‘தி.மு.க. தலைவரின் அசாதாரண சாதனை!’
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் 26 கட்சிகள் உள்ளன. இத்தனைக் கட்சிகளையும், சிறிதும் சேதாரம் இல்லாமல் கட்டுக் கோப்பாக இணைத்து ஒன்றுபடுத்தியிருக்கும் அரும்பெரும் சாதனையை நிகழ்த்திய தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை எவ்வளவுப் பாராட்டினாலும் அது முழுமையாகாது.
இந்தியத் துணைக் கண்டத்திலேயே இத்தனை அரசியல் கட்சிகளைக் கொண்ட கூட்டணி என்பது தி.மு.க. தலைமையிலானதாகத் தானிருக்க முடியும்.
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களுக்கு ‘இத்தனை இத்தனை இடங்கள் தேவை’ என்று, கூட்டணிக்குத் தலைமையேற்கும் கட்சியின் தலைமையைக் கேட்பது இன்னும் சொல்லப் போனால் வலியுறுத்துவது இயற்கைதான் – அதைக் குற்றம் கூறவும் முடியாது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டு மண்ணுக்கென்றே ஒரு வாசனை உண்டு. அதுதான் கூட்டணியில்லாத ஒரே கட்சி ஆட்சி.
அந்த அடிப்படையில் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் தி.மு.க. போதுமான எண்ணிக்கையில் – தனிப் பெரும்பான்மை கிடைக்கும் வகையில் இடங்களில் நிற்க வேண்டியது கட்டாயமாகிறது.
இத்தகு சூழலில் கூட்டணியில் அங்கம் வசிக்கும் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்குவது என்பது மிகப் பெரிய சவாலான பிரச்சினையாகும். அவர்கள் விரும்பும் எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க முடியாது – அவர்கள் போட்டியிட விரும்பும் இடங்களையும் அப்படியே கொடுத்து விடுவதும் முடியாத ஒன்றே!
ஒரே தொகுதியை கூட்டணியில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளும் கேட்கும் நிலைமையும் உண்டு.
இவ்வளவையும் சமாளித்து, கூட்டணியைக் கொஞ்சம்கூடப் பிசிறு இல்லாமல் தோளின்மேல் கைப்போட்டு அழைத்துச் செல்வது இமாலய சாதனையே!
தி.மு.க. வேட்பாளர்கள் 16,500 பேரை முதலமைச்சர் நேர் காணல் நடத்தினார் என்பதை நினைத்தாலேயே தலை சுற்றுகிறது!
அந்த வகையில், தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி என்பது பலம்வாய்ந்த – அதே நேரத்தில் கொள்கை வழிபட்ட மதச் சார்பற்ற – சமூகநீதியை உயிர் மூச்சாகக் கொண்ட அரும்பெரும் கூட்டணியை நிலை நிறுத்தியது என்பது முதற் கட்டத்திலேயே தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்திட்ட மாபெரும் வெற்றியாகும்.
இந்தக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருமே எடுத்த எடுப்பிலேயே வெற்றி முகத்தோடு, தன்னம்பிக்கையோடு களத்தில் நிற்கும் கம்பீரத்திற்குச்சொந்தக்காரர்களாகி விட்டனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், எந்தக் கால கட்டத்திலும் ஜாதியை முன்னிறுத்தும் ஜாதிக் கட்சிகள் வெற்றி பெற்றதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் ஒரு நூற்றாண்டு காலம் சுயமரியாதை இயக்கம் பட்டபாடு என்பதில் அய்யமில்லை.
‘பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம்’ என்ற நிலையை 1929ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடந்த முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டில் எடுத்த முடிவும், தொடர் செயல்பாடும் நிராகரித்து விட்டது.
இப்பொழுது எவரும் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடுவது கிடையாது. அப்படிப் போடுவதற்கு வெட்கப்படும் நிலையும் ஏற்பட்டு விட்டது.
கூட்டணியில் அங்கம் வசிக்கும் அத்தனைக் கட்சிகளும் ஒரே கொள்கையைக் கொண்டதாக இருக்க முடியாது– என்பது உண்மைதான். அதே நேரத்தில் அடிப்படை இலட்சியத்தில் நேர்மையான முறையில் ஒன்றுபட்டு கைகோத்து நிற்பது என்பது தி.மு.க. கூட்டணியே!
ஆனால் பிஜேபியைக் கூட்டணியில்இணைத்துக் கொண்ட எந்தக் கட்டணியும் அடிப்படைக் கொள்கையிலும், இலட்சியத்திலும் ஒன்றுபட்டதாக இருக்கவே முடியாது.
பிஜேபியோடு கூட்டணி சேர்வது என்பதை ஓர் அருவருப்பாகக் கருதும் மன நிலையைத் தமிழ்நாடு உருவாக்கி வைத்திருக்கிறது.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரான திரு. எடப்பாடி பழனிசாமியே தொடக்கத்தில் பிஜேபியோடு கூட்டணி சேர கடுமையான அளவில் எதிர்ப்பாக இருந்தார் என்று சொல்லும் அளவுக்கு பிஜேபியைக் கடுமையாக விமர்சனம் செய்த வண்ணமாகவே இருந்தார் என்பதை மறுக்க முடியாது.
ஏதோ ஒரு நிர்பந்தத்தின் காரணம் அந்த உறுதிப்பாட்டின் கால்களை உடைத்து விட்டது! அதன் விளைவு, கேலியாகவும் – பரிதாபமாகவும் அ.தி.மு.க. கூட்டணியைப் பார்க்கும் – விமர்சிக்கும் ஒருநிலை ஏற்பட்டது ஒரு கெட்ட வாய்ப்பே ஆகும்! அதனை அ.தி.மு.க. கண்டிப்பாக ஒப்புக் ெகாள்வதைத் தவிர வேறு வழியில்லை.
தமிழ்நாட்டுக்குக் கல்விக்காக ஒதுக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் அந்த நிதியை அளிக்க முடியும் என்று ஒன்றிய அரசு நிர்பந்தித்தபோது, நெஞ்சு உயர்த்தி ‘‘எத்தனை ஆயிரம் கோடி கொட்டிக் கொடுத்தாலும் மும்மொழியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை (NEP) ஏற்க மாட்டோம்’’ என்று அறுதியிட்டு உறுதியுடன் முதுகெலும்போடு கூறினாரே – அந்த இடத்தில்தான் ‘திராவிட மாடல்’ அரசின் நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தனித் தன்மையோடு ஜொலிக்கிறார்.
‘‘எம்மை நத்துவாய் என எதிரிகள் கோடியிட்டழைத்தாலும் தொடேன்!’’ என்ற புரட்சிக் கவிஞரின் திராவிட இயக்க வழி வந்தவராயிற்றே நமது முதலமைச்சர்!
ஒன்றிய பிஜேபி அரசு எல்லா வகையிலும் தமிழ்நாட்டுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தினாலும், அவற்றை எல்லாம் தகர்த்து – ‘இந்தியாவிலேயே நிகரற்ற முதல் மாநிலம்’ என்ற முதற் படிக்கட்டில் (First Place) நின்று வெற்றிக் கோப்பையைப் பெற்று வருகிறாரே – அது என்ன சாதாரணமா?
‘திராவிட மாடல்’ அரசை எதிர்த்து வரும் ஒன்றிய பிஜேபி அரசின் வாயினாலேயே ‘தமிழ்நாடு முக்கியமான துறைகள் அனைத்திலும் முதல் மாநிலம்’ என்று சொல்ல வைத்து, சொல்லி அடித்ததுபோல் – இந்தியாவையே தமிழ்நாட்டை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்து வருகிறது.
ஆட்சித் தலைவர் என்ற முறையிலும், கட்சித் தலைவர் என்ற முறையிலும் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் வெற்றி நாயகராக உலா வருகிறார்.
தமிழ்நாட்டில் அடுத்த முதலமைச்சரும் அவரே என்பது ‘சிலாசாசனம்’ஆகும். தமிழ்நாட்டின் தி.மு.க. கூட்டணியில் மகத்தான வெற்றியின் தாக்கம் அகில இந்திய அரசியலிலேயே மிகப் பெரிய திருப்பத்தைக் கொடுக்கப் போகிறது!
முன் கூட்டியே வாழ்த்துகளும் – பாராட்டுகளும் உரித்தாகட்டும்!
வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்!!
