கூட்டணிக் கட்சிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை தேர்தல் பரப்புரை, தேர்தல் வியூகம் குறித்து முக்கிய முடிவு!

4 Min Read

சென்னை, மார்ச் 31- திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணிக்   கட்சி தலைவர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று  மாலை (30.3.2026) ஆலோசனை நடத்தினார். தேர்தல் பரப்புரை, தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு அவர் தேநீர் விருந்து அளித்தார். இந்த கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்றார்.

ஆலோசனை

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 23ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று (30.3.2026) தொடங்கியது. தேர்தலை சந்திக்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக மெகா கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொமதேக, எஸ்டிபிஅய், மஜக, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 70 தொகுதிகளை வழங்கி யுள்ளது. மீதியுள்ள 164 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. அதே நேரத்தில் மதிமுக 3, மமக 2, கொமதேக 2, எஸ்டிபிஅய், மஜக, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 11 இடங்களில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடு கின்றன. இதன் மூலம் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் களம் காண்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.3.2026) மாலை 5 மணிக்கு முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். கலைஞரின் ஊரான திருவாரூரில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து 2ஆம் தேதி வரை அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

இந்நிலையில், திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், விசிக தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், மதிமுக தலைவர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக பொதுசெயலாளர் ஈஸ்வரன், எஸ்டிபிஅய் கட்சி தலைவர் நெல்லை முபாரக், மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், தமிழர் தேசம் கட்சி தலைவர் கே.கே.செல்வகுமார் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது தேர்தல் பரப்புரை, தேர்தல் வியூகம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

வெற்றிக் கூட்டணி

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சட்டமன்ற தேர்தலில் மாபெரும் கூட்டணியை அமைத்துள்ளோம். இந்தக் கூட்டணி புதிதாக அமைக்கப்பட்டதல்ல, 2 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி அமைப்பு தேர்தல், இடைத்தேர்தல்களை சந்தித்துள்ளோம். இதுவரையில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் இல்லாத வகையில் இத்தனை ஆண்டு காலம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது, பாராட்டுக்குரியது. இந்த கூட்டணி சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்கிறது. இன்னும் சில கட்சிகள் சேர்ந்திருக்கிறார்கள். எனவே கூட்டணி வெற்றிகரமாக அமைந்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பேசும்போது:– ‘நாம் மகிழ்ச்சி அடையக் கூடிய வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் கோட்டையில் அமர்வார்’ என்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை பேசுகையில், ‘முதலமைச்சர் செய்த பணிகள், திட்டங்கள் தான் நம் பிரச்சாரமாக இருக்கப்போகிறது. நாம் கடந்த 5 ஆண்டுகளில் செய்த பணிகள் ஒவ்வொரு ஊரிலும் மார்தட்டிப் பேசும் நிலையில் இருக்கிறது. நமது வாக்குறுதிகள் கிராமங்களில் பேசப்பட்டு வருகிறது. 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற முடியும்’’ என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாளவன் பேசுகையில், ‘முதல மைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதுர்யமான காய் நகர்த்துதல், அரசியல் யுக்திகளால் இன்றைக்கு இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் மெகா கூட்டணி உரு வாகி இருக்கிறது. உங்கள் தலைமை மீது மிகப் பெரிய நம்பிக்கை வளர்ந்திருக்கிறது என்றார்.

200 தொகுதிகளில் வெற்றி பெறும்

மநீம தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், ‘மே மாதம் ஒரு விழா நடைபெறும், அந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் ‘முதலமைச்சரே’ என்று அழைக்க போகும் எதிர்பார்ப்புடன்தான் இந்த கூட்டத்துக்கு வந்திருக்கிறேன். நம்முடைய கூட்டணியின் வெற்றிக்கு முழு உழைப்பை கொடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கு அன்பு கட்டளையாகவும், சிலருக்கு ஆணையாகவும் பிறப்பித்துள்ளேன். இந்தியாவில் இன்றைக்கும் நடக்கும் அரசியல் சூழ்நிலையில் நாமெல்லாம் செயின்ட் ஜார்ஜ் கோட்டைதான் அடையாளத்தின் அதிகாரம் என்று நினைத்து கொண்டிருந்தோம். ஆனால் தமிழ்நாடே அதுவாக மாறிவிட்டது’ என்றார்.

தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பேசுகையில், ‘அதிமுக கூட்டணி மீது தமிழ்நாடு மக்களுக்கு நம்பிக்கை இல்லை. மக்களுக்கு நம்பிக்கை உள்ள ஒரே கட்சி திமுக மட்டும் தான், மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அவர் சொன்ன மாதிரியே எங்களுக்கு ஒரு எம்.பி. சீட்டும், 10 தொகுதியையும் கொடுத்தார். 2021ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொன்ன போது அவருடைய குடும்பமே அழுதார்கள். அப்போது நானும், எனது சகோதரியும் (பிரேமலதா) அழுதோம். நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நம்முடைய கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பதவியேற்பார்’ என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *