கொள்கை வீரர் ஆ.இராசாமீது அவதூறு பரப்புவதா? 2–ஜியைப் புறங்கண்ட வெற்றி வீரர் அவர்! பொய்யர்களுக்கு வாக்காளர்களே, பாடம் கற்பிப்பீர்!

1 Min Read

கழகத் தலைவர் ஆசிரியர் அறிக்கை

கொள்கை வீரர் ஆ.இராசாமீது அவதூறு பரப்புவதா? 2–ஜியைப் புறங்கண்ட வெற்றி வீரர் அவர்! பொய்யர்களுக்கு வாக்காளர்களே, பாடம் கற்பிப்பீர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் எப்படியாவது, யாரையாவது விலைக்கு வாங்கியோ, அச்சுறுத்தியோ, ஆசை காட்டியோ குறுக்கு வழியில் தமிழ்நாட்டில் ஆழமாகக் காலூன்றிட வியூகம் வகுக்கும் ஆர்.எஸ்.எஸ்.— பா.ஜ.க.வும், அதற்குத் தன்னை அடகு வைத்து, அடிமைச் சேவகம் புரிந்து, டில்லியே (என்.டி.ஏ.) உண்மைத் தலைமை, வெளியே பெயரளவில் மட்டும் அ.தி.மு.க. தலைமை என்ற போலி வேடம் தரித்த நிலையில், திமு.க.வின் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கொள்கை வீரர்  தோழர் ஆ.இராசா அவர்களைத் தமிழ்நாட்டுத் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ளாமல் செய்ய, ஆரிய பஞ்ச தந்திரங்களில் ஒன்றான ‘மித்ரபேதம்’ என்பதைச் செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) வித்தைகள் மூலமோ, எப்படியோ ஓர் அவதூறு ஆடியோ பரப்பப்பட்டுள்ளது!

2–ஜி ஊழல் என்று, அந்த எண்ணுக்கு எத்தனைப் பூஜ்ஜியம் என்று கூடத் தெரியாதவர்கள், ஆ.இராசா மீது அவதூறு கிளப்பி, சிறைக்கும் அனுப்பினார்கள். தானே வாதாடி, குற்றமற்றவர் என்று நிரூபித்து வாகை சூடி வெளிவந்தவர் மானமிகு ஆ.இராசா.

இப்பொழுது புதிய தில்லு முல்லுகளைப் பரப்பி, அவர் மீது தவறான பொது அபிப்பிராயத்தை உருவாக்க முயலுகின்றனர்.

ஒவ்வொரு முறையும் இப்படி அவரது சக்தி வாய்ந்த பிரச்சாரத்தினைத் தடுக்கவே, கீழ்த்தர மித்ரபேதத்தைச் செய்ய முனைகின்றனர். அதை அவர் கடுமையாக மறுத்து, சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ளார்.

இப்படி பலப்பல அவதூறுகளைப் பரப்பும் வாய்ப்பை உடனடியாகக் கண்டு, அவற்றை உடனுக்குடன் முறியடிக்க, நமது தோழர்களும், அமைப்புகளும் முன்வருதல் அவசர அவசியம்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், ஆசாபாசங்களுக்குப் பலியாகாமல், இயக்கத்தின் வெற்றியைக் கண்ணை இமை காப்பதுபோல, காக்க முன்வருதல் முக்கியம்!

கி.வீரமணி

  தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை  

5.4.2026     

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *