ஆழமான எழுத்தாளர்; நல்ல பேச்சாளர்; எல்லாவற்றிற்கும் மேலாகச் சிறந்த மனிதர், பெரியார் பற்றாளர்!
- ஆழமான எழுத்தாளர்; நல்ல பேச்சாளர்; எல்லாவற்றிற்கும் மேலாகச் சிறந்த மனிதர், பெரியார் பற்றாளர்!
- ‘‘சிந்தனைக்கனி திரு.ஆலடி அருணா
- ஒரு முழுமையடையாத ஒரு பயணம்’’
- குறிக்கோளோடும், இலக்கோடும் வாழ்ந்தவர்!
- தந்தை பெரியாரின் கொள்கையையும், திராவிடக் கொள்கையையும் பின்பற்றிய ஒருவரால்…
- நம் இனம் யாருக்கும் சளைத்ததோ, பின்தங்கியதோ அல்ல!
- தந்தையையே மிஞ்சும் அளவிற்குத் திகழ்கிறார்!
- வேர்களும் சரியாக இருக்கின்றன, விழுதுகளும் அற்புதமாக இருக்கின்றன!
- ஒரு கொள்கை குடும்பத்தின் நிகழ்ச்சி!
- நானே அதன் மூலம் பயனடைந்தவன்!
- இயக்கப் பிரச்சாரங்களையும், அமைப்புப் பணிகளையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றார் தந்தை பெரியார்!
- என்னுடைய நண்பர் சாமிதுரை!
- திராவிட இயக்கம் என்றவுடனேயே…
- நம்முடைய கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் யார் யார் என்று…
சென்னை, மார்ச் 22 ஆழமான எழுத்தாளர்; நல்ல பேச்சாளர்; எல்லாவற்றிற்கும் மேலாகச் சிறந்த மனிதர், பெரியார் பற்றாளர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘சிந்தனைக்கனி திரு.ஆலடி அருணா
ஒரு முழுமையடையாத ஒரு பயணம்’’
கடந்த 7.3.2026 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், ‘‘சிந்தனைக் கனி திரு.ஆலடி அருணா ஒரு முழுமையடையாத ஒரு பயணம்’’ நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவரது சிறப்புரை வருமாறு:
மிகுந்த எழுச்சியோடும் நெகிழ்ச்சியோடும் நடை பெறக்கூடிய, ‘சிந்தனைக்கனி திரு. ஆலடி அருணா அவர்களுடைய ஒரு முழுமையடையாத பயணம்’ என்ற ஓர் அற்புதமான தலைப்பிலான இந்நிகழ்வில், அவரைப் பற்றிய பல அரிய தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. அரசி யல் மற்றும் சமுதாய நிலைகள், திராவிட இயக்கத்தின் தேவைகள், கொள்கைகள் மற்றும் அதன் வெற்றிகளால் பல குடும்பங்கள் எப்படியெல்லாம் பயன்பெற்று ஒரு பல்கலைக்கழகமாகத் திகழும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றன என்பதற்கெல்லாம் அடையாளமாகத் திகழ்ந்தவர் அவர்.
குறிக்கோளோடும், இலக்கோடும் வாழ்ந்தவர்!
நம்முடைய அருமைத் தோழர் ‘மறைந்தார்’ என்று ஒருபோதும் ஒப்புக்கொள்ள முடியாது; நம் நெஞ்சங்களில் ‘நிறைந்தார்’ என்றுதான் பெருமையோடு சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஒரு கொள்கையாளர்; குறிக்கோளோடும், இலக்கோடும் வாழ்ந்தவர். அவரோடு அந்தப் பயணம் முடிந்துவிட்டது என்று சொல்ல முடியாதபடி, அடுத்த தலைமுறையினர் இதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதுதான் அவருக்கு நாம் சேர்க்கும் பெருமை.
அப்படிப்பட்ட அருமையான இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பானதொரு தலைவரை அவர்கள் தேர்ந்தெ டுத்துள் ளார்கள். வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழ கத்தின் (VIT) வேந்தர் அவர்கள், இந்தச் சிறப்பான நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி ஓர் அரிய உரையாற்றினார்கள்.
ஒரு காலத்தில் ‘‘பல்கலைக்கழகத்தின் பக்கம் உங்களால் போக முடியுமா? படிக்கத் தகுதி உண்டா? உங்களுக்குப் படிக்கும் திறமை இருக்கிறதா? நீங்கள் எல்லாம் படிப்பதற்கு லாயக்கற்றவர்கள்; மாடு மேய்ப்பதற்கும் ஆடு மேய்ப்பதற்குமே லாயக்கான வர்கள்’’ என்று வருணாசிரம தர்மத்தாலும், ஆரியக் கொடுமையாலும், மனுதர்மத்தாலும் ஒதுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள்.
தந்தை பெரியாரின் கொள்கையையும், திராவிடக் கொள்கையையும்
பின்பற்றிய ஒருவரால்…
பின்பற்றிய ஒருவரால்…
இன்று நாங்கள் படிப்பது மட்டுமல்ல, உலகெங்கிலும் இருந்து பல லட்சக்கணக்கான பிள்ளைகள் இங்கே வந்து படிக்கக்கூடிய அளவிற்கு ஒரு கல்வி நிறு வனத்தை உருவாக்கியுள்ளார். தந்தை பெரியாரின் கொள்கையையும், திராவிடக் கொள்கையையும் பின்பற்றிய ஒருவரால் இவ்வளவு உயர முடிந்தது என்பதற்குச் சான்றாக விளங்கும் ஒப்பற்ற தலைவர்தான் வி.அய்.டி. வேந்தர் அவர்கள். இந்த விழாவிற்கு அவர் தலைமை தாங்கியதுதான் மிக முக்கியமான விஷயம்.
ஆகவே, அவர் எல்லாவற்றிலும், எல்லாப் போட்டிகளிலும் விழாத் தலைவராகவே இருக்கிறார். என்றைக்கும் அவர் விழாத் தலைவராகவே இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய அன்பான வேண்டுகோள். அப்படிப்பட்ட அருமைத் தோழர் விஸ்வநாதன் அவர்களே!
அதுபோலவே, இங்குச் சிறப்புரை ஆற்றினார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெளிநாடு
வாழ் இந்தியர் நல அணித்தலைவர் கலாநிதி வீராசாமி எம்.பி. அவர்கள். இவ்வளவு சிறப்பாக அவர் பேசுவார் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. பொதுவாக எங்குப் பார்த்தாலும் சுருக்கமாகப் பேசிவிட்டு ஒதுங்கிச் சென்றுவிடுவார்.
அவர்கள் எல்லாம் அடுத்த தலைமுறையினர். அவருடைய தந்தை ஆற்காடு வீராசாமி அவர்கள், எங்களுடைய உடன்பிறவாச் சகோதரர் போன்றவர். அவர் ‘ஆலடி’யாருக்கு (ஆலடி அருணா) எவ்வளவு முக்கியம் என்பதைப் புத்தகத்திலேயே மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார். அப்படிப்பட்டவர், இன்றைக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் மிகத் தாராளமாகப் பேசினார். இதைப் பார்க்கும் பொழுது, அவர் நாடாளுமன்றத்தில் எப்படியெல்லாம் சிறப்பாகச் செயல்பட்டிருப்பார் என்று ஊகிக்கக்கூடிய வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.
நம் இனம் யாருக்கும் சளைத்ததோ,
பின்தங்கியதோ அல்ல!
பின்தங்கியதோ அல்ல!
எனவே, நம் இளைய தலைமுறைக்கு ஒரு நல்ல வாய்ப்புக் கொடுத்தால், இந்த இனம் யாருக்கும் சளைத்ததோ அல்லது பின்தங்கியதோ அல்ல என்பதை அவர்களால் நிரூபிக்க முடியும். அதேபோல், அய்யா சூர்யா சேவியர், சரவணன் போன்றோர் தொலைக்காட்சிகளில் பேசுவதை நாங்கள் அனைவரும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்போம். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் அறிவார்ந்த வாதங்களை முன்வைப்பவர்கள்; ஆனால், இவர்களுக்கு நேர் எதிரானவர்களோ அடிப்படை விஷயம் கூடத் தெரியாதவர்கள்.
அவர்களை எப்படிச் சமாளித்து வாதம் செய்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. முன்னொரு காலத்தில் அறிஞர் அண்ணாவோடு சோமசுந்தர பாரதியாரும், ரா.பி. சேதுப்பிள்ளையும் வாதிட்ட அந்தத் தரம் இன்று இல்லை. இவர்களுக்கு ஓர் இக்கட்டான சூழல் நிலவினாலும், அதற்கு ஈடுகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மனிதனால் இவ்வளவு தரம் தாழ்ந்து பதில் சொல்ல முடியுமா என்று கேட்கும் அளவிற்கு இருப்பவர்களையும், ‘கீழிறங்கிச் சென்றால்தான் இவர்களைச் சந்திக்க முடியும்’ என்ற நிலையில் சிறப்பாக எதிர்கொண்டு வாதிடும் தோழர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.
அதுபோலவே, நம்முடைய அருமை நண்பர் ஒளிவண்ணன் அவர்கள் இந்த நூல் சிறப்பாக வெளிவருவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். அடுத்த தலைமுறையினர் இங்கே அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது மிகுந்த பெருமையாக இருக்கிறது. இதைப் பற்றி அதிகம் பேச வேண்டிய அவசியமே இல்லை; அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தாலே போதும். காரணம், இவர்கள் சிறு பிள்ளைகளாக இருந்ததிலிருந்து பார்த்து வருகிறோம். ஒருவேளை நாங்கள் வளர்ந்துவிட்டோமா அல்லது அவர்கள் வளர்ந்துவிட்டார்களா என்று பார்த்தால், எங்களை விட அவர்கள் இன்னும் வளர வேண்டும்; வளர்ந்து கொண்டும் இருக்கிறார்கள். அதுவே மிக முக்கியமானது.
தந்தையையே மிஞ்சும் அளவிற்குத் திகழ்கிறார்!
இன்று ‘எமரால்ட் பப்ளிஷர்ஸ்’ நிறுவனத்தின் சிறந்த உரிமையாளராக அவர் விளங்குகிறார். அவருடைய தந்தையாரோடு வரும்போது சிறு பிள்ளையாக இருந்தவர், இன்று, ‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது’ என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, தந்தையையே மிஞ்சும் அளவிற்குத் திகழ்கிறார். அதுதான் பெருமை. ஓர் இயக்க மாக இருந்தாலும் சரி, ஒரு குடும்பமாக இருந்தாலும் சரி, முன்னோர்களை விஞ்சி நிற்பது என்பது அவர்களைக் குறைத்து மதிப்பிடுவதல்ல; அது அவர்களுக்குச் சேர்க்கும் பெருமையாகும்.
வேர்களும் சரியாக இருக்கின்றன,
விழுதுகளும் அற்புதமாக இருக்கின்றன!
விழுதுகளும் அற்புதமாக இருக்கின்றன!
அன்று அவர்கள் போட்ட விதைதான், இன்று இவ்வளவு சிறப்பாக வளர்ந்திருக்கிறது; அந்த விழுது கள்தான் இவை. இவை அனைத்தும் பழுதில்லாத விழுதுகள். வேர்களும் சரியாக இருக்கின்றன, விழுதுகளும் அற்புதமாக இருக்கின்றன. இதுதான் திராவிட இயக்கம்; அதனால்தான் இதை யாராலும் அசைக்க முடியாது. இதை நாம் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அத்தகைய அற்புதமான இந்த நிகழ்ச்சியில், சிறப்பான முறையில் கலந்துகொண்டிருக்கும் அருமை நண்பர்கள் இளைய அருணா அவர்களே, சரவணன் அவர்களே! சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்யும் லட்சுமி மணிபாலா அவர்களே! மற்றும் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களே, கொள்கை உறவுகளே, குருதி உறவுகளே – ஏனெனில் எல்லோருமே நமக்கு உறவுதான்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் – இதுதான் திராவிட இயக்கம். எங்களின் போராட்டமே அதில் தான் அடங்கியிருக்கிறது. ‘யாதும் ஊர்’ இல்லை, ‘யாவரும் கேளிர்’ இல்லை, ‘நாங்கள் மட்டும்தான்’ என்று சொல்ப வர்களுக்கு எதிரான போராட்டம் இது! இது அந்த அரசியல் மேடை அல்ல, ஆகவே அதைப் பற்றி இங்கு அதிகம் பேசத் தேவையில்லை.
ஒரு கொள்கை குடும்பத்தின் நிகழ்ச்சி!
இப்படிப்பட்ட ஓர் அற்புதமான நிகழ்ச்சியிலே, ஒரு சிறப்பான புத்தகத்தை வெளியிட்டு அருமையான கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதிலே எனக்கு ஒரு பெரிய வியப்பு என்னவென்றால், நம்முடைய எழில்வாணன் அவர்கள் இதனைச் சிறப்பாக எழுதியிருக்கிறார். அந்த நூல் வெளியீட்டு விழா பெரியார் திடலில், ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக, சிறந்த கல்வியாளர்கள், சிறந்த நாடாளுமன்றவாதிகள், விவாத மேடைகளில் சிறந்த முறையில் இயங்குபவர்கள், கருத்தாளர்கள் என அனைவரும் இணைந்த ஓர் அரங்கமாக, ஒரு கொள்கை குடும்பத்தின் நிகழ்ச்சியாக நடப்பது பெருமைக்குரியது.
நேரம் நெருக்கிக் கொண்டிருப்பதன் காரணமாக, நிறைய பேச வேண்டும் என்று எண்ணினாலும் சுருக்கிக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்கு எனக்கு முழு உரிமையும், உறவும் உண்டு; அதுதான் மிக முக்கியம். உறவு என்பது வெறும் இரத்த உறவு மட்டுமல்ல, அது கொள்கை உறவு. நம்முடைய விழாத் தலைவர் வேந்தர் அவர்கள் கூட இது குறித்து என்னிடத்திலே கேட்டார்.
ஆலடியார் அவர்கள் படித்துப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வரும்போது, நான் சென்னையிலே பி.எல். (B.L.) படித்துக் கொண்டிருந்தேன். பி.எல். படிப்பில் கூட சில மாற்றங்கள் செய்திருந்தார்கள். நான் படித்துக் கொண்டிருந்தபோது, அவர் முதலாம் ஆண்டு வகுப்பிற்கு வந்தார். அப்போதெல்லாம் சட்டக் கல்லூரிக்கு என்று தனியே விடுதி கிடையாது. சட்டக் கல்லூரியில் படிக்கிறவர்கள் அனைவரும் ஒரே கல்லூரியில்தான் படித்தார்கள்.
நானே அதன் மூலம் பயனடைந்தவன்!
அப்போது சட்டக் கல்லூரி எப்படி இருந்ததென்றால், தாராளமாக இடம் கொடுப்பார்கள். எதற்கும் விண்ணப்பித்து எங்கும் இடம் கிடைக்காதவர்கள், இறுதியாகச் சேருமிடம் சட்டக் கல்லூரிதான் என்கிற நிலை இருந்தது. அதுமட்டுமல்ல, சேர்ந்தவர்கள் எல்லோரும் வகுப்பிற்குச் சென்றுதான் படித்தார்கள் என்று சொல்ல முடியாது. அங்கு ‘பிராக்டிஸ்’ (Practice) என்பதைத் தான் அதிகமாகக் கற்றுக்கொள்ள முடியும். நானே அதன் மூலம் பயனடைந்தவன் என்பதுதான் மிக முக்கியமானது.
தந்தை பெரியார் அவர்கள் என்னைத் தனியாக அழைத்து ஒரு முக்கியப் பொறுப்பை ஒப்படைத்தார். அது 1958 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம். அப்போது நான் சட்டக் கல்லூரியில் (F.L.) சேர்ந்திருந்த காலம். திருச்சியில் பெரியார் அவர்கள் மீது ஒரு வழக்கு நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கிற்காக ஒவ்வொரு முறையும் நான் அவருடனேயே செல்வேன்.
இயக்கப் பிரச்சாரங்களையும், அமைப்புப் பணிகளையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றார் தந்தை பெரியார்!
அந்த வழக்கில் அய்யா அவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்ட னைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதால், அவர் ஆறு மாதம் சிறையில் இருக்க வேண்டியிருந்தது. அப்போது அய்யா என்னை அழைத்து, ‘நான் ஆறு மாதம் சிறைக்குச் செல்லத் தயாராகிவிட்டேன்; இது குறித்த அறிக்கையையும் எழுதிவிட்டேன். நான் இல்லாத நேரத்தில் அன்னை மணியம்மையார் அவர்களுடன் இருந்து இயக்கப் பிரச்சாரங்களையும், மற்ற அமைப்புப் பணிகளையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.
என்னுடைய நண்பர் சாமிதுரை!
நான் அப்போதுதான் சட்டக் கல்லூரியில் சேர்ந்திருந்ததால், எனக்குப் படிப்பு ஒருபுறம், அன்னை மணியம்மையாருடன் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் மறுபுறம் என ஒரு பெரிய பொறுப்பு காத்திருந்தது. ஆனால், அப்போதிருந்த சட்டக் கல்லூரி விதிமுறைகள் எனக்குச் சாதகமாக இருந்தன (இப்போது அந்த விதிகள் மாறிவிட்டன). அந்தச் சமயத்தில் எனக்கு உதவியாக இருந்தவர் என்னுடைய நண்பர் சாமிதுரை அவர்கள்.
அவர் மிக முக்கியமானவராக இருப்பார். என்னு டைய நண்பர்கள் அனைவரும் பிராட்வேயில் உள்ள ‘யுனிவர்சிட்டி ஸ்டூடண்ட்ஸ் கிளப்’பில்தான் இருப்பார்கள்; பழையவர்களுக்கு அது நன்றாகத் தெரியும். தே.ராஜமன்னார் முதல் அனைவரும் அங்கிருந்துதான் சட்டக் கல்லூரியில் (Law College) படித்தார்கள். அதுமட்டுமல்லாமல், பெரும்பாலான சட்டக் கல்லூரி மாணவர்கள் அங்கேயே தங்கிப் படிப்பார்கள். அங்கே இடம் கிடைக்கவில்லை என்றால் வெங்கடேஸ்வரா அல்லது ஒய்.எம்.சி.ஏ-வில் (YMCA) சேருவார்கள். இப்படித்தான் நடைமுறை இருந்தது.
நான் அங்கே சென்று கொண்டிருந்தபோதுதான் இந்தச் சூழல் ஏற்பட்டது. ‘‘அய்யா அழைப்பின்படி நான் போக வேண்டியிருக்கிறதே…’’ என்று கேட்டபோது, ‘‘நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் அய்யாவோடும், அம்மாவோடும் சுற்றுப்பயணத்திற்குச் செல்லுங்கள்’ என்று கூறி, எனக்கு முழுமையான வருகைப் பதிவைக் (Attendance) கொடுத்துவிட்டார்கள்.
அதனால், பேராசிரியர் வார்டன் அவர்கள் வருகைப் பதிவேட்டில் சாமிதுரை பெயரை அழைக்கும்போதும் ‘எஸ் சார்’ (Yes Sir) என்றும், வீரமணி பெயரை அழைக்கும்போதும் ‘எஸ் சார்’ என்றும் கூறி (நண்பர்கள் எனக்காக) பதிலளிப்பார்கள். இறுதியாக நாங்கள் படிப்பை முடித்துச் சான்றிதழ் வாங்கும் காலக்கட்டத்தில், பி.எல். (B.L.) வகுப்பில் நம்முடைய தோழர் ஆலடியார் போன்றவர்கள் அங்கிருந்து வந்தார்கள்.
திராவிட இயக்கம் என்றவுடனேயே…
எங்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டவுடனேயே, திராவிட இயக்கம் என்றவுடனேயே, அவர் எங்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். இதற்கு இடையில் ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது.
எங்களுடைய விடுதிக் காப்பாளர் (Hostel Warden) சட்டக் கல்லூரிப் பேராசிரியர் ராஜாராமன் என்பவர். அவருடைய தந்தை குன்னிராமன் ஒரு நீதிபதியாக இருந்தவர்; அவர் கேரளத்தைச் சேர்ந்தவர். அந்த ராஜாராமன் என்பவர்தான் எங்களுக்கு ‘Contract Law’ வகுப்புகளையும் எடுப்பார். நான் படிப்பை முடித்துச் சான்றிதழ் வாங்கச் செல்லும் வரை அவர்தான் அங்கு இருந்தார்.
அப்போது நடந்த அந்த வேடிக்கையான சம்பவம் இதுதான்: அவர் ஒருமுறை வந்து என்னிடம் பெயர் கேட்டார். ‘‘May I know what is your name?’’ என்றார். நான், ‘வீரமணி சார்’ என்றேன். அதற்கு அவர், ‘‘No, you are not Veeramani… That is somebody! Call him’’ என்றார். காரணம், என்னுடன் வந்த நண்பர் ஒருவர் எனக்குப் பதிலாகத் தொடர்ந்து ‘Attendance’ (வருகைப் பதிவு) கொடுத்து வந்ததால், அவர்தான் வீரமணி என்று பேராசிரியர் நினைத்துக் கொண்டிருந்தார்.
நம்முடைய கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் யார் யார் என்று…
அத்தகைய சூழலில், நாங்கள் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தோம். சொல்லப்போனால்,
எஃப்.எல். (FL) –இல் ஒருமுறை தோல்வியுற்று (Fail), பிறகு தேர்ச்சி பெற்று (Pass) வந்தோம். இரண்டாம் ஆண்டு வந்தவு டனேயே, நம்முடைய கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் யார் யார் இருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தோம்.
(தொடரும்)
