புரசைவாக்கம், மார்ச் 31- சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் தளபதி அழகிரி அவர்களின் 77ஆம் ஆண்டு நினைவு நாள் – கழகப் பிரச்சாரக் கூட்டம் 28.3.2026 மாலை 6.30 மணிக்கு புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச் செல்வன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தலைமை வகித்து உரையாற்றினார்.
மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், வடசென்னை மாவட்ட கழகக் காப்பாளர் கி.இராமலிங்கம், துணைத் தலைவர் நா.பார்த்திபன், அமைப்பாளர் சி.பாசுகர், பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பொதுக்குழு உறுப்பினர் தங்க.தனலட்சுமி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் த.மரகதமணி, இளைஞரணித் தலைவர் பா.பார்த்திபன், மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் ச.சஞ்சய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில கழக மகளிர் பாசறைச் செய லாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மாநில கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் சேத்துப்பட்டு கோ.இளங்கோ, கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால் ஆகியோர் உரையாற்றினர்.
கழகத் துணைத் தலைவர் சிறப்புரை
நிறைவாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை யாற்றினார்.
அவர் தமது உரையில், அஞ்சா நெஞ்சன் அழகிரியின் 77ஆம் ஆண்டு நினைவு நாளில் தஞ்சையில் உள்ள அவரது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்திய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் இப்போது பட்டுக் கோட்டையில் நினைவேந்தல் உரை ஆற்றும் வகையில் அங்கே ஒரு பொதுக் கூட்டம் நடைபெறுகின்றது. அவரது அறிக்கைக்கிணங்க தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் இதுபோன்ற கூட்டங்கள் நடைபெறுகின்றன. வடசென்னையில் இந்தக் கருத்துப் பிரச்சாரக் கூட்டம் நடப்பது சிறப்பான ஒன்றாகும்.
அழகிரியின் மறைவு
60 வயது நிறைவடைவதற்கு முன்பாக மறைவுற்ற அறிஞர் அண்ணா, அன்னை மணியம்மையார், விமான விபத்தில் இளவயதில் மறைவுற்ற சர். ஏ.டி.பன்னீர்செல்வம் ஆகியோரைப் போன்று அய்ம்பது வயது நிறைவடைவதறகு முன்பாகவே 1949இல் இதே நாளில் அழகிரியும் மறைவுற்றார்.
ஜாதிக் கொடுமைகள், பெண்ணடிமை, மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடி தந்தை பெரியார் கருத்துகளை இந்த மண்ணில், மக்களிடத்தில் பதிய வைத்தவர்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள்.
தமிழர் பெரும் படை
ஹிந்தித் திணிப்புக்கு எதிராக – தமிழர் பெரும் படையை 100 பேருடன் திருச்சியிலிருந்து வழி நடத்தியவர் அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள். கல்வீச்சு, செருப்புத் தோரணம், அழுகிய முட்டை வீச்சு, கலவரம் போன்றவையை சந்தித்து வெற்றிகரமாக அந்தப் பயணம் அழகிரி அவர்களால் நடத்தி முடிக்கப்பட்டது.
அந்நாளில் பானகல் அரசர் முன் உட்கார்ந்து பேசக் கூடியவர்கள் 2 பேர்தான். தந்தை பெரியார் ஒருவர். மற்றொருவர் அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள்.
சுயமரியாதை இயக்கக் களத்தில் அழிக்கப்பட முடியாத வரலாற்று முத்திரைச் சம்பவங்களைப் படைத்து, தந்தை பெரியாரின் மனதில் தனி இடத்தைப் பெற்றவர் அழகிரி அவர்கள்.
49ஆவது வயதில் காசநோய்க் கொடுமையினால் அவர் மறைய நேரிட்டது. இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியில் அந்த நோய்க்கு மட்டுமல்ல; அனைத்து வித நோய்களுக்கும் நல்ல மருத்துவத்தைத் தரக்கூடிய அளவிற்கு இந்தியாவிலேயே சிறந்ததொரு மருத்துவக் கட்டமைப்பைத் தமிழ்நாடு பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் மதவாதிகள் கால் பதிக்க முடியாமல் போனதற்கு சுயமரியாதை இயக்கமே தடுப்பணையாக அமைந்துள்ளது. காவிகள் ஆதிக்கம் பெற முடியாததற்கு அஞ்சாநெஞ்சன் அழகிரி போன்ற தளபதிகளின் உழைப்புதான் அடிப்படையாகும். வட மாநிலங்களில் கொடிகட்டிப் பறக்கின்றார்கள் என்றால் அங்கு சுயமரியாதை இயக்கம் தோன்றாததே காரணமாகும்.
மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி
மதவெறியைத் தூண்டிவிட்டு, கடவுளைக் காட்டி, மக்களை ஏமாற்றி, வாக்குகளைப் பெற்று வடமாநிலங்களில் செய்தது போல் கட்சிகளைச் சிதைத்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நினைக்கின்றார்கள்.
‘திராவிட மாடல்’ அரசாங்கத்தைச் சிறப்பாக நடத்தி வருகின்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டது போன்று, வருகின்ற சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் – டில்லிக்கும் நடக்கின்றத் தேர்தல். சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான அளவில் வெற்றி பெற்று ‘திராவிட மாடல்’ ஆட்சித் தொடர்வது உறுதியான ஒன்று என்று குறிப்பிட்டு, இயக்க வரலாற்றில் அழியா இடம் பெற்ற அஞ்சாநெஞ்சன் அழகிரி பற்றிய தகவல்களை எடுத்துக் கூறி உரையாற்றினார்.
பங்கேற்றோர்
இக்கூட்டத்தில் ‘பாசறை முரசு’ இதழாசிரியர் மு.பாலன், அயன்புரம் கழக அமைப்பாளர் சு.துரைராசு, கொடுங்கையூர் கழகத் தலைவர் கோ.தங்கமணி, செம்பியம் கழகத் தலைவர் ப.கோபாலகிருஷ்ணன், ஓட்டேரி மு..சேகர், க.செல்லப்பன், சி.வெற்றிச்செல்வி, ப.சோபனா, த.இளவரசி, பா.யாழினி, யு.சுஜேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 99ஆவது வட்டச் செயலாளர்கள் புல்லட் அப்பு, சே.ஜெயராஜ், 61ஆவது வட்ட செயலாளர் சு.யுவராஜ், 99ஆவது வட்ட மதிமுக செயலாளர் சாக்ரடீசு, மதிமுக பகுதி பிரதிநிதி இராஜேந்திரன், கே.எஸ்.மகேஸ்வரன், த.ராஜா மற்றும் கழகத் தோழர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.
புரசைவாக்கம் நெடுஞ்சாலை, வெள்ளாளர் தெருவில் கழகக் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டு, சிறப்பாக நடைபெற்ற இக்கூட்டத்தின் நிறைவாக மாவட்ட துணைத் தலைவர் க.பாலமுருகன் நன்றி கூறினார்.
