‘‘தளபதி அழகிரி” என்ற சுயமரியாதை – தொண்டறக் கடல் (4)

திராவிடன்

ஜஸ்டிஸ் கட்சியின் முதல் கூட்டுறவு பெரியார் இராமசாமிக்குக் கிடைத்ததும், ஜஸ்டிஸ் கட்சியின் நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் ‘திராவிடன்’ பத்திரிகையைப் பெரியார் மேற்பார்வையில் நடத்தும்படி விட வேண்டுமென்று, ஓரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குப் பன்னீர் செல்வம் அவர்களே காரணமாக இருந்தார். பன்னீர் செல்வத்திடம், ஒரு தமிழ்த் தினசரி செல்வாக்குள்ளதாக இருக்க வேண்டுமென்று, அடிக்கடி வற்புறுத்தி வந்தவர் அழகிரி சாமியேயாகும். ‘திராவிடன்’ ஆபீஸ் பொறுப்பை மிகக் கஷ்டத்துடன் ஏற்றுக் கொண்டு, ஈரோட்டிலுள்ள ‘குடிஅரசு’ ஆபீசையும் மாற்றிக் கொண்டு, சென்னைக்குக் கொண்டு வந்து, இரண்டு பத்திரிகைகளின் பொறுப்பையும் பெரியாரே ஏற்று நடத்தி வந்தார். தமிழ் மக்களிடம் தப்புப் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்த ‘திராவிடன்’ பத்திரிகை மீதிருந்த கெட்ட பெயரை மாற்றி, தமிழ் மக்களிடையே செல்வாக்குடன் ‘திராவிடன்’ வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. நெல்லூர் ஜஸ்டிஸ் மாநாட்டுக்குப் பின்னர், ‘திராவிடன்’ கூட்டுறவைப் பெரியார் விட்டுவிட எண்ணினார். இதற்குக் காரணம், அப்போதிருந்த கட்சித் தலைவர்களில் பலர், மிக மோசமான நிலைமையில் இருந்ததேயாகும். இப்படியிருக்கும் போது, ஆபீஸ் வரவு – செலவு நிர்வாகம் முழுவதும், பெரியாரால் நியமிக்கப்பட்ட சென்னை ஜஸ்டிஸ் கட்சி நண்பர்களிடமிருந்தது! இவர்களைப் பற்றிப் பெரியாருக்கு நல்ல எண்ணமுண்டு. ஆனால், இவர்களெல்லாரும் சுயநலக்காரர்களென்பது அழகிரிசாமியின் எண்ணம் என்று இருந்தாலும், இவர்கள் ஒரு நாள், பெரியாருக்குத் தீங்கையே செய்வார்கள் என்பது அழகிரிசாமியினுடையவும், அவர் தம் அக்காலத் தோழர்களுடைய  முடிவுமாகும். இந்த சமயத்தில் ஒரு வேடிக்கை நடந்தது.

அதாவது, ஒரு ஆள் ‘திராவிடன்’ ஆபீசிலுள்ள முக்கியமான கணக்குப் புத்தகங்களை எல்லாம் யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு போய், நண்பர் கண்ணப்பருக்கு வேண்டிய ஒருவருடைய வீட்டில் ஒளித்து வைத்து விட்டார். பெரியாரோ, ஈரோட்டுக்கு ஆபீசை மாற்றிக் கொண்டார். இந்த நிலையில், குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் கம்பெனியார், பெரியார் தங்களுக்கு பதினொண்ணாயிரம் ரூபாய் தரவேண்டுமென்று வழக்குத் தொடுத்தார்கள். அந்த சமயத்தில், ஏற்ெகனவே செய்திருந்த ஏற்பாட்டின்படி, பெரியார் அய்ரோப்பா சுற்றுப்பிரயாணத்திற்குச் சென்று விட்டார். தோழர்கள் அழகிரிசாமி, குருசாமி, நடராசன், காளியப்பன் முதலான நண்பர்கள், நமது கட்சி வக்கீலைக் கண்டு, பெரியார் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கைப் பற்றி விசாரித்தார்கள். வழக்கு விவரங்களைக் கேட்ட வக்கீல், ‘திராவிடன்’ பத்திரிகையின் வரவு – செலவை, நாம் நடத்தி வந்திருக்கிறோம். நடத்திய காலத்திலிருந்த நமது கணக்குப் புத்தகங்கள், இப்போது நமக்கு வேண்டும். கணக்குப் புத்தகங்களோ இல்லை என்கிறீர்கள். இல்லையென்பதோடு, எதிரிகளிடம் அக்கணக்குப் புத்தகங்களெல்லாம் இருக்கிறதென்றும் சொல்லுகிறீர்கள். இந்த நிலையில் ‘நான் என்ன செய்வது?’ என்று வருத்தப்பட்டார். அழகிரிசாமி வக்கீலை நோக்கி, ‘‘அய்யா, அந்தப் புத்தகங்கள் எதிரிகளிடமிருப்பதென்னவோ உண்மை.  ஆனால், அவை நம்மிடம் இருந்தால் நாம் இந்த வழக்கில் வெற்றி பெற்றுவிட முடியுமா?’’ என்று கேட்டார். வக்கீல் மகிழ்ச்சியோடு ‘முடியும்’ என்றார். இரண்டு நாட்களுக்குள், பெரியாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரின் வீட்டிலிருந்தே, பட்டப் பகலிலேயே அந்தக் கணக்குப் புத்தகங்கள் திருட்டுப் போய்விட்டன. அழகிரிசாமி கொடுத்த தைரியத்தின் பேரில்தான் நான் அப்புத்தகங்களைத் ‘திருடினேன்’. பிறகு அப்புத்தகங்களை வக்கீலிடம் கொடுத்தோம். வக்கீல் அவற்றை மகிழ்ச்சியோடு குறிப்புகளை எடுத்துக் கொண்டு, ‘இவற்றைப் பத்திரமாக வையுங்கள்’ என்று எங்களிடம் கொடுத்தார். அன்று, சென்னையில் எங்களுக்குள்ள பெரிய இடத்து ஆதரவு எப்படியிருந்ததென்றால், அந்தக் கணக்குப் புத்தகங்களை நம்பிக்கையாக வைத்திருப்பதற்கு இடமில்லாமலிருந்தது. சிறிது நாட்கள் V.P. மணியர் வீட்டிலும், பின்னர் குருசாமி வீட்டிலும் அவற்றை வைத்திருந்தோம்.

தனது தலைவர் இல்லாத காலத்தில், அவரைப் பாதிக்கக்கூடிய வழக்கில், தலைவரின் இலாபத்திற்காக அதாவது கட்சியின் இலாபத்திற்காக, தனது தோழர்களிடம் ‘திருடவும்’ அழகிரிசாமி பின் வாங்கவில்லை. பின்னர், வழக்கு நீண்ட நாட்களாக ஒத்தி வைக்கப்பட்டு வந்தது. கடைசியாகப் பெரியார் ஊர் திரும்பிய பின்பு, வழக்கு விசாரிக்கப்பட்டது. பெரியார் பதினொண்ணாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமென்று, குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் கம்பெனியரால் தொடரப்பட்ட அந்த வழக்கை, ஜஸ்டிஸ் ஸ்டோன் என்பவர் தள்ளிவிட்டார்.

பெரியார் அய்ரோப்பா சென்றிருந்த காலத்தில், ஜஸ்டிஸ் கட்சி ஆபீஸ் அலுவல்கள், தோழர் கண்ணப்பர் மேற்பார்வையில் நடந்து வந்தன. பின்னர், கண்ணப்பர் விலகியதால், குமாரசாமி நாயுடுவே ‘திராவிடன்’ பத்திரிகையை நடத்தி வந்தார். அதன் நிர்வாக ஆசிரியராக காலஞ் சென்ற வக்கீல் ஆறுமுகம் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார். அவரேதான் பெரியார் மீது தொடரப் பட்டிருந்த வழக்குக்கும் வக்கீலாக நியமிக்கப்பட்டிருந்தார். வழக்கு நடந்து கொண்டிருந்தது. பெரியார் சார்பில் வழக்கு சம்பந்தமான அலுவல்களைக் கவனிப்பதற்காக, அழகிரிசாமி, நடராசன் முதலானோர் சென்னைக்கு வருவார்கள். அவர்கள் தங்குமிடம் எது தெரியுமா? வக்கீல், ஆறுமுகம் அவர்களின் தலைமையிலுள்ள அதே ‘திராவிடன்’ ஆபீஸ்தான்!

தொண்டர்களுக்கும் தலைவர்களுக்குமுள்ள பொறுப்பு எவ்வளவு, எப்படிப்பட்டது என்பது வக்கீல் ஆறுமுகத்திற்குத் தெரியாது. ஒவ்வொரு சமயம், ஆறுமுகம் அழகிரிசாமியை நோக்கி, ‘‘உங்கள் நாயக்கர், நாயுடு பணத்தையே ஏப்பம் விட்டு விட்டாரே; பாபம் நீங்கள் நம்முடைய ஜில்லா (தஞ்சை) ஆட்கள் வழக்கு நடக்கும் போதெல்லாம் சென்னைக்கு வருகிறீர்களே! இரயிலுக்குச் செலவாகும் பணத்தையாவது நாயக்கர் உங்களுக்குக் கொடுப்பார் என்று எண்ணுகிறீர்களா?’’ என்று கேட்பார்.

உடனே அழகிரிசாமி, ‘‘ஓய் ஆறுமுகம், இதெல்லாம் உனக்கு எதற்காக? நாயக்கர் நாயுடுவுக்குப் பணம் கொடுக்காமல் ஏமாற்றுவதும், அல்லது நீங்கள் பொய் வழக்குத் தொடுத்திருப்பதும் கோர்ட்டில் தெரிந்துவிடப் போகிறது. ஆனால் உங்கள் நாயுடுவுக்கு இந்தப் பணமெல்லாம் ஏது? ஜஸ்டிஸ் கட்சி அதிகாரத்திலிருப்பதால் எல்லாப் பள்ளிக்கூடங்களுக்கும் பாடப் புத்தகங்களை ஏற்படுத்தி, அவற்றை விற்று இலட்ச இலட்சமாக சம்பாதித்த பணந்தானய்யா இது! இதைப்பற்றி உனக்கும் எனக்கும் என்ன கவலை?” என்று கேட்பார். இவ்விதமாக, எதிரியையும் கூட்டாளியாக்கித், தான் சரியென்று நினைத்ததைச் சாதித்துக் கொள்ளும் திறன் அழகிரிசாமிக்கு உண்டு.

வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, ‘குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் கம்பெனியார், நான் ரூபாய் பதினொண்ணாயிரம் கொடுக்க வேண்டுமென்று சொல்கிறீர்களே, நான் ‘திராவிடன்’ பத்திரிகைக்குப் பேப்பர் (நியூஸ் பிரிண்ட்) வாங்கியதாகச் சொல்கிறார்களே, இதற்கு அவர்களுடைய கணக்குப் புத்தகத்தில் என் பேரில் பற்று எழுதப்பட்டிருக்கிறதா? கம்பெனிக்கும் எனக்கும் ‘குடிஅரசு’ சம்பந்தமாகப் பற்று வரவு உண்டு. இதில் நான் கொடுக்க வேண்டியதாகப் பாக்கிகூட இருக்கக்கூடும். அதைக் கேட்காமல், திடீரென்று பதினொண்ணாயிரம் கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது. நான் இது சம்பந்தமாக இவர்களுக்கு ஆர்டர் செய்ததுண்டா? இரசீதாவது இருக்கிறதா?’ என்று வழக்கு மன்றத்தில் பெரியார் அவர்கள் கேட்டார்.

‘குடிஅரசு’ பத்திரிகை சம்பந்தமாகக் கம்பெனிக் கணக்குப் புத்தகத்தில் பற்று வரவு இருக்கிறது. ஆனால் ‘திராவிடன்’ சம்பந்தமாக ஒரு பேரேடோ, கணக்குப் புத்தகத்தில் ஒரு வரியோ, எழுத்தோ இல்லை. எனவேதான், வழக்கை நீதிபதி தள்ளிவிட்டார். வழக்கில் வக்கீல் ஆறுமுகத்தின் வாதம் தோற்று விடவே, நாயுடு கம்பெனியாரால் ஆறுமுகம் விலக்கப்பட்டு, ‘திராவிடன்’ ஆபீஸ் பொறுப்பு, டி.வி. சுப்பிரமணியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ‘திராவிடன்’ ஆபீஸ் முதலாளிகள் மாறி மாறி வந்தார்களே தவிர, ‘திராவிடன்’ சாவி மட்டும் எப்போதும் அழகிரிசாமியிடமே இருக்கும்.

தனது தலைவரிடமிருந்து கை மாறிப் போன ஆபீசை, மீண்டும் தலைவரிடமே கொண்டு வர வேண்டுமென்பது தான் அழகிரிசாமியின் விருப்பம்.

தந்தை பெரியார் மீதும் அவர் தம் கொள்கையின் மீதும் தணியாத கொள்கை வெறி கொண்டவர் அஞ்சா நெஞ்சன் அழகிரி சாமி. ஆனாலும் தன் மனதில் எழும் எண்ணங்களை மறைக்காது மொழிபவர் அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *