சென்னை, மார்ச் 30- 2021 சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான, கனிம வளங்களுக்கெனத் தனி அமைச்சகத்தை உருவாக்கும் திட்டத்தைச் செம்மையாகச் செயல்படுத்தி, கனிம வள மேலாண்மையில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.
நிர்வாகப் புரட்சி மற்றும் தொழில்நுட்பப் பாய்ச்சல்
திமுக அரசு பொறுப்பேற்றவுடன், அதுவரை தொழில்துறையின் ஒரு பிரிவாகச் செயல்பட்டு வந்த கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறையைத் தனியாகப் பிரித்து, ‘இயற்கை வளங்கள் துறை’ என்ற புதிய அமைச்சகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கினார். இந்த நிர்வாக மாற்றத்தின் மூலம் பல முக்கியச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தனி நிர்வாகக் கட்டமைப்பு: இத்துறைக்கெனத் தனிச் செயலாளர் மற்றும் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளதால், கோப்புகள் தேக்கமின்றி விரைவாகப் பரிசீலிக்கப்படுகின்றன.
ட்ரோன் கண்காணிப்பு: சட்ட விரோத கனிமக் கடத்தலைத் தடுக்கவும், குவாரிகளின் செயல் பாடுகளைத் துல்லியமாகக் கண் காணிக்கவும் அதிநவீன ட்ரோன் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
எம்அய்எம்ஏஎஸ் இணையதளம்: கனிம வளங்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்க கனிமவள நிர்வாகம் எனும் டிஜிட்டல் முறை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது, இது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்துள்ளது.
சுரங்கப் பணிகளால் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பகுதிகளின் மேம்பாட்டிற்காக இந்த அமைச்சகம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது: “சுரங்கப் பகுதிகளில் குடிநீர், சாலை வசதி மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த இதுவரை ரூ.1,000 கோடிக்கும் அதிகமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.” மேலும், கைவிடப்பட்ட குவாரிகளைப் பாதுகாப்பான இடங்களாக மாற்றவும், சுற்றுச்சூழலை மீட்டெடுக்கவும் தனிச் சிறப்பாக ‘பசுமை நிதி’ உருவாக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சவால்களை எதிர்கொள்ள ‘நிலையான சுரங்கக் கொள்கை’ நிர்வாக ரீதியாகப் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், ஆற்று மணல் கடத்தல் மற்றும் சட்டவிரோத குவாரிகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவது இன்னும் பெரும் சவாலாகவே நீடிக்கிறது. இச்சவால்களை முறியடிக்கவும், முறைகேடுகளை முற்றுப்புள்ளியாகக் குறைக்கவும், தமிழ்நாடு அரசு தற்போது ஒரு விரிவான ‘நிலையான சுரங்கக் கொள்கையை’ உருவாக்கி வருகிறது.
இந்தக் கொள்கை அமலுக்கு வரும்போது, இயற்கை வளங்கள் பாதுகாப்பு மற்றும் வருவாய் ஈட்டுவதில் தமிழ்நாடு புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
