சென்னை, மார்ச் 23- ரியல் எஸ்டேட் துறையில் கருப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் வருமான வரித்துறை புதிய அதிரடி விதிகளைப் பிறப்பித்துள்ளது.
சொத்து பரிமாற்றத்தின் போது ரொக்கப் பணப் பயன்பாட்டைக் குறைக்க ஏற்கெனவே பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், தற்போது முத்திரைத்தாள் வாங்குவோருக்குப் புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், 2 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பிலான முத்திரைத்தாள்களை வாங்குபவர்கள் தங்களது பான் (PAN) எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய வருமான வரிச் சட்டத்தின் 237ஆவது பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களின்படி:
ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல்
மதிப்பிலான முத்திரைத்தாள்களை வாங்குவோர் விவரங்களை ‘ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் இந்தியா’ நிறுவனத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.
உயர் மதிப்பு முத்திரைத்தாள்கள் வாங்குவோரின் முழு விவரங்களும் இனி நேரடியாக வருமான வரித்துறையின் பார்வைக்குச் செல்லும். சொத்து ஆவணங்களில் ஒரு தொகையைக் குறிப்பிட்டுவிட்டு, மீதித் தொகையை ரொக்கமாகக் கைமாற்றும் முறையைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனி முத்திரைத்தாள் வாங்கும்போதே அந்தத் தகவல் வருமான வரித்துறையிடம் பதிவாகிவிடும் என்பதால், சொத்து வாங்குபவர்களின் வருமான ஆதாரங்களை எளிதாகச் சரிபார்க்க முடியும்.
இந்த புதிய விதிமுறைகள் ரியல் எஸ்டேட் துறையில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
