புதுடில்லியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பன்னாட்டு மாநாடு
திட்டமிட்ட மறைப்புகளைக் கடந்து இந்திய வரலாற்றில் சுயமரியாதை இயக்கத்தின் தனித்துவம் எழுதப்படும்!
புதுடில்லி, மார்ச் 24 சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, ரீவாம்ப் அமைப்பும், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (நிகர்நிலைப் பல்கலைக்கழக)மும் இணைந்து புது டில்லியில் நடத்திய இரண்டு நாள் பன்னாட்டு மாநாட்டின் தொடக்க விழாவை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுத்துறை மாணவர் வினிதா ஒருங்கிணைத்தார். அத் துறையின் மாணவர் வெற்றிச் செல்வி தொடக்க விழா குறித்த அறிக்கையை வழங்கினார்.

தமிழர் தலைவர் அவர்களின் தொடக்கவுரைக்குப் பின்னர், மதிய உணவு இடைவேளை வழங்கப்பட்டது. அதன் பிறகு மூன்று தனித்தனி அரங்குகளில் அமர்வுகள் ஒரே நேரத்தில் தொடங்கப் பட்டன. முதலாம் அமர்வுக்கு டில்லி பல்கலைக்கழகத்தின் சமூகப் பணிகள் துறை பேராசிரியரும், சமூக வளர்ச்சி மற்றும் செயல்பாட்டு மய்யத்தின் இயக்குநருமான முனைவர் சுதிர் மாஸ்கே தலைமையேற்றார். மற்றொரு அமர்வுக்கு பீகார் பி.என்.எம்.வீ கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் சிறீ பாலிகா சேகர் தலைமையேற்றார். மூன்றாம் அமர்வுக்கு டில்லி பல்கலைக்கழகத்தின் சுவாமி சிரத்தானந்தா கல்லூரியின் இணைப் பேராசிரியர் முனைவர் சூரஜ் மண்டல் தலைமையேற்றார். தேநீர் இடைவேளைக்கு பிறகு தொடங்கிய அமர்வுகளுக்கு ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் சமூக ஒருங்கிணைப்புக்கான மய்யத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் அரவிந்தகுமார், பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் கோமதி போதுரா ஹெம்ப்ரோம், பல்கலைக்கழகத்தின் சமூகப் பணிகள் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சஞ்சய் ஓங்கார் இங்கோள் ஆகியோர் தலைமை ஏற்றனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மகளிரியல் மய்யத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் ஜீவானந்தம், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முனைவர் கனகவிநாயகம், டில்லி இந்திரபிரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முனைவர் சுருதி சிங் காலிந்தி, அக் கல்லூரியின் அரசியல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சீமா மாத்தூர், அய்தராபாத் சென்ட் அண்ட் கல்லூரி பேராசிரியர் முனைவர் கயல்விழி உள்ளிட்டோர் கலந்துரையாடலை ஒருங்கிணைத்தினர்.

இரண்டாம் நாள் காலை முதல் அமர்வுக்கு டில்லி பல்கலைக்கழக தத்துவவியல் பேராசிரியர் முனைவர் பெருக்கலா கேசவ குமார் தலைமை வகித்து உரையாற்றினார். அவர் தனது உரையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் டில்லி பல்கலைக்கழகத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அழைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றச் செய்ததையும், அதில் தமிழர் தலைவர் அவர்களின் செறிவான உரையையும் நினைவுகூர்ந்தார். தந்தை பெரியாரின் கருத்துகளையும், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றையும் குறித்து கல்விப் புலத்தில் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் மறைமுகமாக செய்யப்பட்டு வரும் தடைகள் குறித்தும், அத்தகைய உரையாடல்கள் தணிக்கை செய்யப்படுவதையும் சுட்டிக்காட்டினார். சமூக நீதிக்கும் சமூக சமத்துவத்திற்கும் பெரும் பங்காற்றியிருக்கும் தந்தை பெரியார் குறித்தும், திராவிட இயக்கம் குறித்தும் வடபுலத்தில் ஆய்வுகள் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
டில்லி பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மீனாட்சி ராமோஜி இங்கோள் கலந்துரையாடலை ஒருங்கிணைத்தார். மற்றோர் அரங்கில் நடைபெற்ற அமர்வுக்குப் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் அரசியல் அறிவியல் துறைத் தலைவர் முனைவர் ஆர்த்தி சரவணன் தலைமை ஏற்றார். டில்லி பல்கலைக்கழகத்தின் ஷ்யாம் லால் கல்லூரியின் உதவிப் பேராசிரியரும், சமூக நீதி செயல்பாட்டாளருமான டாக்டர் சந்தீப் யாதவ் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.
மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு, பாஸ்கோ அரங்கில் நிறைவு விழா தொடங்கியது. இருநாள் மாநாடு குறித்து அறிக்கையினை ரீவாம்ப் அறக்கட்டளையின் பொறுப்பாளரும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக ஆய்வு மாணவருமான இளையகுமார் வாசித்ததுடன், நிறைவு விழாவிற்கு வருகை தந்திருந்தோரையும் வரவேற்று உரையாற்றினார். நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறைகளுக் கான டீன் பேராசிரியர் விவேக் குமார் சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்திய வரலாற்றில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்படுவதையும், அதிலும் குறிப்பாக திராவிட இயக்கத்தின் தலைவர்கள், தந்தை பெரியார் உள்ளிட்ட சமூக புரட்சியாளர்களின் வரலாறு மறைக்கப்படுவதையும் ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினார். இபின் சந்திரா, கேன்.என்.பணிக்கர் உள்ளிட்ட முக்கிய வரலாற்று ஆசிரியர்கள் இணைந்து எழுதிய இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றுப் புத்தகத்தில் வைக்கம் போராட்டம் குறித்த பகுதியில் ஒரே ஒரு வரியில் தந்தை பெரியாரின் பங்களிப்பு சுருக்கப்பட்டு இருப்பதை எடுத்துக்காட்டி, வேறு எங்கும் பெரியார் குறித்து ஒரு வரி கூட இடம்பெறாததையும் சுட்டிக்காட்டி, இது திட்டமிட்ட புறக்கணிப்பு அல்லாமல் வேறு என்ன? என்று கேள்வி எழுப்பினார். வடபுலத்தின் பல்வேறு சமூகச் சீர்திருத்தவாதிகளின் பணிகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை, அவற்றை விட பல மடங்கு நடப்பில் கொண்டு வந்த தந்தை பெரியாருக்கு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
காணொலி வாயிலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அவர் தனது உரையில், தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி, அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் காலத்தில் செய்யப்பட்டு வரும் அரும்பணிகளைப் பட்டியலிட்டார். சமூகநீதிக்கான போராட்டத்தை எடுத்துரைத்தார்.
நிறைவுரை ஆற்றிய திராவிடர் கழகப் பொதுச் செயலாளரும், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைத் தலைவருமான முனைவர் வீ.அன்புராஜ், இந்த இரு நாள் மாநாட்டின் முக்கியத்துவத்தை இம் மாநாட்டில் பங்கேற்ற பேராளர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்களின் உரைகள் எடுத்துக்காட்டி இருப்பதாகவும், தொடர்ந்து இத்தகைய ஆய்வு மாநாடுகள் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் பல்வேறு பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்போடும் நடத்தப்படும் என்றும் பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் அறிவித்தார்.
இந்த இரண்டு நாள் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கு ஒருங்கிணைப்புப் பணியாற்றிய குழுவினருக்கும், உடன் உதவிய பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அனைவருக்கும் சான்றிதழ்களை அறிஞர் பெருமக்கள் வழங்கினர்.
இரண்டாம் நாள் நிறைவு விழாவில் பங்கேற்ற மாணவர்கள், ஆய்வுச் சொற்பொழிவாளர்கள் அனைவரும் குழுப் படம் எடுத்துக்கொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து டில்லியில் பயிலும் பல மாணவர்களும், மாநாடு தொடர்பான செய்தி அறிந்து நிகழ்வில் பங்கேற்றதுடன் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோருடன் கலந்துரையாடினர். அவர்களைத் திராவிடர் தளம் அதிஅசுரன் ஒருங்கிணைத்தார்.
தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம், தந்தை பெரியார், திராவிட இயக்கம் குறித்த பல்வேறு ஆய்வுகளும், நிகழ்ச்சிகளும், கருத்தரங்குகளும், பொதுவெளிகளிலும், கல்விப்புலங்களிலும் வரலாற்றுத் துறைகளிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலிலும், இந்தியாவின் பிற மாநிலங்களில், குறிப்பாக மத்தியப் பல்கலைக்கழகங்களில் வரலாற்றுத் துறையிலும், அரசியல் அறிவியல், தத்துவவியல், சமூக நீதி, சமூக உள்ளடக்கம், விளிம்பு நிலை மக்களுக்கான சிறப்புத் துறைகள் உள்ளிட்ட பல்வேறு தளங்களிலும் ஒருவித தயக்கமும், மறைப்பும் நீடிப்பதையும், இதுவரை சமூக நீதிக்கான இத்தகையதொரு தளம் விரிந்த அளவில் ஏற்படாத குறையை இம் மாநாடு நிறைவு செய்திருப்பதாகப் பலரும் சுட்டிக்காட்டினர்.
தமிழ்நாட்டில் இருந்து திராவிட இயக்கத்தின் தாக்கம் இந்தியா முழுமையும் ஆராயப்பட வேண்டும் என்பதோடு, அவற்றை மாணவர்களும், கல்வியாளர்களும் தங்கள் வாழ்க்கையில் ஏற்று கடைப்பிடிக்க வேண்டும் என்று நிகழ்வில் பங்கேற்ற பேராசிரியர்கள், கல்வியாளர்கள் அனைவரும் தங்கள் உரையினூடே வலியுறுத்தியது, அவர்களின் உண்மையான உணர்வை எடுத்துக்காட்டியது.
தந்தை பெரியாருக்கு எதிராக எழுப்பப்பட்டுள்ள அவதூறுகளுக்கு ஆதாரப்பூர்வமான மறுப்புரைகளும், கருத்தரங்கில் உரையாற்றிய அறிஞர் பெருமக்களின் கட்டுரையில் இடம்பெற்றிருந்தன. தந்தை பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கத்தை சுமார் அரை நூற்றாண்டு காலமாக திறம்பட வழிநடத்தி, சமூகநீதிக் கொடி இந்தியாவெங்கும் பறப்பதற்குக் காரணமான திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மீது வடபுலத்துப் பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் கல்வியாளர்களும் கொண்டிருந்த மரியாதை அவர்களின் உரைகளில் வெளிப்பட்டது.
இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து சென்று பங்கேற்ற மாணவர்கள், தமிழ்நாட்டிலிருந்து டில்லியில் சென்று பயிலும் மாணவர்கள் தவிர, கருநாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராட்டிரா, பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இருந்து மாணவர்கள் பங்கேற்றது முக்கியமானதாகும்.
நிறைவாக ‘பெரியார் உலகம்’ காணொலி திரையிடப்பட்டது ‘பெரியார் உலகம்’ குறித்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் எடுத்துரைத்தபோது பெரும் வியப்போடும் மகிழ்வோடும் பங்கேற்பாளர்கள் வரவேற்றனர். “பெரியாரை உலக மயமாக்குவோம்; உலகைப் பெரியார் மயமாக்குவோம்” என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முழக்கம் எவ்வளவு அவசியமானது என்பது பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரின் ஆர்வத்திலும் வெளிப்பட்டது. இம்மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் விரைவில் டில்லி பல்கலைக்கழகத்தின் சார்பில் வெளியிடப்படவுள்ளது முக்கியமானதாகும்.
மாநாட்டின் பணிகளை ரீவாம்ப் அறக்கட்டளையின் நிர்வாகிகள், திராவிட மாணவர்களின் அமைப்பு (SFD) மாணவர்களும், பல்வேறு மாநில மாணவர்களும் மேற்கொண்டு மாநாடு சிறக்க ஒத்துழைத்தனர்.
