தவறான குற்றச்சாட்டுக்கு அய்யா தந்த அரிய விளக்கம்!

4 Min Read

நான் காங்கிரசில் இருந்தபொழுது தோழர் அழகிரிசாமி என்னோடு பணிபுரிந்துவந்தார். நான் அரசியல் பணியிலிருந்து விலகி சமுதாயப்பணி புரியத் துவங்கிய 1924ஆம் ஆண்டிலிருந்து அவரை எனக்கு நன்கு தெரியும். அது முதல் 1948 வரையில் ஒரே நிலையில் பணியாற்றி வந்தார். அவரைப் போல் தளராத உறுதியுடன் தொடர்ந்து தொண்டாற்றியவர்கள் யாராவது உண்டா என்றால் கண்டுபிடிப்பது சிரமம் என்று துணிந்து கூறுவேன். 1949 ஆம் ஆண்டில் முடிவெய்துகிற வரையில் ஒரே கொள்கையுடனும், அன்புடனும், உறுதியுடனும் நமது இயக்கத்துக்காகத் தொண்டாற்றினார். அவர் கொள்கை மாறியதோ, என்னுடன் கருத்து வேறுபாடு கொண்டதோ கிடையாது.

தோழர் அழகிரி நல்ல பேச்சாளி. மக்களின் – சிறப்பாக இளைஞரின் அபிமானம் பெற்றவர். அவர் நல்ல செலவாளி. தனக்கென்று ஒரு காசும் சேர்த்துக் கொண்டவரல்லர். என்னைப் பற்றி புகழ்ந்து பேசுவதை தமது பெரும் பணியாகக் கொண்டிருந்தார். அவரைப் பல தடவைகள் கண்டித்துக் கோபித்துக் கொண்டிருக்கிறேன். அவர் முன்கோபி, ஆனால் என்னிடத்தில் எந்நிலையிலும் கருத்து வேறுபாடு கொண்டது கிடையாது. அவருக்கு அடிக்கடி பணக்கஷ்டங்கள் வருவது சகஜம். ஆனால் அதில் தனக்கு எவ்வித தொல்லைகள் ஏற்பட்ட போதிலும் தன் கருத்தையோ, கொள்கையையோ, லட்சியத்தையோ, தொண்டையோ கொஞ்சம்கூட மாற்றிக் கொண்டது கிடையாது. பிடிவாதமான கட்சிப் பற்றுடன் நடந்து கொண்டார். அவரை விலைக்கு வாங்கிவிடலாம் என்று எண்ணிய எதிரிகளை ஏமாற்றியிருப்பாரே யொழிய அவர்களின் வலையில் ஒரு நாளும் சிக்கியவரல்லர்.

நேற்றுவரை நான் கூறிவந்த ஒரு கருத்துக்கு மாறுபாடான கருத்தை எங்கோ ஓர் இடத்தில் நான் கூறினால், அதற்காக என்னிடம் எவ்வித விளக்கமோ சமாதானமோ எதிர்பார்க்காமல் அக்கருத்தைப் பின்பற்றியே தமது பிரசாரத்தை ஆரம்பித்துவிடுவார். என் வாழ்வில் பல தடவை ஒரு சில தோழர்கள் துரோக சூழ்ச்சி வேலைகளில்  இறங்க வேலை செய்த நிகழ்ச்சிகள் பல உண்டு. என்மீது அதிருப்தி கொண்ட அந்தத் தோழர்கள் பல தடவைகள் என்னைக் குறைகூறி ரகசியமாக கூட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். அப்பேர்பட்ட கூட்டங்களைப் பற்றி தோழர் அழகிரி கேலியாகவும், கிண்டலாகவும்  பேசுவார். அவர்களெல்லாம் அழகிரியை ஒதுக்கித் தள்ளிவிட்டே தங்கள் காரியங்களைச் செய்துகொள்வார்கள்.  அழகிரிசாமி என்னிடமும், அதுபோலவே கழகத்திடமும் நீங்காத பற்றுக் கொண்டிருந்தார்.

போர்க் காலத்தில் ஜில்லா பிரசார அதிகாரியாக பதவி ஏற்றுக் கொள்வதற்கு முன் என்னிடம் அனுமதி பெற்றுக் கொண்ட பிறகே அப்பதவியை ஏற்றுக்கொண்டார். சுயமரியாதைப் பிரசாரம் செய்யக்கூடாதென்று நிபந்தனை போடப்பட்டபோதிலும், எங்கு சென்றாலும் சுயமரியாதைப் பிரசாரம் செய்து வந்தார். நமது கருத்துகளைப் பரப்ப அவர் ஒரு நாளும் தவறியதில்லை. அவர் வாழ்ந்தபோது ஏராளமான பணம் தமது கைக்கு வந்த போதிலும் தமது குடும்பத்திற்காக எதையும் சேமித்து வைக்கவில்லை. அவர் காயலாக இருக்கும்போதே கழகப் பணம் சுமார் 1000 ரூபாய் வரையில் அவருக்கு உதவி கிடைத்திருப்பதோடு கழகத் தோழர்கள் பலர் நன்றாக உதவி இருக்கிறார்கள்.

தோழர் இராதா அவர்கள் நாடகம் மூலம் 1000 ரூபாய் உதவி இருக்கிறார். மற்றும் அவர் மறைந்த பிறகு பல தோழர்கள் அவர்குடும்பத்திற்கு உதவி இருப்பதுடன் வள்ளல் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய இயற்கை சுபாவப்படி வெகு தாராளமாக உதவி இருக்கிறார். அதில் அவர் அழகிரிக்கு என்றே நடத்திய நடிப்பின் மூலம், 2, 3 ஆயிரம் ரூபாயும் அவர் சொந்தத்தில் சுமார் 2, 3 ஆயிரம் ரூபாயும் ஆக 6000 ரூபாய் வரை உதவி இருக்கிறார். அழகிரி சாமிக்கு உதவினார் என்றால் யாருக்கு ஆக உதவினார்? எனக்காகவா அல்லது மற்றும் யாருக்காகவா? நமது இயக்கத்துக்காக, இயக்கப்பற்றுக்காக அழகிரி உழைத்தார் என்பதற்காகவே அவர் உதவி இருக்கிறார். இப்படியாக இன்னும் பலரும் தனிமுறையில் 100, 200 என்பதாக உதவி இருக்கிறார்கள்.

எனவே அழகிரிசாமிக்கு இயக்கம் எவ்வித உதவியும் செய்யவில்லை என்ற பிரசாரம் ஏதாவது இருக்குமானால் அது அயோக்கியப் பிரசாரமும், இழிவு நடப்புப் பிரசாரமும் ஆகும்.

அழகிரி இருக்கும்போதே இப்படிப்பட்ட இழிவுகள் அவருக்குப் பிடிக்காது. அதை மறைத்துக் கொள்ள சிலர் அவரிடத்தில் அன்பு காட்டுவது போல், கவலை காட்டுவதுபோல் நடக்கலாம். ஆனால் உலக மக்கள் யாவருமே மடையர்கள் என்று எண்ணிவிடுவது மடையர்கள் தன்மையேயாகும்.

அவரைப் பற்றி ஏன் இவ்வளவு தூரம் சொல்லி அவர் படத்தை திறக்கிறேன் என்றால் அவரைப்போல் மற்ற மக்களும் நிலையான, உறுதியான கொள்கை உடைய மக்களாய் இருக்கவேண்டும் என்பதற்காகவே கூறுகிறேன். இயக்கத் தொண்டர்கள் பொதுமக்களின் புகழுக்குப் பாத்திரமாக வேண்டுமானால் அழகிரி மாதிரி ஆகவேண்டும். அவரைப் போல் தொண்டு ஆற்ற வேண்டும். அதை அறிவுறுத்தவே இம் மாநாட்டில் அவரது படம் திறந்து வைக்கப்படுகிறது.

அழகிரி சுமார் 5, 6 ஆண்டாகவே உடல்நலம் இல்லாமல் வயிற்றுவலி, டி.பி. நோய் உள்ளவராக இருந்தார். அவருக்குப் பலவகை வயித்தியம் செய்யப்பட்டது. அவர் திடீரென்று இறக்கவில்லை.

எனவே பொதுத் தொண்டாற்றுகிறவன் புகழுக்கு உரியவனாகியே தீருவான். அவர்களுக்குப் பணம், காசு கிடைக்காவிட்டாலும் புகழ் கிடைக்கும். சமுதாயத்துக்குத் தந்திரப் புத்தி இல்லாமல் உண்மையாய் பாடுபடுகிறவன்தான் உண்மையான இயற்கைப் புகழ் அடைகிறான். அந்தப் புகழ்தான் அவனுக்குக் கிடைக்கும் சம்பாத்தியமாகும். மனிதன் இயற்கைப் புகழ் பெற வேண்டும் என்று தான் வள்ளுவர் கூறியிருக்கிறார். செயற்கைப் புகழ் சிரிப்புக்கு இடமான கேலிப்புகழாகும். மற்ற மக்களும் பொதுத் தொண்டாற்ற வேண்டும். உண்மையான சமுதாயப் பணி புரியவேண்டும் என்பதை அறிவுறுத்த இப்படிப்பட்டவர்களின் வரலாறு ஓர் எடுத்துக்காட்டு. ஒவ்வொருவர் செய்த நல்ல காரியங்களை எடுத்துக்கூறி அவர்களைப் பின்பற்றும்படி செய்வதற்காக இம்மாதிரி படத்திறப்புகள் நடத்தப்படுகின்றன. அவர்கள் செய்த காரியங்களை நாம் மதித்துப் புகழ்கிறோம் என்பதைக் காட்டிக் கொள்வதே படங்களைத் திறந்து வைப்பதன் கருத்தாகும். ஆகவே நம் இயக்கத்திற்கு நற்பணி புரிந்த தோழர் அழகிரிசாமியின் படத்தை நான் மகிழ்ச்சியுடன் திறந்து வைக்கிறேன்.

(18/19-3-1950-இல் நடைபெற்ற சென்னை மாவட்ட திராவிடர் கழக
15-ஆவது மாநாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து)

-‘விடுதலை’ 21-3-1950

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *