சென்னை, ஏப்.8- தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்.பி.வி.எஸ். மணியன் பகிரங்க மன்னிப்புக் கேட்டதால் விடுதலை செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த காலங்களில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆர்.பி.வி.எஸ்.மணியன், சமூக சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தனது பேச்சுக்காக மன்னிப்புக் கோரிய ஆர்.பி.வி.எஸ். மணியன், நீதிமன்றத்தில் இரண்டு முறை பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தார்:
22/09/2023 அன்று முதல்முறை மன்னிப்புக் கோரினார். 27/09/2023 அன்று மீண்டும் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி உறுதிமொழிப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த மன்னிப்புக் கோரலையும், பிரமாணப் பத்திரத்தையும் பரிசீலித்த நீதிபதி கார்த்திகேயன், ஆர்.பி.வி.எஸ்.மணியனை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.

