சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க மனு
சென்னை, மார்ச் 27 கடந்த 2024 மக்களவைத் தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில், பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கேசவ விநாயகம் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் உள்ளிட்டோர் மீது சி.பி.சி.அய்.டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தி ருந்தனர். குற்றம் சாட்டப்பட்டோர் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் என்பதால் இ.டி நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகக் கூறப்பட்டுள்ளது.
ரூ.4 கோடி
2024 மக்களவைத் தேர்தலின்போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் திருநெல்வேலி அதிவிரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ததில், ரூ.4 கோடி பணத்தைக் கைப்பற்றினர்.
இந்தத் தொகை, பா.ஜ.க-வின் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்பட்ட தொகை என புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை சி.பி.சி.அய்.டி காவல்துறையினர் விசாரித்தனர்.
ரூ.4 கோடியுடன் பிடிபட்ட சதீஷ், அவரது சகோதரர் நவீன், சிறீவைகுண்டம் ஓட்டுநர் பெருமாள், மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் அவரிடம் பணியாற்றும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு தாக்கீது அனுப்பி, எழும்பூர் சி.பி.சி.அய்.டி அலுவலகம் வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது.
இதேபோல், பணம் கை மாறியதாக கூறப்படும் தமிழ்நாடு பா.ஜ.க வர்த்தகப் பிரிவு தலைவர் கோவர்தனுக்கு சொந்தமான சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள உணவகம், நீலாங்கரை பகுதியில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
கோவையில் வசிக்கும் தமிழ்நாடு பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் சி.பி.சி.அய்.டி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் மீது சி.பி.சி.அய்.டி வழக்குப்பதிவு செய்தது.
நயினார் நாகேந்திரனை விசாரணை செய்க!
இந்நிலையில், ரூ.4 கோடி பணம் பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை இ.டி விசாரிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் தி.மு.க முறையீடு செய்துள்ளது.
நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் மீது சி.பி.சி.அய்.டி வழக்குப்பதிவு செய்துள்ளது.
நயினார், கேசவ விநாயகம் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரி வித்துள்ளார்.
அதனால், ரூ.4 கோடி பணம் பிடிபட்ட விவகா ரத்தில் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
