்மை. தமிழிசைப் பாடலுக்காக வரிந்து கட்டிய பெரியார், தம் கொள்கை உறுதியிலும் விடாப் பிடியாக இருந்தார். தமிழிசைப் பாடல்கள் வெறும் பஜனைப் பாடல்களாக இருப்பதைக் கண்டிக்கத் தவறவில்லை.

தமிழறிஞர் நிலை

திரு. வி.க..மறைமலையடிகள், தெ.பொ.மீ., மு.வ., அ.சிதம்பர நாதன். இராசமாணிக்கனார். கி.ஆ.பெ. விசுவநாதம், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழறிஞர்களுடன் நட்புரிமையுடன் இருந்தவர் பெரியார். இவர்களுடைய தமிழ்ப் பற்றையும் தமிழ் மேதைத் தன்மையையும் பாராட்டும் பெரியார். இவர்களெல்லாம் முன்னேற்ற முயற்சியில்லாமல் உள்ளனரே; கிணற்றுத் தவளைகளாய் இருக்கிறார்களே; அன்னக் காவடி பஞ்சாங்கப் பார்ப்பான் மகன் ஆங்கிலம் படித்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆகி விட்டானே! என உள்ளத்து ஏக்கத்தை ஒளிக்காமல் கூறி நொந்து கொள்வார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் வட மொழிப் பேராசிரியர் குப்புசாமி சாத்திரிக்கு மாத ஊதியம் ரூ.300. தமிழ்ப் பேராசிரியர் க. நமசிவாய முதலியார்க்கு ரூ. 80 என்ற வேறுபாடு இருந்தது. (தமிழன் எப்படியெல்லாம் ஏமாந்திருக்கிறான்) இந்த நிலை அறிந்த பெரியார், இந்தக் கொடுமையைக் கண்டித்து தலையங்கம் எழுதினார். நீதிக் கட்சியின் முதலமைச்சர் பனகல் அரசர் ஊதிய வேறுபாட்டை ஒழித்தார்.

அன்று நாங்கள் போட்ட கூப்பாடும் ஜஸ்டிஸ் மந்திரி சபையின் உத்தரவும் இல்லாதிருந்தால் இன்றும் தமிழ்ப் பண்டிதர்கள் இதே நிலைமையில்தான் இருக்கக்கூடும்.

என்கிறார் பெரியார்.

நல்ல தமிழறிஞர் நம் தமிழ்க்கும் பகையானார்

என்று பாவேந்தர் குறிப்பிட்டபடி தமிழினப் பகையாளர்களாக இருந்த தமிழறிஞர்களையும் அவர்கள் நூல்களையும் எதிர்க்க வேண்டிய கட்டாயம் பெரியாருக்கு இருந்தது தவறில்லையே!

தமிழ்-காட்டுமிராண்டி மொழி

பெரியார் தமிழைத் திட்டிக் கொண்டேயிருந்தார், மிகக் கடுமையாகக் காட்டுமிராண்டி மொழி என்றார் என்பது வெளிப்படையான உண்மைதான். முட்டாள், மூடன், காட்டுமிராண்டி என மகனைத் திட்டிய தாயின் உணர்வைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் தான் இதைப் பழியாகப் பார்த்தார்கள்; பெரியாரைப் பழித்தார்கள்.

நீ முட்டாளாக இருக்கிறாயே… அறிவு பெறு: மூடனாக இருக்கிறாயே… சிந்தித்துப் பார். காட்டுமிராண்டியாய்த் திரிகிறாயே… நாகரிகம் பெற்று மேன்மையடை.

என்ற உட்கருத்துதான் பெரியாரின் வசைகளில் ஒளிந்திருக்கிறது என்பதை உணர்வுடையோர் உணர்வர்.

மேற்குத் தொடர்ச்சி மலை, நீலகிரிமலை, சேர்வராயன் மலை, குடகு மலை பகுதிகளில் வாழும் தோடர், இருளர், பளிங்கர் போன்ற தொல்குடியான காட்டு வாழ் மக்கள், காண்போரை மிரட்டும் வலிய தோற்றமுடைய காட்டுமிராண்டிகள். அக் காட்டுமிராண்டிகளும் தமக்கெனத் தனி மொழி வைத்திருக்கிறார்கள். அம் மொழி கல்வி மொழியா? நீதி மொழியா? நிர்வாக மொழியா? வணிக மொழியா? இல்லை;இல்லை.

இன்று நம் தமிழ் மொழியும் கல்வி மொழியாக இல்லை; அலுவலக மொழியாக இல்லை: ஆட்சி மொழியாக இல்லை; நீதி மன்ற மொழியாக இல்லை; மருத்துவ மொழியாகக்கூட இல்லை. ஏன்? வழிபாட்டு மொழியாகக்கூட இல்லை. ஆனால் தமிழ் இருக்கிறது… வீட்டு மொழியாக. அடுப்படி மொழியாக-அதுவும் ஆங்கிலங் கலந்த அரைகுறைத் தமிழாகத்தான்… இப்போது சிந்தியுங்கள்; பெரியார் ஒப்பீடு பொருந்தி வருகிறதா? தமிழ் காட்டுமிராண்டி மொழிதானே.

காட்டுமிராண்டி கூடத் தன் மொழியில்தான் காதலை வெளிப்படுத்துவான். ஆனால் காதல் மொழியாகக் கூட நம் கன்னித் தமிழ்மொழி இன்றில்லையே! I love you’ தானே இன்று அனைத்துத் தமிழரும் கூறும் காதல் முதல் மொழி.

இந்த இழிநிலை மாறப் பெரியார் அன்று மொழிந்த இழிசொல் தமிழனுக்கு அன்றும் உறைக்கவில்லை; இன்றும் உறைக்கவில்லை.

காட்டுமிராண்டி மொழியாக இருக்கும் தமிழ், முதலில் கல்வி மொழியாக மாறுவதற்கும் கடுந்தடையாக எழுந்து விட்டனவே ஆங்கில வழிக் கல்வி நிலையங்கள். அங்கே தமிழ் மொழி வழி வகுப்பே இல்லை. தமிழ்ப் பாடமே இல்லை. இசை வகுப்பில் திருவெம்பாவைப் பாடலை MARKALI THINKAL (மார்கழித் திங்கள்) என ஆங்கிலத்தில் எழுதிப்படிக்கும் அவலம் தமிழகத் தலை நகரிலேயே நடந்து கொண்டிருக்கிறதே.

தேன்மொழி, கனிமொழி

இன்றையத் தமிழ்த் திரைப்படத்தில் ஒரு காட்சி, காதலர்களிடையே ஊடல் எழுகிறது. உயர் கல்வி பயின்ற காதலி சொல்கிறாள். “உனக்கு நானெல்லாம் செட் ஆக மாட்டேன்; எவளாவது தேன்மொழி, கனிமொழி கிடைத்தால் போய்ப்பார்”. இந்த உரையாடலில் தமிழ் எவ்வளவு இழிவு படுத்தப்பட்டுள்ளது என்பதை எந்தத் தமிழ் இளைஞனாவது உணர்ந்திருப்பானா? இங்கு பெரியார் சரியாக உணரப்பட்டிருந்தால், மதிக்கப்பட்டிருந்தால், ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் இந்த நிலை நம் மொழிக்கு வந்திருக்குமா? பகுத்தறிவும் மானமும் சுய மரியாதையும் பெறாதவரை தமிழன் காட்டுமிராண்டி; அவன் மொழியும் காட்டுமிராண்டி மொழியே.

வருணாசிரம வசப்பட்ட தமிழ்

‘மொழிக்கும் சுயமரியாதை வேண்டும்’ இது பெரியார் கூற்று. ஆனால் தமிழோ, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகச் சுயமரியாதை இழந்து தவிக்கிறது. 5000 ஆண்டுகளாக வருணாசிரம வசப்பட்டுக் கிடக்கிறது நம் தமிழ், வருணாசிரமம்,சர்க்கரை நோய் போல் பரம்பரையாய்ப் பற்றித் தொடரும் கொடு நோய்; என்றும் தீரவே செய்யாத கடும் நோய். தமிழனை முடக்கிய இந்நோய் தமிழ்மொழியை, தமிழ் இலக்கண இலக்கியங்களையும் விட்டு வைக்கவில்லை. மருத்துவம் வளராத பழங்காலத்தில் ஒருவருக்குச் சிறுநீர்ப்பையில் கல்லடைப்பு ஏற்பட்டால் அது உயிரடைப்பில் தான் முடியும். இன்றோ, எப்படிப் பட்ட கல்லையும் மருத்துவம் கரைத்து விடும். (நம் காசையும் சேர்த்துத் தான்) அன்று,எந்த நோயால் இவன் இறந்தான் என்பது தெரியாமலே எண்ணற்றவர்கள் இறந்திருப்பார்கள். அதே போல், தமிழனுக்கு வருணாசிரம நோய் தொற்றியதையும் அதன் தாக்கம் தமிழையும் பற்றியதையும் பண்டைத் தமிழன் அறியாமலே 5000 ஆண்டுகள் கழித்து விட்டன. இந்த நோயைத் தம் பகுத்தறிவென்னும் நுண்ணோக்கியால் நுணுகிக் கண்டவர் பெரியார்.

சேய்க்கு நோய் வந்தால் தாய்க்கும் மருத்தளிக்கும் நன் மருத்துவர் போலத் தமிழனுக்கும் தமிழுக்கும் தடுப்பு மருந்து கொடுக்கத் தலைப்பட்டார் பெரியார்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *