சென்னை, மார்ச் 29 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.22 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
முகப்பேர், கோல்டன் காலனி, 3-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பெருமளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், தேர்தல் பறக்கும் படையினர் அந்த வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையின் போது, கணக்கில் வராத 1 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கண்டறியப்பட்டது. அந்தப் பணத்திற்குரிய முறையான ஆவணங்கள் வீட்டின் உரிமையாளரிடம் இல்லாததால், அதிகாரிகள் மொத்தத் தொகையையும் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு, அம்பத்தூர் பகுதியில் ஒரே இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக இந்தப் பணம் வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
