சென்னை, மார்ச் 30- ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள ‘மாற்றுப் பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா’, தனிநபர் உரிமைகளைப் பறிப்பதாகவும், சமூக ஒடுக்குமுறைக்கு வழிவகுப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள இந்த புதிய சட்டத்திருத்தம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15, 16, 19(1)அ மற்றும் 21 ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறுகிறது. மேலும், ‘தேசிய சட்ட சேவைகள் ஆணையம் எதிர் இந்திய ஒன்றியம்’ மற்றும் ‘நீதிபதி கே.எஸ்.புட்டசாமி எதிர் இந்திய ஒன்றியம்’ ஆகிய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளுக்கு இது எதிராக உள்ளது.
இந்த மசோதா, மாற்றுப் பாலினத்தவர்களை சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்துவதுடன், அவர்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் களத்திற்குத் தள்ளுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது. பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் சித்தாந்தத்தின் உண்மையான முகம் இந்த மசோதாவின் மூலம் வெளிப்படுவதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பன்னாட்டு மனித உரிமை கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணாக உள்ள இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காமல், அதனை ஒன்றிய அரசுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
எதிர்மறை நோக்கங்களைக் கொண்ட இந்த சட்டத்திருத்த மசோதா குறித்து:திருநங்கைகள் மற்றும் அவர்களது அமைப்புகளின் பிரதிநிதிகள் தொழிற்சங்க பிரதிநிதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் விரிவாக விவாதிக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யவும், மாற்றுப் பாலினத்தவர்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்த மசோதாவில் உரிய திருத்தங்களைச் சேர்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
