களப்பணியில் இருக்கும் மகளிர் எதிர்கொள்ளும் மாதவிடாய்ப் பிரச்சினைகள்… தீர்வு எப்போது?

4 Min Read

ஆராய்ச்சியாளரான தனது தங்கை மாதவிடாய்க் காலத்தின்போது எதிர்கொண்ட பிரச்சினை பற்றி விரிவாக எழுதுகிறார் சைரித்ரா கணேஷ். “உத்தரகாண்ட்டில் களப்பணியில் இருக்கும்போது அவளுக்கு நாப்கின் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சுற்றிலும் எங்குமே எந்த வசதியும் இல்லை. பிறகு ஆய்வுக்குழுத் தலைவர் அவளை ஒரு ஜீப்பில் ஏற்றிவிட்டு, அருகில் இருக்கும் கிராமத்துக்கு அனுப்பிவைத்தார். அவர் புரிந்துகொள்பவராக இருப்பதால் இது சாத்தியமானது. எல்லாருக்கும் இது நடக்குமா?” என்று கேட்கிறார். தேவையான இடங்களில் பொருத்தி உடைமாற்றிக்கொள்ள வசதி செய்யும் ’மாதவிடாய்க் கூடாரங்களை’க் களப்பணி உபகரணங்களோடு ஆய்வுக் குழுவினர் தர வேண்டுமென அவர் பரிந்துரைக்கிறார். களப்பணியின் முதலுதவிப் பெட்டிகளில் நாப்கின் போன்றவை வேண்டும் என்றும், மாதவிடாய்க் காலங்களில் பெண்களின் கள ஆய்வு இருந்தால் சுற்றியிருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் சொல்கிறார். ஸ்பெயினில் 429 ஸ்டெம் துறையினரிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 75 சதவீத பேர், தங்களது களப்பணியின்போது மாதவிடாய்க்கால உதவி கிடைப்பது சிரமமாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளைப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. “கழிப்பறை வசதிகள் இல்லாததால் ஒரு நாள் முழுக்க ஒரே பேடுடன் வேலை செய்ய வேண்டும் என்று யாருமே என்னிடம் சொல்லவில்லை” என்று எழுதுகிறார் சந்திரயீ கோஸ்வாமி.

இதில் இன்னொரு மிகப்பெரிய சிக்கலும் இருக்கிறது. ஏற்கெனவே கண்ணாடிக் கூரைகளை எதிர்கொள்ளும் ஸ்டெம் பெண்கள், வெளிப்படையாக மாதவிடாய்க்காலப் பிரச்சினைகளைப் பேச முடியாது. குறிப்பாகக் களப்பணியின்போது இது கடினமாக இருக்கிறது என்பதைச் சொல்லவே முடியாது. இந்தியாவில் பெண் ஆராய்ச்சியாளர்களைக் களப்பணிக்கு அனுப்பும் அமைப்புகளே மிகவும் குறைவு. போய்த்தான் ஆக வேண்டுமா? என்பார்கள். பெண் ஆராய்ச்சியாளரை வெளியில் அனுப்பிவிட்டு ஏதாவது பிரச்சினை வந்தால் பழி தங்கள்மீது வரும் என்று தயங்குவார்கள். ஓர் ஆண் ஆராய்ச்சியாளரைத் துணைக்கு அனுப்புவார்கள், அவர் உடனே களப்பணிக்கு வரமாட்டார். அவரது நேரச் சூழலைப் பொறுத்து களப்பணி மாற்றி வைக்கப்படும். எல்லாத் தடைகளையும் தாண்டித்தான் களப்பணிக்கான ஒப்புதலைப் பெற முடியும்.

“ஒரு பொண்ணா இருந்திட்டு எதுக்கு வெளியில் போய் கஷ்டப்படணும்? ஆய்வக வேலை மட்டுமே பாத்துக்கலாமே” என்று என்னிடமே பலர் சொல்லி யிருக்கிறார்கள். களப்பணிக்கான அனுமதியும் சுதந்திரமும் கிடைப்பதே கடினம். நிலைமை இப்படி இருக்க, “மாதவிடா….” என்று நாம் சொல்லி முடிப்பதற்குள், “நான் அப்பவே சொன்னேன்ல பொண்ணுங்களுக்கு இது சரிவராதுன்னு” என்று சொல்லி ஆய்வகத்துக்குள்ளேயே இருக்க வைத்துவிடுவார்கள். சக ஆண் ஆராய்ச்சியாளர்கள் புரிந்துகொள்பவர்களாக இருந்தால் பரவாயில்லை, இல்லாவிட்டால் அவர்களும் இதை வைத்தே “களப்பணி இவர்களுக்கு ஒத்துவராது” என்று முடிவெடுத்துவிடுவார்கள்.

ஆகவே எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் குரல் எழுப்பாமல் அதைச் சமாளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதாகத்தான் நிலை இருந்தது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பெண் ஆராய்ச்சியாளர்கள் தங்களது உரிமைகளைக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

குருதிப்போக்குக்கே இவ்வளவுதான் கவனம் தரப்படுகிறது எனும்போது அந்தக் காலக்கட்டத்தில் ஏற்படும் வலி, மன உளைச்சல், குழப்பம் ஆகியவையோ, பி.சி.ஓ.டி., எண்டோமெட்ரியோசிஸ் போன்ற நோய்களால் ஏற்படும் தீவிர மாதவிடாய்ப் பிரச்சினையோ பேசப்படுவதற்கு இன்னும் பல காலம் ஆகும். மாதவிடாய்க் கால வலியுடன் களப்பணியில் முக்கிய முடிவுகள் எடுப்பது சிரமமாக இருந்ததாகவும், இது கல்லூரிக் காலத்திலேயே சொல்லித் தரப்பட்டிருந்தால் மனதளவில் தயாராக இருந்திருக்க முடியும் என்றும் அழுத்தமாகச் சொல்கிறார் ஆராய்ச்சியாளர் சந்திரயீ கோஸ்வாமி.

மாதவிடாய் விடுப்பு இன்னொரு மிகப்பெரிய விவாதப்புள்ளி. இதை எப்படி அணுக வேண்டும் என்று நாம் ஒரு சரியான கட்டத்துக்கு இன்னும் வந்து சேரவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. மாதவிடாய்க்கு விடுப்பு எடுக்கும் வசதி கண்டிப்பாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அது மகப்பேறு விடுப்பைப் போல இயல்பானதாக மாற என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் விவாதிக்க வேண்டும், சரியான கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். மாதவிடாய் தனக்கு ஒவ்வொரு மாதமும் பெரிய பிரச்சினையாக இருக்கிறதா இல்லையா, விடுப்போ ஓய்வோ உதவியோ தேவையா இல்லையா என்று சம்பந்தப்பட்டவர் முடிவெடுக்க வேண்டும். ஆனால், அதற்கான உரிமை முதலில் வழங்கப்படுகிறதா, இல்லையா என்கிற கேள்வி எழுகிறது.

அதற்கு முன்னால் மாதவிடாய்க்காலப் பெண்களின் தேவைக்கான அடிப்படை வசதிகள் இருப்பதை ஸ்டெம் துறை உறுதிசெய்ய வேண்டும். இது மட்டுமல்லாமல் திருநர் ஆண்களின் மாதவிடாய்த் தேவைகளையும் பேச வேண்டும். ஸ்டெம் துறைகளில் பால்புதுமையினரின் பங்களிப்பை ஊக்குவிக்க இவற்றையும் நாம் செய்ய வேண்டும். மாதவிடாய் பற்றிய விவாதங்களில், ’பெண்கள்’ என்று மட்டும் குறிப்பிடுவதற்குப் பதிலாக, அனைவரையும் உள்ளடக்கிய விதமாக, ’மாதவிடாயை எதிர்கொள்பவர்கள்’ (Menstruators) என்று குறிப்பிடும் இடத்துக்கு நாம் நகர வேண்டும்.

மாதவிடாய் பற்றி, குறிப்பாக மாதவிடாய் தொடர்பான நோய்கள் பற்றி இன்னும் நமக்கு நிறைய விஷயங்கள் தெரியாது, பெண் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பது ஒரு முக்கியக் காரணம்.

படைப்பாளர்: நாராயணி சுப்ரமணியன்

( herstories.xyz இணைய தளத்திலிருந்து…)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *