“இந்தியாவின் எடிசன்” என்று போற்றப்பட்ட சிறந்த அறிவியல் அறிஞரும், மகத்தான கண்டுபிடிப்பாளருமான ஜி.டி.நாயுடு (கோபால்சாமி துரைசாமி நாயுடு) 1893 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார்.
இவர் அதிகம் படிக்கவில்லை என்றாலும் பல நூல்களை வாங்கிப் படித்து அறிவை வளர்த்துக்கொண்டார். இவர் 18 வயதில் அமெரிக்காவில் தயாராகும் வலி நிவாரணியை அங்கிருந்து வரவழைத்து, இங்கு விற்பனை செய்தார். அதில் லாபமும் கிடைத்தது.
பிறகு இவர் இரு சக்கர வாகனத்தில் (Motor Bike) பக்கவாட்டில் இன்னொருவர் அமரும் வகையில் வடிவமைத்தார். திருப்பூரில் பருத்தி ஆலையைத் தொடங்கினார். இதன் மூலம் பெரும் தொழிலதிபராக உயர்ந்தார். அதன்பின் தொழிலில் எதிர்பாராத விதமாக நட்டம் ஏற்பட்டது. பிறகு போக்குவரத்துத் தொழிலில் ஈடுபட்டு பொள்ளாச்சி – பழநி இடையே பேருந்து போக்குவரத்து நடத்தினார்.
அதன்பின்பு யுனிவர்செல் மோட்டார் சர்வீஸ் நிறுவனத்தை தொடங்கினார். பேருந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி, பயணச்சீட்டு வழங்கும் கருவி, இயந்திர அதிர்வைக் கண்டறியும் கருவி, பழச்சாறு பிழியும் கருவி, வெட்டுக்காயம் இல்லாமல் முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு எனத் தொடர்ந்து பல பொருட்களை உருவாக்கினார்.
ஜெர்மனியில் நடந்த பொருட்காட்சி யில் இவரது சவரக்கத்தி, பிளேடுக்கு முதல் மற்றும் 3 ஆவது பரிசுகள் கிடைத்தன. இவற்றைத் தயாரிக்கும் உரிமையைப் பல நாடுகள் கேட்டும் மறுத்த இவர், இறுதியாக அமெரிக்க நிறுவனத்திற்கு அந்த உரிமையைக் கொடுத்துவிட்டார்.
இவரது தாவர ஆராய்ச்சி முடிவுகள் உலகையே வியக்க வைத்தன. இவரது அதிசய பருத்திச் செடிக்கு நாயுடு காட்டன் எனப் பெயரிட்டு ஜெர்மன் சிறப்பு செய்தது.
சாதாரண கிராமத்தில் பிறந்து பல அரிய சாதனை களைப் படைத்த ஜி.டி.நாயுடு 1974 ஆம் ஆண்டு மறைந்தார். கோவை அவிநாசி சாலையில் இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி, அருங் காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியாரும் – ஜி.டி.நாயுடுவும்!
தந்தை பெரியாரும், கோவை விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவும் நெருங்கிய தோழர்களாகவும், ஒருவருக் கொருவர் மிகுந்த மரியாதை கொண்டவர்களாகவும் திகழ்ந்தனர்.
தந்தை பெரியாரும், ஜி.டி. நாயுடுவும் எப்போதும் சண்டை பிடித்துக் கொள்ளும் நண்பர்களாக இருந்தாலும், கொள்கை ரீதியாக மாறு பட்டாலும், தனிப்பட்ட முறையில் ஒருவரையொருவர் மதித்து வந்தனர். இருவரும் தங்கள் பிறந்த நாட்களில் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டு நட்பைப் பேணி வந்துள்ளனர். பெரியாரின் பகுத்தறிவுச் சிந்த னைக்கும், ஜி.டி. நாயுடுவின் விஞ் ஞான சிந்தனைக்கும் இடையே ஒரு தார்மீக ஒற்றுமை இருந்தது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கோவை மாநகரில் கட்டப்பட்ட மிக நீண்ட பாலத்திற்கு “ஜி.டி. நாயுடு பாலம்” எனப் பெயரிட்டு, அதனைத் திறந்து வைத்ததோடு, அவருக்கு சிலை யையும் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.
வாழ்க ஜி.டி.நாயுடு புகழ்!
