தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்நாள் மாணவன் நான்! ‘‘வாழ்க்கை என்பதை நமக்காக வாழக்கூடாது; அப்படி வாழ்ந்தால், அது சாதாரணம்’’ – தந்தை பெரியார்!

8 Min Read

சமுகத்திற்காக நாம் பணியாற்ற வேண்டும் – தொண்டாற்ற வேண்டும் – பொதுத் தொண்டு மனிதனுக்கு அவசியமானது!திருக்குறள் பேரவைக் கூட்டத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

சென்னை, மார்ச் 31 தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்நாள் மாணவன் நான். அய்யா, சொல்வார், வாழ்க்கை என்பதை  நமக்காக வாழக்கூடாது. அப்படி வாழ்ந்தால், அது சாதாரணம். சமுகத்திற்காக நாம் பணியாற்ற வேண்டும், தொண்டாற்ற வேண்டும். பொதுத் தொண்டு மனிதனுக்கு அவசியமானது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘திருக்குறள் பேரவை’’

22.3.2026 அன்று மாலை சென்னை குரோம் பேட்டையில், திருக்குறள் பேரவை சார்பில் நடைபெற்ற மார்ச் மாதக் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்பு ரையாற்றினார்.

29.3.2026 அன்று ‘விடுதலை’யில் வெளிவந்த அவரது சிறப்புரையின் தொடர்ச்சி வருமாறு:

‘‘அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை’’ (குறள் 315)

பிறிதின் நோய் தன்னோய் போல் போற்றாக் கடை என்பதற்கு என்ன அடையாளம் என்றால், இங்கே இருப்பவர்கள் எல்லாருமே விவரம் தெரிந்தவர்கள். கோபமும் வரும், வள்ளுவருக்கு –  சில நேரங்களில் சமூகத்திற்கு விரோதமாக நடக்கிறது அல்லது மனிதத்தன்மையற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள் என்று சொல்லும் போது, வள்ளுவருடைய அந்தக் கோபத்தைப் பாருங்கள்,

இது மிக முக்கியமான ஒரு குறள்.

நான் அடிக்கடி என்னுடைய உரையில் இந்தக் குறளை மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

நான் ஒரு பெரியார் தொண்டன், சமூகத்திற்காகப் பணியாற்றக்கூடியவன்.

‘‘ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்’’ (குறள் 214)

இன்றைய காலகட்டத்தில் 100 ஆண்டுகள் வாழ்வது சாதாரணமாக போய்விட்டது!

ஒருவரை வாழ்த்தும்போது, ‘‘நீங்கள் 100 ஆண்டுகள் வாழவேண்டும்’’ என்று வாழ்த்து வார்கள். இப்பொழுதெல்லாம் 100 ஆண்டுகள் வாழ்வது சாதாரணமாக போய்விட்டது. ஆகவே, எல்லோருமே நீண்ட காலம் வாழ வேண்டும் அல்லது நீங்கள் விரும்புகிற காலம் வரை வாழ வேண்டும்.

வாழ்வது முக்கியமல்ல நண்பர்களே, எப்படி வாழ வேண்டும்? யாருக்காக வாழ வேண்டும்? என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் போது, வள்ளுவர்  ஒரு சீரிய பகுத்தறிவாளராக இருந்து, ஒரு சமூகத் தொண்டராக இருந்து, சமூகப் பார்வையோடு மனித குலத்தை – இந்த மதம், இந்த ஜாதி, இன்ன வகுப்பு, இந்த நாட்டார் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், உலகம் ஒரு குலம், உலகம் ஓர் அமைப்பு, யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பதை எடுத்துச் சொன்னார்கள்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்’ என்று  நாம் காதால் கேட்டது தான். ஆனால் நடைமுறையில் மட்டும் நாம், நம்முடைய ஜாதிதான் மிக முக்கியம் என்று நினைப்போம். இப்படி நினைத்துக் கொண்டு, வள்ளுவர் குறளைப் படிப்பதால், எந்தவிதமான பயனும் கிடையாது.  அந்த வகையில் தான் அவர் சொன்னார், அறிவற்றங்காக்கும். ஆனால், அந்த அறிவிலேயே பல வகையான அறிவு உண்டு. பகுத்தறிவு, பட்டறிவு, பொது அறிவு இப்படி பல அறிவுகளைப் பற்றிச் சொல்லுகிற நேரத்தில், மிக முக்கியமான ஒரு கருத்தைச் சொல்கிறார்.

‘‘ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்’’

ஒத்தறிவு என்று ஓர் அறிவு உண்டாக்கியிருக்கிறார் வள்ளுவர். ஆங்கிலத்தினுடைய வளர்ச்சியும், தாக்கமும் மிக அதிகமாக சில பேருக்கு உள்ளது. நம்முடைய இளைஞர்களுக்குக் கூட தமிழில் சொல்லிக்கொடுக்கும் போது, இங்கிலீஷில் விளக்கம் சொல்ல வேண்டும்.

‘‘அது என்ன சார்? அதைக் கொஞ்சம் இங்கிலிஷ்ல சொல்லுங்க சார்.  தமிழில் புரியவில்லை’’ என்பார்கள்.

‘Sympathy’ க்கும், ‘Empathy’ –க்கும்
என்ன வித்தியாசம்?

எப்படி வளர்ந்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.  ஒருவருடைய வறுமையைப் பார்த்து அல்லது நோயைப் பார்த்து அல்லது நிலைமையைப் பார்த்து நாம் சங்கடப்படுகிறோம். அந்த மனநிலையில், ‘‘அய்யோ அவர் இதுபோன்று இருக்கிறாரே’’ என்று இரக்கப்படுகிறோம். அவரால் முடியவில்லையா? ஆனாலும், முடியாமல் செய்கிறாரா? என்று சொல்லும் போது, இரக்கப்படுதல். ஆங்கிலத்தில் என்ன சொல்லுவோம், ‘Sympathy’ என்று சொல்லுவோம்.

‘Sympathy’ என்பதைவிட, அதிகமான ஓர் உணர்வு படைத்த ஒரு சொல் இருக்கிறது  ஆங்கிலத்தில். அது தான் ‘Empathy’ என்பது.  இந்த இரண்டு சொற்களும் ஆங்கிலத்தில் இருக்கின்றன.

‘Sympathy’ க்கும், ‘Empathy’ –க்கும் என்ன வித்தியாசம் என்றால், ஒருவரைப் பார்த்து, ‘‘அய்யோ இவர் இவ்வளவு சங்கடப்படுகிறாரே’ என்று இரக்கப்படுவது ‘Sympathy’. ஆனால், அந்தத் தொல்லைக்கு ஆளாகி, அந்த அவதிக்கு ஆளாகியிருக்கிறாரே, அவராகவே மாறிவிடுவதற்குப் பெயர்தான் ‘Empathy’.

‘Empathy’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் என்ன சொல் என்று ஆராய்ந்து பார்த்தோம்.

அறிவுத் தேடல் என்பது  வாழ்நாள் முழுவதும் அவசியமானதாகும்!

நான் பல நண்பர்களிடம், மறைந்த அய்யா புலவர் நன்னன் போன்றவர்களிடம் கேட்டேன். இதற்குச் சரியான சொல்லை நம்முடைய இலக்கியங்களில் தேடினாலே கிடைக்கும். நம்முடைய தேடல் மிக முக்கியம் – அறிவுத் தேடல் என்பது  வாழ்நாள் முழுவதும் அவசியமானதாகும்.

அப்படிப்பட்ட ஓர் அறிவுத் தேடலை மய்யமாக வைத்துக் கொண்டு பார்க்கிறபோது, இதில் திருவள்ளுவருடைய திருக்குறளில் அதற்குச் சமமாகக் கிடைத்தது.

அது என்னவென்றால்,

‘‘ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்’’

பேராசிரியர் கு.வெ.கி.ஆசான், இறையன் ஆகியோரு டன் பெரியார் திடலில் பேசிக் கொண்டிருக்கும்போது, இந்தக் கேள்வியை அவர்களிடம் நான் கேட்டிருக்கிறேன்.

சமுதாயத்துக்குப் பயன்பட்டோமா? என்பதுதான் மிக முக்கியம்!

‘Empathy’  ஒத்தறிவுன்னு ஏன் சொல்லக்கூடாது? என்றும் கேட்டேன்.

வாழ்க்கை என்பது எத்தனை வயதுவரை வாழ்ந்தோம் என்பது இல்லை. யாருக்குப் பயன்பட்டோம்? சமுதா யத்துக்குப் பயன்பட்டோமா? என்பதுதான் மிக முக்கியம்.

இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழாதவர்கள் எல்லாம் செத்தாருள் வைக்கப்படும் என்கிறார் திருவள்ளுவர்.

சமுதாயத்தில் நிலைக்கக்கூடிய
தொண்டு எது?

ஒருவர், சமுகத்திற்குப் பயன்படாமல், யாருக்கும் பயன்படாமல் மிகப்பெரிய அளவுக்கு செல்வத்தை வைத்திருந்தால், அதனால் யாருக்கு என்ன நன்மை?  அய்யா  வி.ஜி.பி. சந்தோஷம் அவர்கள் இருக்கிறார்கள்,  இவரை விட பணக்காரர்கள் இருகிறார்கள்; இவரைவிட வசதி படைத்தவர்கள் இருக்கிறார்கள். இவரைவிட பெரிய அளவிற்குத் தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர் ஒருவர்தானே, உலகத்திற்கே வள்ளு வரைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அது எவ்வளோ பெரிய தொண்டு அது. சமுதாயத்தில் நிலைக்கக்கூடிய தொண்டு அல்லவா!

இப்படி இல்லாமல் வாழும் மற்றவர்களுடைய வாழ்க்கை செத்தாருள் வைக்கப்படும்.

உயிர் வாழ்கிறவர்கள் எல்லோரும், உயிர் வாழ்கிற வர்கள் இல்லை. நம்முடைய நாவலர் அவர்கள் உரை யாற்றும்போது சொல்வார், ‘‘சோற்றால் அடித்த பிண்டம்’’ என்று,

ஆகவே, உயிர் வாழக்கூடியவர்கள் என்று சொன்னால், அவர்கள் மக்களுக்கு பணியாற்றக்கூடியவர்கள் மட்டுமல்ல. மற்றவர்களுடைய துன்பத்தை, தன்னுடைய துன்பமாகவே கருதக்கூடியவர்கள் யாரோ, அவர்கள்தான் ஒத்தறிவு உள்ளவர்கள். ‘Empathy’ உள்ளவர்கள்.

பொதுத் தொண்டு மனிதனுக்கு அவசியமானது!

தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்நாள் மாண வன் நான். அய்யா, சொல்வார், வாழ்க்கை என்பதை  நமக்காக வாழக்கூடாது. அப்படி வாழ்ந்தால், அது சாதாரணம். சமுகத்திற்காக நாம் பணியாற்ற வேண்டும், தொண்டாற்ற வேண்டும். பொதுத் தொண்டு மனித னுக்கு அவசியமானது.

அந்தப் பொதுத் தொண்டு எப்படி இருக்கும்?

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் அன்பாக இருக்கக்கூடியவர்கள். ஒருமுறை அவர்கள், நீண்ட பயணம் செய்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டி இருந்தது. அப்போது அடிகளார், ‘‘அய்யா உங்களோடு வேனில் நான் வந்தால், உங்களோடு பேசிக் கொண்டே போகலாம்’’ என்று சொல்கிறார்.

உடனே அய்யா அவர்கள், ‘‘சன்னிதானம் எப்படிப் போகலாம் என்று விரும்புகிறீர்களோ, அப்படியே போகலாம். நான் உங்களுடைய காரிலேயே வருகி றேன்’’என்றார்.

இரண்டு பேரும் காரில் அமர்ந்து, பேசிக்கொண்டே வருகிறார்கள்.

உங்களுக்கு மிகவும் பிடித்த குறள் எது?

அடிகளார் அவர்கள் அய்யாவைப் பார்த்து, ‘‘அய்யா திருக்குறளில் 1330 குறள்கள் இருக்கின்றன. அந்தக் குறள்களை நாடு முழுவதும் பரப்புகின்ற பணிகளைச் செய்கிறீர்கள். அந்தக் குறள்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த குறள் எது? அதை நான் தெரிந்துகொள்ளவேண்டும்.  எல்லா குறள்களையும் நீங்கள்  படித்திருக்கிறீர்கள், அதைப்பற்றி பேசியிருக்கி றீர்கள், நானும் உங்களுடைய உரைகளைப் பார்த்தி ருக்கிறேன். உங்களுக்கு மிகவும் பிடித்த குறள் எது?’’ என்று கேட்ட ரேநத்தில்,

அய்யா அவர்கள் சொன்னார்,

‘‘குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும்’’ (குறள் 1028) என்று.

பொதுப்பணி, பொதுத்தொண்டு என்பதினுடைய தன்மை என்ன? என்பதைப்பற்றி அந்தக் காலத்திலேயே வள்ளுவர் மிக அழகாக ஆய்வு செய்திருக்கிறார். பொதுத்தொண்டு என்பது சாதாரணமாகப் பணம் சேர்ப்பது இல்லை. பெருமையைச் சேர்ப்பது இல்லை. புகழ் சேர்ப்பது இல்லை. அதெல்லாம் தானாக வரும், தானாகப் போகும். ஆனால், அதே நேரத்தில் மிக முக்கிய மாக கவனிக்க வேண்டிய ஒரு செய்தி என்னவென்று நாம் ஆய்வு செய்தோமேயானால்,

அதில்,

‘‘குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும்’’

பொது நலத்துக்காக,
பொதுத் தொண்டுக்காக!

தனி வாழ்க்கையில், மனிதனுக்கு மானம் மிக முக்கியம். எனவேதான், மானம், தன்மானம், இனமானம் என்று சொல்லக்கூடிய அந்த மானம் உனக்கு  இல்லையா? என்று கோபத்தில் கேட்போம்.  அந்த மானத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாலும், அந்த மானத்தைக் கூட விட்டு விட்டு, அதைப் பற்றி கவலைப்படக்கூடாது. எப்பொழுது? பொதுத்தொண்டு செய்கிறபொழுது. ‘‘எனக்கென்று கொஞ்சம் ரூபாய் கொடுங்கள்’’ என்று   துண்டு ஏந்தினால், அது அவமானம். ஆனால், அதே நேரத்தில் ‘‘இந்தப் பள்ளிக்காக உதவுங்கள்’’ என்று சொல்லி, துண்டு ஏந்தினால், அது அவமானம் அல்ல. அதுதான் வெகுமானம். அதுதான் தன்மானம். அதுதான் இனமானம். அந்த இடத்தில், மானம் பாராது, மானத்தைத் தூக்கி வைத்துவிடலாம். ஏனென்றால், நாம் செய்யக்கூடி யது, நமக்காக அல்ல, சுயநலத்துக்காக அல்ல, பொது நலத்துக்காக, பொதுத் தொண்டுக்காக.

அதே மாதிரி பொது வாழ்க்கையில், பொதுத்தொண்டு செய்கிறவர்கள், ஒரு முடிவு செய்யும் போது, இன்றை யிலிருந்து செய்யலாமா? நாளைக்குப் செய்யலாமா? அல்லது கொஞ்ச நாள்கள் கழித்துச் செய்யலாமா? என்றெல்லாம் யோசிப்பார்கள். ஆனால், அதற்கு இடமே இல்லாமல், பொதுத்தொண்டு செய்யக்கூடியவர்கள் எப்படிப்பட்ட தொண்டு செய்ய வேண்டும் என்று சொன்னால், அவர்களுக்கு நேரம், காலம் கிடையாது. பருவம் பார்க்கக் கூடாது. அது கொளுத்தும் வெயிலா? அல்லது கொட்டும் மழையா? அடிக்கும் புயலா? சீறும் சுனாமியா? அதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படாத அளவிற்கு, பருவம் பாராது அவர்கள் தொண்டு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், ‘‘குடி செய்வார்க்கில்லை பருவம்’’ என்றார் திருவள்ளுவர்.

இந்தக் ‘குடிசெய்து’ என்பது, அதுதான் குடிமக்க ளுக்காகச் செய்யக்கூடிய தொண்டு. சமுதாயத்திற்காக இருக்கக்கூடிய தொண்டு என்று அய்யா அவர்கள், அந்த விளக்கத்தைச் சொல்லும் போது, சமுதாயத்திற்கான பணியின் முக்கியத்துவத்தை அந்தக் காலத்தில் வள்ளுவர் அவர்கள் எப்படி வலியுறுத்தி இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பொது வாழ்க்கைக்கு வரக்கூடியவர்கள், ‘தன்னைப் பற்றி இவ்வளவு அவதூறு பேசுகிறார்களே!’’ என்று கவலைப்படக்கூடாது. மானத்தை விட்டுவிட்டுத் தான் இருக்க வேண்டும். அய்யா அவர்களைப் பற்றி அவ்வளவு விமர்சனம் எழுந்தது! அதே மாதிரி பொதுத் தொண்டுக்கு வரக்கூடியவர்களைப் பற்றி விமர்சனம் செய்வார்கள். அந்த விமர்சனத்தை அவர்கள் தாங்க வேண்டும். அதைப் பற்றி கவலையே படக்கூடாது.

அந்தத் தத்துவத்தையும் அறிவுப்பூர்வமாக சொல்லிக் கொடுக்கிறார். எல்லாவற்றையும் விட. இன்றைக்கு சமுதாயத்திலே வாழக்கூடியது ‘‘எல்லாருக்கும் எல்லாம்’’ என்பதுதான்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *