சென்னை, ஏப்.3 தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முக்கிய அரசியல் தலைவர்களின் வாகனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.
கனிமொழி எம்.பி.,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் நேற்று (2.4.2026) தேர்தல் பிரசாரத்திற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர் வருகை தந்தார். கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டுவிட்டு, திருப்புவனம் பகுதிக்கு பிரசாரத்திற்காக அவர் சென்றார். அப்போது, திருப்புவனம் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே மருத மரம் அருகே நிலைநிறுத்தப்பட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர், கனிமொழியின் வாகனத்தை வழிமறித்துச் சோதனை செய்தனர். இந்தச் சோதனையின்போது, கனிமொழி தனது வாகனத்திலிருந்து கீழே இறங்கி அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார். காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் வாகனத்தை முழுமையாகச் சோதித்த பிறகு, எவ்விதப் பொருட்களும் சிக்காத நிலையில் வாகனத்தைச் செல்ல அனுமதித்தனர்.
அமைச்சர் அன்பில் மகேஷ்
இதேபோல், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடந்த சில நாட்களாகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் திருவெறும்பூர் – வேங்கூர் சாலையில் பிரசாரத்திற்காகக் காரில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு தயார் நிலையில் இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரது காரைத் தடுத்து நிறுத்திச் சோதனை மேற்கொண்டனர். சுமார் 5 நிமிடங்கள் வரை நீடித்த இந்தச் சோதனையில், காரில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று தனது பிரசாரத்தைத் தொடர்ந்தார்.
