சென்னை, மார்ச் 23- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் மார்ச் 26ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட ஓரிரு இடங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழ்நாட்டில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி எஸ்டேட்டில் 6 செமீ, தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 4 செமீ, தென்காசி மாவட்டம் குண்டாறு அணை, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாணவர்களின் மனநலம் பாதுகாப்பு, தற்கொலைத் தடுப்புக்கு
புதிய மனநலக் கொள்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
சென்னை, மார்ச் 23- தமிழ்நாட்டில் மாணவர்களின் மனநலம் பாதுகாப்பு, தற்கொலை தடுப்புக்கு புதிய கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாணவர்களின் உளவியல் பாதிப்புகளுக்குத் தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் வினீத் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்தது. இதில் பள்ளிக் கல்வி, உயர்கல்வி, சட்டத் துறை, உள்துறை அதிகாரிகள், மனநல வல்லுநர்கள் இடம்பெற்றிருந்தனர்.
கடந்த மாதம் இந்தக் குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், சில வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய மனநலக் கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது. அதில், மாணவர்களின் மன அழுத்தத்தைக் கண்டறிந்து, அவர்களைப் பாதுகாக்கத் தேவையான வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் பரிந்துரையை ஏற்று இதுதொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மனநலக் கொள்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளி, கல்லூரிகளில் மனநல ஆலோசகர்கள், ஆலோசனை மய்யங்கள் மூலம் மாணவர்களின் தனித் திறனை ஊக்குவிப்பதுடன், நண்பர்கள் இடையே ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்ளும் நல்லாதரவு நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். இளைஞர் மன்றங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மனநல ஆலோசனைகள் தேவைப்படும் மாணவர்கள் ‘14416’, ‘14417’, ‘104’, ‘1098’, ‘181’ ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். தீவிர மனநல பாதிப்பு உள்ள மாணவர்களை அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளில் ஆசிரியர்கள், பெற்றோர், ஆலோசகர்கள், சக மாணவர்கள் என அனைவரது பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
