தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
- தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
- உண்மை கலப்பில்லாததும், அப்பட்டமான கோயபல்ஸ்தனமுமாகும்!
- ஆர்.எஸ்.எஸ்.சுக்கு கட்டுப்பட்டவராகிவிட்டார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது!
- ஏன் மறுத்தார் என்பதற்கு ஒரு பின்னணி உண்டு!
- என்றென்றைக்கும் பழனிசாமி அவர்கள் மீது அழிக்கப்பட முடியாத கறையாகும்!
- இவருடைய பண்பு எங்கே? அவருடைய பண்பு எங்கே?
- எங்களைப் போன்றவர்கள் சாட்சியங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்!
- எழுதப்படாத ஒரு நாகரிகம், ஒரு விதி!
- அ.தி.மு.க. தலைவர்களே விரும்பமாட்டார்கள், ஏற்கமாட்டார்கள்!
அரசியலில் அடிப்படை நாகரிகம் பேணப்படவேண்டும்! முத்தமிழறிஞர் கலைஞரைப்பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரம்தாழ்ந்து பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
உண்மை கலப்பில்லாததும்,
அப்பட்டமான கோயபல்ஸ்தனமுமாகும்!
அப்பட்டமான கோயபல்ஸ்தனமுமாகும்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும்,31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தோம் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளக் கூடிய ஓர் இயக்கத்தின் (அ.இ.அ.தி.மு.க.) பொதுசெயலாளராகவும் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அய்ந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், இந்திய அரசியலின் தலைசிறந்த தலைவராகவும் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைப் பற்றி, தரம் தாழ்ந்து பேசியிருப்பதும், ஆதாரம் இல்லாத ஒரு குற்றச்சாட்டை இன்றைய முதலமைச்சரும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகருமான மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது சுமத்தியிருப்பதும் உண்மைக்கு மாறானது என்பதைவிட, வெட்கப்படத் தகுந்த, வேதனை தரக்கூடிய ஒன்றாகும். எல்லாவற்றையும் தாண்டி, பண்பாடற்ற சில வார்த்தைகளைப் பேசியிருப்பது உண்மை கலப்பில்லாததும், அப்பட்டமான கோயபல்ஸ்தனமுமாகும்.
கலைஞரவர்கள் எப்படி எல்லாம் தன்னுடைய முதுமைக் காலத்தில் இருந்தார்கள், எப்படி அவரை பாதுகாத்திருந்தார்கள் என்பதை இறுதிவரை அவரைச் சென்று பார்த்த எங்களைப் போன்றவர்கள் இன்னும் வாழுகின்ற காலத்திலேயே இப்படி எல்லாம் அவதூறுகளைப் பரப்புவது நனிநாகரிகமாகாது; பண்பற்ற ஒரு செயலினுடைய பிரதிபலிப்பாகவே கருதப்படும்.
ஆர்.எஸ்.எஸ்.சுக்கு கட்டுப்பட்டவராகிவிட்டார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது!
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் பழனிசாமி அவர்கள், எவ்வளவு மனிதநேயத்துக்கு அப்பாற்பட்டு ஆர்.எஸ்.எஸ்.சுக்கு கட்டுப்பட்டவராகிவிட்டார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. முதலமைச்சரே உருக்கமாகச் சொல்லியிருக்கும் செய்தி ஒன்றை அவர்களுக்கு மீண்டும் நினைவூட்டுவது நல்லது.
ஏன் மறுத்தார் என்பதற்கு ஒரு பின்னணி உண்டு!
கலைஞர் அவர்களுடைய மறைவுக்குப் பின்னர், இன்றைய முதலமைச்சராக இருக்கக்கூடிய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அவர்தம் குடும்பத்தினருடன் சென்று, ‘கலைஞருடைய கடைசி விருப்பம் – அண்ணாவினுடைய நினைவிடத்திற்குப் பக்கத்திலேயே தன்னுடைய நினைவிடம் இருக்க வேண்டும்’ என்பதை, இன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்டார்கள். ஆனால், மனிதநேயமே இல்லாத நிலையில் அவர் மறுத்துவிட்டது மட்டுமல்ல, ஏன் மறுத்தார் என்பதற்கு ஒரு பின்னணி உண்டு.
என்ன அந்தப் பின்னணி என்று சொன்னால், ஆர்.எஸ்.எஸ். வடக்கிலிருந்து அவருக்குப் போட்ட உத்தரவுக்கு அடி பணிந்தார். அவர் இன்றைக்கு மட்டும் அடிபணியக் கூடியவர் அல்ல. அன்றைக்கே அடிபணிந்தவர் என்பது அரசியல் வட்டாரங்களிலே பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு செய்தி.
என்றென்றைக்கும் பழனிசாமி அவர்கள் மீது
அழிக்கப்பட முடியாத கறையாகும்!
அழிக்கப்பட முடியாத கறையாகும்!
ஆனால், நம்முடைய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நினைத்ததைச் சாதித்துக் காட்டும் ஆற்றல் உள்ளவர்; ஆளுமையுள்ளவர் என்பதற்கு அடையாளமாக உடனே நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். இங்கே மறுக்கப்பட்ட அந்த மனிதாபிமான அடிப்படைக் கோரிக்கை நீதிமன்றத்தின் வாயிலாக அதிகாரப்பூர்வமாகவே ஆணையாகப் பெறப்பட்டு, சில மணி நேரங்களிலேயே அந்தப் பணிகள் நடைபெற்று மக்கள் வெள்ளத்துக்கிடையிலே தன்னுடைய இறுதிப் பயணத்தை நம்முடைய கலைஞர் அவர்கள் செய்தார்கள். இந்தப் பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமி நடந்துகொண்டது, என்றென்றைக்கும் அவர் மீது அழிக்கப்பட முடியாத ஒரு மிகப் பெரிய கறையாகும்.
இவருடைய பண்பு எங்கே? அவருடைய பண்பு எங்கே?
ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், அதை எல்லாம் ஒரு வன்மமாக எடுத்துக்கொள்ளாமல் – தனிப்பட்ட முறையில் சொன்னதற்காகச் சொல்கிறேன் -புரிந்துகொள்ள வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சராகிறார். அவர் எதிர்கட்சித் தலைவராகிறார். அப்படிப்பட்ட காலகட்டத்திலே தான் முதலமைச்சராக இருந்த அந்த வீட்டிலேயே தொடரும்படியாக அனுமதி கொடுங்கள் என்று பழனிசாமி, நம்முடைய முதலமைச்சரிடத்தில் கேட்டபோது, “தாராளமாக அப்படியே இருங்கள்” என்று அவருக்கு முதலமைச்சர் அனுமதி கொடுத்ததார். இவருடைய பண்பு எங்கே? அவருடைய பண்பு எங்கே?
அது மட்டும் அல்ல, ஜெயலலிதா அம்மையாருடைய அட்டைப் படம் போட்டு, கல்வித்துறையிலே தயாரிக்கப்பட்டிருந்தவற்றை எல்லாம், ஆட்சி மாறிய பிறகு, அதை எல்லாம் நீக்க வேண்டுமென்று சிலர் நினைத்துக்கொண்டு இருந்த காலகட்டத்தில் முதலமைச்சரிடத்தில் சென்றிருக்கிறார்கள். ‘‘தேவை இல்லை, அதே பெயர் இருக்கட்டும்’’ என்று அவர்கள் சொன்னார்கள்.
சட்டமன்றக் கட்டடத்தை மீண்டும் மாற்ற வேண்டாம் என்று சொன்னது, அம்மையார் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகம் தொடர்பான மசோதாவும் ஆளுநரிடத்திலே நிலுவையில் இருந்தபோது அதற்கும் சேர்த்து வழக்கு தொடுத்து, அப் பெயரைக் காப்பாற்றியது என்று தன்னுடைய பெருந்தன்மையால்,
‘‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்’’
என்பதற்கு அடையாளமாகத்தான் அவர்கள் நடந்து காட்டினார்.
அப்படிப்பட்ட சூழலை மறந்துவிட்டு, திடீரென்று கலைஞரை சிறை வைத்தார்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால், என்ன அர்த்தம்? அதே நேரத்தில் அந்த அம்மையாருடைய கடைசி காலகட்டம் பற்றி வெளிப்படையான செய்திகள் உண்டா? அவற்றை எல்லாம் மற்றவர்கள் சொன்னால் அது சரியானது ஆகாது.
எங்களைப் போன்றவர்கள் சாட்சியங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்!
கலைஞருடைய வாழ்க்கையில், உடல்நலைக் குறைவு ஏற்பட்டு இருக்கும் நேரத்தில், அதிகமாகக் கவனித்த பெருமையும், அவரை எந்த நேரத்திலும் உடனிருந்து எல்லாவற்றிற்கும் உதவியாக இருந்தார்கள் என்பதற்கும் எங்களைப் போல் சாட்சியர் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
ஆகவேதான், இப்படி உண்மைக்கு மாறான புரட்டுச் செய்திகளை எல்லாம் அவர் எடுத்து சொல்லக்கூடாது. இது பண்பாடற்ற ஒரு நிலை. எனவே, ”பண்பாடற்ற பழனிச்சாமி” என்று அவர் பெயர் எடுக்கக்கூடாது.
எழுதப்படாத ஒரு நாகரிகம், ஒரு விதி!
இன்னொரு வேதனையான உதாரணத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும். தோழர் நல்லகண்ணு அவர்கள் அனைவராலும் நேசிக்கப்படக்கூடிய ஒரு மக்கள் தலைவர். எளிமையின் சின்னம். நல்லகண்ணு அவர்கள் மறைந்த நேரத்தில், அவருக்கு இறுதி மரியாதை செய்யப் போகாத ஒருவர் உண்டென்றால் – எதிர்க்கட்சித் தலைவர், அரசு மரியாதை கொடுக்கும்போது எதிர்க்கட்சித் தலைவரும் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு நாகரிகம், ஒரு விதி.
ஆனால், அவர் அதைப் புறக்கணித்தது மட்டுமல்ல, அங்கே அவர் வராதது மட்டுமல்ல; அதற்குச் செய்தியாளர் கேட்டபோது சொன்னார், “என்னுடைய அம்மா இறந்ததுக்கு அவர் வரவில்லை. ஆகவேதான், நான் போகவில்லை” என்று. இதை விட தரக்குறைவான விஷயம் என்ன இருக்கிறது? உடனடியாக கம்யூனிஸ்ட் கட்சியிலேயே இருந்து அதற்கு மறுப்பு கொடுக்கப்பட்டது. ‘‘இல்லை, கட்சியின் சார்பாக மற்றவர்கள் நேரில் சென்றார்கள். மாநிலச் செயலாளர் சென்னையில் விசாரித்தார்’’ என்றும் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே, இந்தப் பிரச்சினையில் இதை அவர்கள் சொல்லப் போய், அவருடைய தரம்தான் வெளிப்பட்டது.
‘‘சேராத இடம்தன்னில் சேர வேண்டாம்’’ என்பதற்கு உதாரணமாகிவிட்டார். அன்றைக்குக் கலைஞருக்கு இடம் தரக்கூடாது என்பதிலே வடக்கு அவரை வளைத்தது. இன்றைக்கும் அது தொடர்கிறது. பச்சையாக வெளிப்படையாக வந்துவிட்டார்கள் என்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
அ.தி.மு.க. தலைவர்களே விரும்பமாட்டார்கள், ஏற்கமாட்டார்கள்!
அரசியலுக்கு அப்பாற்பட்டு, மனிதநேயம் காப்பாற்றப்படுவதுதான் தமிழ்நாட்டுடைய பண்பாடு. அதற்கு எத்தனையோ உதாரணங்கள் தமிழ்நாட்டு அரசியலிலே உண்டு. ஆனால், இவ்வளவு கீழிறக்கத்துக்கு சென்ற ஒரு நிலை வேறு எங்கும் கிடையாது. 31 ஆண்டுகளாக ஆண்டோம் என்று பெருமைப்படக்கூடிய பழனிசாமி அவர்களின் இது போன்ற வார்த்தைகளை எல்லாம் அந்தக் கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்களே விரும்பமாட்டார்கள். ஏற்கமாட்டார்கள். இதுதான் உண்மை!
சென்னை தலைவர்,
5.4.2026 திராவிடர் கழகம்
