சொன்னதைச் செய்த ‘திராவிட மாடல்’ அரசு மகளிர் சுய உதவி குழுக் கடன் தள்ளுபடி நிதி முழுவதையும் கூட்டுறவு வங்கிகளுக்கு விடுவிப்பு!

3 Min Read

சென்னை, மார்ச் 26 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்குவதால், பெண்கள் சொந்த தொழில், வருமானம் உருவாக்கலாம்… இது அவர்களுக்கு நிதி சுதந்திரத்தை தருகிறது… சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அவர்கள் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கிறது… இப்படிப்பட்ட சூழலில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. அது என்ன தெரியுமா?

தமிழ்நாட்டில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தூணாக இருப்பவை மகளிர் சுய உதவிக்குழுக்கள்… இக்குழுக்கள் மூலம் பெறப்படும் கடன்கள் பெண்களைச் சொந்தத் தொழில் தொடங்கவும், குடும்ப வருமானத்தைப் பெருக்கவும் ஊக்கப்படுத்துகின்றன.

இருந்தாலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாகப் பல குழுக்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனது. இது பெண்களிடையே பெரும் மன உளைச்சலையும், வாழ்வாதாரப் போராட்டத்தையும் உருவாக்கியிருந்தது.

தேர்தல் வாக்குறுதியும் வரலாற்றுத் தள்ளுபடியும்

பெண்களின் இந்த இக்கட்டான நிலையை உணர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் திமுக ஒரு முக்கிய வாக்குறுதியை அளித்தது. “கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்படும்” என்பதே அந்த அறிவிப்பு.

ஆட்சிப் பொறுப்பேற்றதும் சொன்னபடியே, 2021 மார்ச் 31 நிலவரப்படி நிலுவையில் இருந்த 1.01 லட்சம் மகளிர் குழுக்களைச் சேர்ந்த 10.56 லட்சம் பெண்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ய அரசு உத்தரவிட்டது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.2,674 கோடியாகும் (அசல் மற்றும் வட்டி சேர்த்து).

இந்த அதிரடி நடவடிக்கையால், பல ஆண்டுகளாகக் கடன் சுமையில் தவித்த லட்சக்கணக்கான பெண்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அவர்களின் கடன் பொறுப்புகள் நீக்கப்பட்டதால், மீண்டும் புதிய நம்பிக்கையுடன் சிறு தொழில்கள் மற்றும் வணிக முயற்சிகளில் ஈடுபடும் சூழல் உருவானது.

நிதி விடுவிப்பும் தற்போதைய நிலையும்

அரசு அறிவித்த இந்தத் தள்ளுபடித் தொகையை வங்கிகளுக்கு ஈடுகட்ட, 2021-2022ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ரூ.600 கோடி வீதம் நிதி ஒதுக்கப்பட்டது. இருப்பினும், தள்ளுபடி செய்யப்பட்ட அசல் தொகை போக, அதற்கான வட்டித் தொகையை விடுவிப்பதில் சில நடைமுறைத் தாமதங்கள் இருந்தன. கூட்டுறவுத் துறை சார்பாக, தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களுக்கான வட்டித் தொகையை வழங்குமாறு அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதனை ஏற்று, தற்போது 2025 ஏப்ரல் 30 வரைக்குமான 7 சதவீத வட்டித் தொகை ரூ.193 கோடியே 68 லட்சத்தை அரசு அதிரடியாக விடுவித்துள்ளது. இதனுடன் அசல் தொகையான ரூ.2,118 கோடியே 85 லட்சத்தையும் சேர்த்து அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் கூட்டுறவு வங்கிகளின் நிதிநிலை பலப்படுத்தப்பட்டுள்ளது.

விடியலை நோக்கி மகளிர் குழுக்கள்

இந்த நிதி விடுவிப்பு குறித்து வங்கி அதிகாரிகள் சொல்லும்போது, “அரசிடமிருந்து வர வேண்டிய வட்டி மற்றும் அசல் தொகை முழுமையாகக் கிடைத்துள்ளதால், இனி மகளிர் குழுக்கள், விவசாயிகள் மற்றும் சிறு தொழில் முனைவோருக்கு எவ்விதத் தடையுமின்றி புதிய கடன்களை வழங்க முடியும்” எனத் தெரிவித்துள்ளனர். இது பெண்களின் நிதிச் சுதந்திரத்தை உறுதி செய்வதோடு, சமூக மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும்.

அதேசமயம், மகளிர் குழுக்களுக்கான இந்த நற்செய்தியைப் போலவே, தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்ட 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அடுத்தகட்ட அறிவிப்புகளையும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தற்போதைய இந்த வட்டி மானிய விடுவிப்பு, கூட்டுறவுத் துறையில் அடுத்தடுத்த நல்ல செய்திகள் வருவதற்கான ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *