வாஷிங்டன், மார்ச் 23- ‘‘ஹார்முஸ் நீரிணைப்பு பகுதியை நாளை காலைக்குள் முழுமையாக திறக்காவிட்டால், ஈரானின் மின் நிலையங்களைத் தகர்ப்போம்’’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘‘அமெரிக்கா தாக்கினால் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க மய்யங்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்படும்’’ என்று ஈரானும் அறிவித்துள்ளதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணைப்பு பகுதி ஈரானை ஒட்டியுள்ளதால், எதிரி நாடுகளின் எண்ணெய் கப்பல்களை ஈரான் தாக்குகிறது. உலகளவில் 5இல் ஒரு பங்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து ஹார்முஸ் நீரிணைப்பு வழியாக கொண்டு செல்லப்படுவதால், இங்கு பாதுகாப்பை ஏற்படுத்தி, சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்புகிறார்.
இதற்கு நேட்டோ நாடுகள் உதவ வேண்டும் என்றும் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், நேட்டோ நாடுகள் அதற்கு முன்வரவில்லை. இதனால் நேட்டோ நாடுகள் மீதும் ட்ரம்ப் கோபத்தில் உள்ளார். இதையடுத்து அமெரிக்க கடற்படையின் மேலும் 3 போர்க் கப்பல்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்ப அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு பகிர்மான மய்யமாகத் திகழும் கார்க் தீவை கைப்பற்றி ஹார்முஸ் நீரிணைப்பு பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா வியூகம் வகுத்து வருகிறது.
இந்நிலையில் ஹார்முஸ் நீரிணைப்பு பகுதியை, எந்த அச்சுறுத்தலுமின்றி முழுமையாக ஈரான் திறந்து விட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 48 மணி நேர கெடு விதித்துள்ளார். இதுகுறித்து, தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் அதிபர் ட்ரம்ப் நேற்று வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது: ஹார்முஸ் நீரிணைப்பை எவ்வித அச்சுறுத்தலும் இன்றி, நாளை காலைக்குள் ஈரான் முழுமையாகத் திறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால், ஈரானின் பல்வேறு மின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும். மிகப்பெரிய மின் நிலையத்தின் மீதே முதலில் தாக்குதல் நடத்தப்படும்.இவ்வாறு அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கைக்கு ஈரான் ராணுவமும் நேற்று பதிலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஈரான் ராணுவம் கூறுகையில், ‘‘ஈரான் எரிசக்தி மய்யங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்கள், தகவல் தொழில்நுட்பம், கடல்நீரை குடிநீராக்கும் மய்யங்கள், எரிசக்தி நிலையங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்துவோம்.
அத்துடன் ஈரானின் நட்பு நாடுகளும் தாக்குதல் நடத்தும். மேலும் எதிரி நாடுகளைத் தவிர மற்றவர்களுக்கு ஹார்முஸ் நீரிணைப்பு பகுதியில் எந்த அச்சுறுத்தலும் இருக்காது’’ என்று தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, ஈரான் தாக்குதலால் வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் வளைகுடா நாடுகள் கடுமையாகப் பாதிக்கும் என்று தெரிகிறது.
