சஹாரா பாலைவனத்தில் 2,000 கி.மீ நீளத்திற்கு உருவான மாபெரும் மணல் சுவர் விண்வெளியில் இருந்து படம்பிடிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 48 கி.மீ வேகத்தில் சீறிப்பாயும் இந்த ‘ஹபூப்’ புயல், அமேசான் காடுகளுக்கு எப்படி உரமாகிறது?
இயற்கையின் சீற்றம் சில நேரங்களில் கற்பனைக்கும் எட்டாத வகையில் இருக்கும். அதற்குச் சாட்சியாக, தற்போது உலகின் மிகப்பெரிய வெப்பப் பாலைவனமான சஹாராவில் சுமார் 2,000 கி.மீ. நீளத்திற்கு ஒரு மாபெரும் மணல் சுவர் உருவெடுத்துள்ளது. இது விண்வெளியில் இருந்து பார்த்தால் பூமியின் ஒரு பகுதியைத் திரையிட்டு மறைப்பது போலக் காட்சி அளிக்கிறது.
அல்ஜீரியாவின் மேல் உருவான சக்திவாய்ந்த குறைந்த காற்றழுத்த மண்டலம், சஹாரா பாலைவனத்தை ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளது. சுமார் 1,200 மைல்கள் (2,000 கி.மீ) நீளமுள்ள அடர்த்தியான மணல் மூட்டம், ஒரு ராட்சத சுவரைப் போல பாலைவனப் பரப்பு முழுவதும் செங்குத்தாக எழுந்து நிற்கிறது.
இந்த மாபெரும் மணல் புயல், மணிக்கு 48 கி.மீ வேகத்தில் தென்மேற்கு திசையை நோக்கி ஆவேசமாக நகர்ந்து வருகிறது. வளிமண்டலத்தில் டன் கணக்கிலான மணல் துகள்களை வாரி இறைக்கும் இந்நிகழ்வை வானிலை ஆய்வாளர்கள் ‘ஹபூப்’ என்றழைக்கின்றனர். சஹாராவில் இது போன்ற புயல்கள் சகஜம் என்றாலும், இவ்வளவு பெரிய அளவிலும் தீவிரத்திலும் புயல் உருவானது வல்லுநர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வானையே மறைக்கும் இந்த மணல் திரை சாதாரணமானது அல்ல. இந்தப் புயல் கடக்கும் இடங்களில் பார்வைத் திறன் (Visibility) முற்றிலுமாகப் பூஜ்ஜியத்திற்குச் செல்லும். இது சாலை மற்றும் விமானப் போக்குவரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகும். காற்றில் கலக்கும் மிக நுண்ணிய துகள்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்கும் வல்லமை கொண்டவை. இவை மக்களின் சுவாசக் குழாய்களைப் பாதித்து கடுமையான உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். இந்த விசித்திரமான புயலில் ஒரு நன்மையும் ஒளிந்திருக்கிறது.
சஹாராவிலிருந்து கிளம்பும் இந்த மணல் துகள்கள் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து சென்று அமேசான் மழைக்காடுகளில் போய் விழும். அந்த மணலில் உள்ள இரும்பு மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள், அமேசான் காடுகள் செழிப்பாக வளரத் தேவையான இயற்கை உரமாகச் செயல்படுகின்றன. இது இயற்கையின் ஒரு ஆச்சரியமான சுழற்சி.
தற்போது மேம்பட்ட செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் இந்த மணல் சுவரின் நகர்வுகளை விஞ்ஞானிகள் வினாடிக்கு வினாடி கவனித்து வருகின்றனர். இந்த பிரம்மாண்ட மணல் படலம் தனது தென்மேற்கு நோக்கிய பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதால், அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மணல் புயலின் நீளம் (2,000 கி.மீ), ஏறத்தாழ இந்தியாவின் வடக்கிலிருந்து தெற்கு வரையிலான தூரத்தில் பாதிக்கும் மேலானது என்பது குறிப்பிடத்தக்கது.
