ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் அமெரிக்க போரில் இணையத் தயாராகும் அய்க்கிய அரபு அமீரகம்!

3 Min Read

துபாய், ஏப்.2– ஹார்மூஸ் நீரிணையை மூடியுள்ள ஈரானுக்கு எதிரான அமெரிக்க போரில் இணைய யுஏஇ தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்வகையில், ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடி உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், ஹார்மூஸ் நீரிணையை திறப்பதற்காக ஈரானுக்கு எதிராக போரிடும் அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளுடன் அய்க்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இணையத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி அறிக்கையின்படி, இத்தகைய ராணுவ நடவடிக்கைக்கு அனுமதி அளிக்கும் வகையில் அய்க்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டு வர யுஏஇ அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஹார்மூஸ் நீரிணையை பலவந்தமாகத் திறக்க ஒரு கூட்டணியை உருவாக்குமாறு அமெரிக்கா, அய்ரோப்பா மற்றும் ஆசிய நாடுகளின் ராணுவ சக்திகளை யுஏஇ தூதர்கள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்க கடற்படையின் அய்ந்தாவது படைப்பிரிவு அமைந்துள்ள பஹ்ரைன், இந்த அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கிறது. இது குறித்த வாக்கெடுப்பு இன்று (2.4.2026) நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹார்மூஸ் நீரிணையில் உள்ள ஈரானிய கண்ணிவெடிகளை அகற்றுவது உள்ளிட்ட ராணுவப் பங்களிப்பை எவ்வாறு வழங்கலாம் என்பது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக யுஏஇ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானியர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழையவோ அல்லது கடந்து செல்லவோ அமீரகம் தடை விதித்துள்ளது.

இருப்பினும், ‘கோல்டன் விசா’ (10 ஆண்டு வசிப்பிட அனுமதி) வைத்திருப்பவர்கள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். மேலும், துபாயில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த ஈரானிய மருத்துவமனை மற்றும் ஈரானிய கிளப் ஆகியவையும் மூடப்பட்டுள்ளன. ஈரானில் உள்ள ஆட்சி வீழ்த்தப்படும் வரை போர் தொடர வேண்டும் என சவுதி அரேபியா உள்ளிட்ட இதர வளைகுடா நாடுகளும் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, ஈரானை எதிர்கொள்ள பிராந்தியத்தில் உள்ள முக்கியமான நாடுகளுடன் இஸ்ரேல் புதிய கூட்டணிகளை உருவாக்கி வருவதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். குறிப்பாக, சில அரபு நாடுகள் தங்களோடு இணைந்து போரிடுவது குறித்துப் பேசி வருவதாக அவர் அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய ராணுவ விமான விபத்தில்
30 பேர் உயிரிழப்பு!

மாஸ்கோ, ஏப்.2– ரஷ்ய ராணுவ விமானம் க்ரிமியா பகுதியில் நேற்று முன்தினம் (31.3.2026) இரவு விபத்துக் குள்ளானதில் அதில் பயணம் செய்த 30 பேர் உயிரிழந்தனர். ரஷ்ய ராணுவத்தில் உள்ள பழமையான போக்குவரத்து விமானம் ஏஎன்-26. சோவியத் ரஷ்யா காலத்தில் 1969-1985ஆம்ஆண்டுகளுக்கு இடையே தயாரிக்கப்பட்டது. இந்த விமானத்தில் நேற்று முன்தினம் (31.3.2026) 7 ஊழியர்கள், 23 பயணிகள் என மொத்தம் 30 பேர் பயணம் செய்தனர்.

இந்த விமானம் ரஷ்யாவின் க்ரிமியா பகுதியில் உள்ள செவஸ்தோபோல் என்ற இடத்தின் அருகே நேற்று முன்தினம் (31.3.2026) இரவு விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 30 பேரும் உயிரிழந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் எனவும், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில்
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சுனாமி எச்சரிக்கை விடுப்பு- மக்கள் பீதி!

டெர்னேட், ஏப்.2– இந்தோனேசியாவின் டெர்னேட் அருகிலுள்ள வடக்கு மொலுக்கா கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்தையடுத்து உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

உள்ளூர் நேரப்படி இன்று (2.4.2026) காலை 6.48 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தோனேசியாவில் பல்வேறு இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். கடலில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளில் சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா மட்டுமின்றி பிலிப்பைன்ஸ், மலேசியாவிலும் சுனாமி அலைகள் எழ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் தற்போது வரை கிடைக்கவில்லை.

ஈரானில் 1,937 பேர் உயிரிழப்பு: 24,800 பேர் காயம்

தெஹ்ரான், ஏப்.2- அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில் ஈரானில் இதுவரை 1,937 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24,800 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் 24 பேரும் அமெரிக்க வீரர்கள் 13 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். குவைத், பஹ்ரைன், சவுதி உள்ளிட்ட நாடுகளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 6,239 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் இதுவரை 1,268 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3,750 பேர் காயமடைந்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *